
பதினொரு மணிக்குத்தான் வங்கிக்கு வரமுடிந்தது சங்கரனால். முதலில் வில்லை தரும் எந்திரத்தின் பச்சைப் பொத்தானை அமுக்கி தனக்குரிய தாள் வில்லையை எடுத்து அதன் எண்ணைப் பார்த்தான் 155 என்றிருந்தது. ஒருமுறை வங்கியின் உள்ளே காத்திருப்போரையும் பார்த்தான். எப்படியும் இரண்டு மணியாகிவிடும் எனக் கணக்கிட்டான். அமைதியாகப் போய் உட்காருவதற்கு இருக்கையைத் தேடினான். ஐந்து வரிசைகளாகப் போடப்பட்டிருந்த இருக்கையில் கடைசியில் சுவற்றையொட்டி கடைசி இருக்கைக் காலியாக இருந்தது. விறுவிறுவென்று போய் அதில் உட்கார்ந்தான். அவனுக்கு இடதுபக்கம் சுவர் இருந்ததால் உறக்கம் வந்தால்கூட உறங்குவதற்கு வசதிதான் என்று எண்ணிக்கொண்டு கையிலிருந்த தாள் வில்லையை சட்டைப் பையில் உள்ளே செருகித்தள்ளினான். பின் வங்கிக் கணக்குப்புத்தகத்தை இருக்கையை விட்டு எழுந்து வலது பேண்ட் பைக்குள் செருகிக்கொண்டு மறுபடியும் அமர்ந்தான்.
பத்தாண்டுகள் போராட்டத்திற்குப் பின் அவனுக்குக் கிடைத்த நிரந்தர அரசு வேலை இது. சேர்ந்து முப்பத்தொரு நாட்கள் பணிசெய்து முடித்தபின் அவனுக்குரிய ஊதியம் அவனுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டது. முதன்முதலாக சங்கரன் உழைப்பில் விளைந்த அமுதமாய் இந்தப் பணம் இன்னும் இரண்டு மணிநேரத்திற்குள் கைக்கு வந்துவிடும். நினைக்கும்போதே உடலெங்கும் ஓர் இன்ப அதிர்வு அவனுள் படர்ந்தது.
அம்மாவின் கையில் இந்தப் பணத்தைத் தரும்போது அவளின் உணர்வுகள் என்னவாயிருக்கும் என்று நினைத்துப் பார்த்தான்.
அம்மாவிற்கு எதுவும் நேராது. ஆனால் உடனே கண்களிலிருந்து நீர் பெருகியோடும் கன்னங்களில் நதியாய். அந்த நதிவெள்ளத்தில் அவளது உணர்வுகள் நீந்திக் களிக்கும். சங்கரனை வாரியணைத்துக்கொள்வாள். சாமியறைக்குள் அழைத்துப்போய் அப்பாவின் புகைப்படத்தின் முன் பணத்தை வைத்து அதன்மீது சிறிது திருநீற்றைத் தூவிவிட்டு பின் அப்பா முன்னிலையில் இவன் நெற்றியில் திருநீற்றையும் குங்குமத்தையும் மகமாயி.. எம்புள்ளய பாத்துக்க என்பாள். அவளின் அதிகபட்ச நடவடிக்கை இதுதான். தனக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்து அம்மா இப்படித்தான். அவள் அதிகம் உணர்ச்சிவசப்பட்டுப் பார்த்ததில்லை. கைநாட்டுதான். படிக்கவும் எழுதவும் அறியாத முனியாண்டவர் கோயிலில் வணங்கிவிட்டு பொடிநடையாக நடக்கும் ஓர் கிராமத்தில் பிறந்தவள். நிரம்பவும் நிதானமிக்கவள்.
அப்பா அறுபதுரூபாய் சம்பளத்தில் அம்மாவைப் பதின்மூன்று வயதில் கைப்பிடித்தவர். அப்பா இன்னொரு வகையில் நிதானம் மிக்கவர். அதிகம் பேசமாட்டார். ஆனால் அவருக்கு அவரின் பிள்ளைகளைத் தவிர யாரையும் அறியமாட்டார். சங்கரனோடு கூடப்பிறந்தவர்கள் முன்னே ஒரு சகோதரியும் பின்னே ஒரு சகோதரனும். சகோதரி இறந்துபோய்விட்டாள் அம்மை போட்டு. சகோதரன் படித்துக்கொண்டிருக்கிறான். இடையில் பிறந்த சங்கரன் ஓரளவுக்குப் பட்டப்படிப்பை முடித்தான். அவனுக்கு வேலைக்கான முதல் விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் அப்பாதான் எழுதிக்கொடுத்து விளக்கமளித்து அஞ்சல் அனுப்பவைத்தார்.
