லாவண்யா சத்யநாதன்

உடல் பிளந்த
உயிர் தவித்த
வலி மறந்து
தாய் சேயை
முத்தமிடுகிறாளே, எப்படி?
ஒரு தாமரைபோல
சிசுவை
தாதி கையில் தருகிறாள்.
கல்முகமும்
குறுநகை பூக்கிறதே, எப்படி?
தேநீர் கடைமுன்
வாலாட்டும் தெருநாய்க்கு
வர்க்கி வாங்கிப் போடத் தோன்றுகிறதே, ஏன்?
எண்ணக்கிளை ஒன்றைப் பற்றியே
இன்னொன்றை விடும் குரங்கு
ஒருகணம்
இறைவன் சன்னதியில்
நிச்சலனமாகிறதே, எப்படி?
சின்ன விஷயங்கள்தான்.
விடை தெரியவில்லை.
இருந்தும் இல்லாததுபோல்
மகிழ்ந்தால்
மணியடித்ததும்
பள்ளிச் சிறைவிட்டு
பறக்கும் பையலாய் மகிழ்வேன்ழ
சினந்தால்
கையூட்டுத் தந்தும்
காரியம் தோற்றவன்போல்
நரசிங்கனாவேன்.
தளர்ந்தால்
காலைப் பனியில் டிம்மிபோல்
சுருண்டு கொள்வேன்.
அந்த நான் இப்போதில்லை.
அந்த நாட்களும் இப்போதில்லை.
எதிலும் சுவாரசியமில்லை.
இருந்தும் இல்லாததுபோல்
இருக்கிறேன்.
மனத்துயரை மாதங்கியிடம் சொன்னேன்.
அவ்வளவுதான் வாழ்க்கை.
நீ துக்கப்பட்டு பயனில்லை.
அறுபதில் இருபதுபோல் ஆட்டம் போட முடியாது.
போகிற வழிக்குப் புண்ணியம் தேடென்றாள்.
போய்விட்டேன்.
