
இதுவரை 500 கவிதைகளை எழுதி விட்டேன்...
1975 ஆண்டிலிருந்து கவிதை எழுதி வருகிறேன். அழகியசிங்கர் என்ற கவிதைத் தொகுப்பைச் செப்டம்பர் 2021 கொண்டு வந்துள்ளேன்.
1975 லிருந்து 2021 வரை இத் தொகுப்பில் சேர்ந்துள்ள கவிதைகளின் மொத்த எண்ணிக்கை 400.
இப்போது 100 கவிதைகள் கொண்ட தொகுப்பை வெற்றிடம் எதற்கு? என்ற தலைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளேன். இது இந்த புத்தகக் காட்சியை ஒட்டி, கொண்டு வந்த முதல் புத்தகம்.
ஆக மொத்தம் 500 கவிதைகள் இதுவரை கொண்டு வந்துள்ளேன். ஆரம்பத்தில் எனக்குக் கவிதை எழுதத் துணையாக இருந்தவர் வள்ளலார்தான். அவருடைய திருவருட்பா வரிகள் துணையாக இருந்தன.
'கவிதையை எழுதும் தருணத்திலேயே மற்றவர்களின் கவிதைகளை வாசிக்கும் வழக்கமும் என்னிடம் மிகுந்திருந்தது. கவிதைகளை வாசிக்க வாசிக்கக் கவிதை வாசிப்பதும், அதை உணர்வதும் அற்புதமான ஒன்றாக எனக்குத் தோன்றியது. பாரதி குறிப்பிட்டபடி எளிமையான வரி அமைப்புடன் கூடிய கவிதை என்னாலும் எழுத முடிந்தது. சின்ன அலைபோல் உணர்வையும், எளிதான கருத்தையும் கவிதை மூலம் தெரிவிக்க முடிந்தது. நான் எழுத வேண்டுமென்று நினைக்கும்போது, கவிதை தானாகவே வந்து விழும். பெரும்பாலும் எழுதி முடித்த பிறகு கவிதை ஞாபகத்தில் இருப்பதில்லை.
என் கவிதை ஒன்றை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

காற்று அரக்கன்
மழை பெய்து
ஓய்ந்ததால்
பக்கத்து வீடு
காணாமல் போய்விட்டது
அந்த வீட்டில்
இருப்பவர்கள்
திசை மாறிப் போய்விட்டார்கள்
காற்று அரக்கன்
நேற்று எங்களை விட்டுவைத்தான்
சாதாரண நிலைக்கு வர
இன்னும் சில நாட்கள் பிடிக்கும்
நடனம் முடிந்து விட்டது
புத்தகக் காட்சியில் இந்தக் கவிதைத் தொகுப்புடன் சந்திக்கலாம்.