சங்கரா.. இந்த உலகத்துல யாருக்குமே அவங்க நினைக்கிற வேலையும்
வாழ்க்கையும் கிடைக்கறதில்லே.. ஆனா அதை முயற்சியால அடையலாம்.
அது முன்னே கிடைக்கறதும் பின்னே தள்ளிக் கிடைக்கறதும் அவங்கஅவங்க
முயற்சியாலயும் திறமையாலயும் இருக்கு. இத புரிஞ்சுக்கோ..
நான் என்னப்பா பண்ணணும்? என்றான் சங்கரன் நேரடியாக.
நீ என்னவாகணும்னு மனசுக்குள்ள வச்சுக்க. அத நோக்கிப்போறத
நான் சொல்றேன். வெறும் பட்டப்படிப்பு உதவாது. கூடவே டைப்
ரைட்டிங் கத்துக்கோ. தமிழும் ஆங்கிலமும் இரண்டும். அதுக்குப்
பின்னால கூடவே சுருக்கெழுத்து இரண்டும். முடிச்சிட்டு வேலை
வாய்ப்பு அலுவலகத்துல பதிவுப் பண்ணி வையி.. இதான் சுருக்கு வழி
வேலைக்குப் போறதுக்கு.
சங்கரன் அப்பா சொன்னதை வேத வாக்காக எடுத்துக்கொண்டான். உடனே தட்டச்சுப் பயிலகத்தில் சேர்ந்தான். காலையில் தமிழ் தட்டச்சு மாலையில் ஆங்கிலத் தட்டச்சு. ஓரே ஆண்டில் இரண்டிலும் ஹையர் தேர்ச்சிபெற்றான். அதை உடனடியாகப் பதிவு செய்தான்.அப்புறம் சுருக்கெழுத்தும் அப்படியே முடித்துப் பதிவுசெய்தான்.
பதிவு செய்தவுடன் வேலை கிடைக்கவில்லை.
மாறாக கிடைத்தது அப்பாவின் மரணம். எதிர்பாராம்ல் ஏற்பட்ட இதய வலி அவரைக் கொன்றது.
திடீரெனப் பற்றிக்கொண்ட வீட்டைப்போல அவன் குடும்பம் வேதனையில் எரிந்தது. யாரும் உதவவில்லை. உறவுகள் பற்றி அப்போதுதான் புரிய சந்தர்ப்பங்கள் வாய்த்தன.
ஒரு தனியார் நிறுவத்தில் தட்டச்சராக வேலைக்குச் சேர்ந்தான்.
இவனுடைய தகுதிகளைப் பார்த்துச் சொன்னார்கள் உனக்கு நிச்சயம் அரசு வேலை கிடைக்கும் என்று.
நம்பினான். அம்மாவிடம் வந்து சொன்னான்.
உங்கப்பா காட்டின வழி நிச்சயம் நடக்கும். தைரியமா இரு.கூடவே மகமாயி இருப்பா தொணைக்கு அவள நெனச்சிக்கோ..
அப்பாவின் திதி முடிந்து பத்து நாட்களுக்குப் பின் வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து நேர்காணலுக்குக் கடிதம் வந்தது.
இளநிலை உதவியாளர் பணிநிலை.
ஆர்வமொடு போனான். வந்திருந்தோரில் இவனுக்குத்தான் தகுதி அதிகம் சுருக்கெழுத்து கூடுதல் தகுதியாக நின்றது.
நேர்காணல் முடிந்து இருபதாம் நாள் வேலைக்கான உத்திரவு வீடு தேடி வந்தபோது அப்பா புகைப்படத்தின் முன் வைத்து கதறி அழுதான்.
அப்பா நீ இல்லியே..இத பாக்க.. ஒருவாய் சோறு என் சம்பளத்துல சாப்பிட உனக்கு முடியாம போச்சே.. அழுதான் சங்கரன்.
அப்பாவைப் போல அப்பா வாய்க்குமா இனி?
எப்படிப்பட்ட மனிதர்?
