
நினைவுகொள்ள எண்ண
இருக்கிறது இந்தப்பக்கங்களில்…
தினப்பொழுதுகளைப் போற்றி
வரைவதற்கான…
சிறப்புகள்
இந்த ஆண்டு எதாவது இருக்கிறதா…
இறந்தவர்களுக்கான..
அஞ்சலிகள்தான் நிரம்பியிருக்கிறது…
துயரங்களை ஆற்றிக்கொள்வதற்கான…
அத்தனை தத்துவங்களையும் வெற்றுப்
பக்கங்களில் எழுதி நிரப்பியாகிவிட்டது…
வேறென்ன
செய்ய…
வாய்மூடி வாழ்ந்தகாலம்…இதுபோல்
இன்னொன்று வரவேண்டுமாயென்ன…
போதுமடா சாமி..
உறவுகள் அந்நியமாகவும்…
அந்நியங்கள் உறவுகளாகவும்…
தீவுபோல் வாழ்ந்தகாலம்…
திரும்பிவராமல் போகட்டும்…
எழுத ஒன்றுமில்லாமல் எழுதிய
கவிதைகள்கூட உரப்பில்லாமல்..
பக்கங்களை நிரப்பியபடிதான்
இருக்கிறது…
இருந்துவிட்டுப்போகட்டும்…
துயரங்களால் அவை நிரம்பிவிடவேண்டாம்…
வரும் ஆண்டுக்கான தீர்மானம்
என்னவென்றால்நாட்குறிப்பு
எதுவும் நான் எழுதப்போவதில்லை
என்பதுதான்…
அதிலொன்றும் சமூகநட்டமில்லை.
எழுதியவைமட்டும் இலக்கியமாய்
மிளிரப்போகிறதாயென்ன…?
♦