சங்கரனுக்கு நன்றாக நினைவிருக்கிறது.அப்போது அவன் 7 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். தம்பி 5 ஆம் வகுப்பு. அது ஓட்டுவீடு. மழைக்காலத்தில் ஒழுகி வெயில் காலத்தில் வெப்பப்படுத்தும் கூடவே கரப்பான் பூச்சிகளும் தேள்களும் பூரான்களும் கொட்டிப் பயமுறுத்தும் வீடு. என்றாலும் அப்பா தன் சொந்த சம்பாத்தியத்திலி வாங்கிய வீடு.
அப்பா பெரும்பான்மை ஒருக்களித்துத்தான் படுப்பார். ஆனால் வலது கையை நீட்டித் தலையணையாக்கியிருப்பார். அதில் அவரின் அக்குளுக்குள் முகம் புதைத்து முதலில தம்பியும் அப்புறம் சங்கரனும் படுத்திருப்பார்கள். விடியும் கைவலி பொறுத்து பிள்ளைகளுக்காக கையைத் தலையாக்கியிருப்பார்.
அப்படி படுத்துறங்கிய நாளில்தான் ஒரு கருந்தேள் அப்பாவின் தலையணைக் கையின் ஒரு விரலில் கொட்டிவிட்டது. வலியின் உச்சத்தில் உணர்ந்துகொண்ட அப்பா பிள்ளைகள் படுத்திருப்பதை எண்ணி அப்படியே அந்த வலது கையின் விரல்களால் கருந்தேளை அப்படியே அமுக்கிக்கொண்டு சங்கரனைப் பிடித்து ஒரு தள்ளு தள்ளினார். அப்போது தேள் கொட்ட ஆரம்பித்தது மறுபடியும். மறுபடியும் சங்கரணைத் தள்ளிய கைகளோடு தம்பிபையும் தள்ளினார்.. மறுபடியும் தேள் கொட்டல்.. இருவரையும் தள்ளிவிட்டு தேளை அமுக்கிய கையை எடுக்காமலும் அம்மாவை அழைத்து சீக்கிரம் லைட்டை போடு என்று கத்தினார்.
அம்மா எழுந்து போட தேள் கொட்டிக்கொண்டேயிருக்கிறது.
என்னங்க ஆச்சு?
முதல்ல பிள்ளைகளை அப்புறப்படுத்து.. தேள் கொட்டிக்கிட்டிருக்கு என்றார் வலியோடு.
அம்மா சங்கரனையும் தம்பியையும் எழுப்பி அப்புறப்படுத்த அப்பா எழுந்து பின் அந்தக் கையை எடுக்க தேள் நகர முடியவில்லை. அதை அடிக்காமல் ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து தேள் எடுக்கும் கரண்டியால் தேளைப் பிடித்து அந்த நீர்ப் பாத்திரத்தில் போட்டு வெளியே போய் உள்ளே வரும்போது அப்பா மயக்கமாகியிருந்தார். அதன்பின் மருத்துவமனையில் அப்பா இருந்து வெளிவர ஒரு வாரமானது.
அப்பாவை நினைக்க நினைக்கப் பெருமையாக இருந்தது சங்கரனுக்கு.
வலங்கைமான் பாடை கட்டித் திருவிழாவுக்கு காவிரியாற்றைக் கடந்துபோகையில் சுடுமணலில் அப்பா வெற்றுக்கால்களுடன் சங்கரனையும் தம்பியையும் ஒவ்வொரு தோளில் தூக்கிக்கொண்டு நடந்தது.
நீச்சல் கற்றுத்தந்தது.
வாரத்திற்கொருநாள் ராமய்யர் கடையில் அப்பா வாங்கித்தரும் ரவா தோசை சிவப்பு சட்டினி சின்னவெங்காயம் மிதக்கும் சாம்பார்..
அப்பா அப்பாதான்.
ஆனால் இத்தனை செய்த அப்பாவுக்கு சங்கரன் காசில் தின்னு கிடக்கக் கொடுத்துவைக்கவில்லை.
எண்ணங்களைக் கலைத்து பார்த்தான். ஒலிக்கும் வங்கிப் பலகையில் வில்லை எண் 153 என்றிருந்தது. இன்னும் ஒரு வில்லைதான் .
இவன் முறை வந்ததும் எழுந்துபோய் வில்லை, வங்கிக்கணக்கு, பணம் பெறுவதற்கான ரசீது எல்லாவற்றையும் கொடுத்தான்.
பணத்தைக் கொடுக்க வாங்கிக்கொண்டான்.
அப்படியே வாங்கி மோந்து பார்த்தான். பணம் வாசனையாக இருந்தது.
நிதானமாக அங்கேயே நின்று எண்ணிப் பார்த்தான்.
என்ன தம்பி சரியா இருக்கா? கேஷியர் கேட்டார்.
சரியா இருக்கு சார்.
நானும் எண்ணி மெஷினும் எண்ணிக் கொடுத்திருக்கோம். தள்ளி நின்னு எண்ணக்கூடாதா?அப்படியே நின்னுக்கிட்ட. சரி போ தம்பி.
நகர்ந்து வந்து. பணத்தை அப்படியே இடது கைப் பேண்ட் பையில் வைத்துக்கொண்டான்.
நல்லாயிருடா தம்பி.. பாத்து செலவு பண்ணு என்று அப்பா வந்து முன்நின்று சொல்லுவதுபோல உணர்ந்தான். பணத்தைவிட மனிதர்கள் முக்கியம் என்று அப்பா அடிக்கடி சொல்வார்.
ஏம்பா?
பணத்தை சம்பாதித்துவிடலாம் மனிதர்களை சம்பாதிக்க முடியாதுப்பா சங்கரா. என்பார்.
பணம் இல்லாட்டி எவம்பா மதிப்பான்? பணந்தானே இன்னிக்கு எல்லாத்தையும் நடத்துது.
பணம் தேவைதான். அது எல்லை கடந்து தேவையில்லை. எல்லை கடந்து மனிதர்களும் மதிப்புமே வாழ்வின் பொருள். அடுத்தவங்களுக்கு உதவு. ஆனா கடைசிவரை வெளியே சொல்லாத.. இதுக்குத்தான் இந்த பணமெல்லாம் உதவணும். நாம சம்பாதிக்கணும்பா. நம்ப தேவைகளைச் சுருக்கிக்கலாம். ஆடம்பரம் என்னிக்கும் வாழ்க்கை ஆகாது சங்கரா…
சரிப்பா.
எத்தனையோ பேசியிருக்கிறார் அப்பா. ஆனால் இன்று பக்கத்தில் இருந்து இப்படி செலவு செய் என்று சொல்ல இல்லை. சாலையில் அப்படியே நின்று அழுதான் சங்கரன். பின் கண்களைத் துடைத்துக்கொண்டு தன்னையறியாமல் சரிப்பா என்றபடி குளிர்ந்த வங்கிக் கதவைத் திறந்து வெளியே வந்ததுபோல. வாய்யா வா என்றழைப்பதுபோல ஒரு வெப்பம் குப்பென்று வந்து அவன் உடம்புமேல் படர.. சுட்டது. அந்த வெம்மை சற்று தாங்க முடியாததாய் இருந்தது சங்கரனுக்கு.
வங்கியை விட்டுவெளியே வரும்போது எதிரில் வெங்கடேசன் ஓடி வருவது தெரிந்தது. இவனுடைய நெருங்கிய நண்பன்.
டேய்.. சங்கரா.. என்ன காப்பாத்துடா என்றபடி அப்படியே கதறினான்.
என்னடா வெங்கட்? விஷயத்த சொல்லு.. யாருக்கு என்ன?
எங்கப்பா செத்துப்போவப் போறாருடா.. காப்பாத்துடா..
என்னடா ஆச்சு?
இன்னிக்கு காலையிலேர்ந்து ஆரம்பிச்சுட்டாருடா.. ஓவராயிடிச்சி.. ரத்த வாந்தி.. உடனே தூக்கிட்டுப்போனோம். முடியாதுன்னுட்டாங்க. ஒரு ஆபரேசன் பண்ணணுமாம்.. பண்ணினா பாக்கலாங்கறாங்க.. பணம் நிறைய கேக்குறாங்கடா.. நான் எங்கடா போவேன்? எங்கம்மா தாலியறுக்கறத என்னால பாக்கமுடியாதுடா.. நானும் ஏதாவது செஞ்சுக்கிட்டு செத்துப்போயிடுவேன்டா..
கொஞ்சம் அமைதியா இருடா வெங்கட். சங்கரன் கதறித்துடிக்கும் நண்பனைப் பார்த்தான்.
வெங்கடடேசனின் அப்பா ஹோட்டலில் வேலை பார்க்கிறார். குடும்பத்திற்கு எதுவும் செய்யமாட்டார். தினமும் குடிக்காமல் இருக்கமாட்டார்.
எங்காவது யாராவது தகவல் சொல்வார்கள்.
சங்கரனும் வெங்கடேசனும் ஓடுவார்கள்.
பேருந்து ஓடும் நடுச்சாலையில்.. சாக்கடையோரத்தில்.. பொதுக் கழிவறைக்குப் பக்கத்தில்.. நாய்கள் மோந்துக்கிடக்கக் குப்பைத் தொட்டியருகில்.
என் புள்ளங்கள கரை சேக்கரவைக்கும் இருக்கணும். நான் சுமங்கலியா இருக்கணும். அப்பறம் தேவையில்லை. வெங்கடேஷின் அம்மா வேதனையாகச் சொல்வாள். மூன்று பெண்பிள்ளைகள் இரண்டு ஆண்பிள்ளைகள்.
சங்கரா ஏதாச்சும் பணம் இருந்தா கொடுடா. எப்படியும் கடனா நினைச்சு அடச்சுடுவேண்டா. எங்கப்பாவைக் காப்பாத்தணுண்டா..
சரி எழுந்திரு. விடு. இந்தா என்றபடி இடது பையிலிருந்து சம்பளப் பணத்தை அப்படியே எண்ணாமல் கொடுத்தான்.
எடுத்திட்டுப்போ சீக்கிரம்.
வெங்கடேசன் எடுத்துக்கொண்டு ஓடினான். அவன் ஓடுகிற திசையையே பார்த்தான்.
பேருந்தில் ஏறி அப்படியே பாரதி பூங்கா அருகில் இறங்கி உள்ளே போனான் சங்கரன். உள்ளேநிழல் விழுந்த ஒரு மரத்தின் கீழ் இருந்த பெஞ்சில் அப்படியே படுத்துக்கொண்டான்.
மாலை வந்ததும் எழுந்து அப்படியே நடந்துபோய் வீடு வந்தான்.
அவன் தோற்றத்தைக் கண்டதும் சங்கரன் அம்மா அதிர்ந்துபோனாள். என்னப்பா ஆச்ச?
அழுதான் அவளிடம்.
என்னப்பா ஆச்சு?
என் சம்பளப் பணத்தை விட்டுட்டேம்மா..
அம்மா அவனைப் பார்த்தாள். என்ன நடந்துச்சுப்பா?
பணத்தை பாங்குலேர்ந்து எடுத்து பர்சுல வச்சி பேண்ட் பாக்கட்டுல வச்சிருந்தேன். பஸ்ல உக்காந்ததும் லேசா தூக்கம் வந்துச்சி. தூங்கிட்டேன். அப்பறம் எழுந்து பஸ்ஸை விட்டு இறங்கி எதேச்சையா பாக்கறப்ப பர்சு இல்லம்மா. பஸ்ல விழுந்துருக்கும்னு ஓடிப்போய் டிப்போ வரைக்கும் தேடிப் பாத்துட்டேன். போயிடிச்சும்மா என்னோட முத சம்பளம். அழுதான்.
அழுகின்ற மகனைப் பார்த்தாள்.
சரி விடு.. எவனோ ஒருத்தனுக்கு அது சந்தோஷத்தத் தரப்போவுது.. கவனமா இரு. இந்த ஒருமாதம்சம்பளம் இல்ல.. டிரெயினிங்னு நெனச்சுக்கோ.. எல்லாம் நன்மைக்குத்தான்.
பசிக்குதும்மா என்றான் சங்கரன்.
போய் முகம் கழுவிட்டு வா.. விளக்கேத்துறேன்.. சாமி கும்பிட்டுட்டு சாப்பிடலாம்.
விளக்கேற்றினாள். சங்கரன்அப்பா புகைப்படத்தின் முன் நின்று அவன் அம்மா சொன்னாள்
உங்களை மாதிரியே நம்ப புள்ளங்க.. உருவத்துல மட்டும் இல்ல மனசுலேயும் உங்கள மாதிரிதான்.. அவன் பணத்தை தொலைக்கலங்க.. தொலைச்ச மனசு பதறல் எனக்குப் புரியுங்க.. ஏதோ நல்லதுக்கு அந்தப் பணம் போயிருக்கு. எனக்கு நிம்மதிதாங்க.. சந்தோஷம்தாங்க..
பத்தி ஏற்றினாள். வாசனை கமழ்ந்து வந்தது.
முனைவர் க. அன்பழகன் (ஹரணி)
31 பூக்குளம் புது நகர்
கரந்தை,தஞ்சாவூர்.

அந்த அம்மாவின் மனசு சிலிர்க்க வைத்தது.