முதுமை என்னும் தனிமை!/ஜெ.பாஸ்கரன்

முதுமை எல்லோருக்கும் இனிமையாய் அமைந்துவிடுவதில்லை. உற்றார் உறவினர் என எல்லோராலும் கைவிடப்பட்ட நிலை ஒருபுறம்; முதுமையின் தளர்ச்சியும், நோயும் பாயுடன் முடக்கிவிட, ஆதரவு தேடும் கையறு நிலை ஒருபுறம் என முதுமையில் வாழ்க்கையை நொந்துகொள்ளும் முதியவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது.
2023 ஆம் வருடத் துவக்கத்திலேயே, நண்பனின் தூரத்து உறவினர் ஒருவருக்கு இடைவிடாத இருமல் என அவர் வாழுகின்ற முதியோர் இல்லத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. முன்னமேயே அவருக்கு மறதியுடன், மனோநிலை பாதித்த அளவில் ‘டிமென்ஷியா’ உண்டு.

குரோம்பேட்டை நியூ காலனியில் உள்ள ‘சங்கரா முதியோர் இல்லம்’ (Sankara Aged Care Centre) சென்றோம். வாசலில் ஓர் ஆம்புலன்ஸ் நின்று கொண்டிருந்தது. வலது பக்கம் ஒரு சிறிய பிள்ளையார் கோயில், எண்ணை விளக்கு எரிந்துகொண்டிருந்தது. இடது பக்கம் உறுமிக்கொண்டிருந்த ஜெனெரேட்டரைக் கடந்து, வீல் சேர் செல்ல வசதியாக அமைக்கப்பட்டிருந்த ‘சறுக்குப் பாதையில்’ (ramp) மெதுவாக ஏறிச் சென்றோம். ஓர் ஓரத்தில் சாப்பாட்டுக் கேரியர்களை ஒரு பெண்மணி கழுவிக்கொண்டிருந்தார். முதல் மாடியில் வலது பக்க அறையில் சமையலுக்கான மளிகைச் சாமான்கள் வைக்கப்பட்டிருந்தன. அதைத் தாண்டி சில அலுவலக அறைகளும், முதியோர் தங்கியிருக்கும் அறைகளும் இருந்தன.


நண்பனின் உறவினர், அமர்ந்துகொண்டிருந்தார். நண்பனையோ, என்னையோ அவருக்கு நினைவில் இல்லை. இருவரையும் ஒரு வெற்றுப் பார்வை பார்த்தபடி இருந்தார். ஒருமுறை வித்தியாசமான சப்தத்துடன் இருமினார் – குழந்தைகள் கக்குவான் இருமலில் ஒருமாதிரி இழுத்தவாறு இருமுவார்கள், அதுபோல இருமினார். அவரைக் கவனித்துக்கொண்டிருந்த நர்சிங் அசிஸ்டெண்ட் ஒரு சார்ட்டைக் காண்பித்தார். அதில் எல்லா விபரங்களும் நேரப்படி குறிப்பிடப் பட்டிருந்தன. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, மருந்துகள் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். சில கேள்விகள் கேட்டேன், பதிலில்லை. மருந்துக்குக்கூட அவர் சிரிக்கவில்லை!
சங்கர மடத்துக்குச் சொந்தமான இந்த இடத்தில் ஒரு மருத்துவமனை இயங்கி வந்ததாகவும், போதிய வசதிகளும் ஆதரவுமில்லாததால், முதியோர் இல்லமாக மாற்றி விட்டதாகவும் அந்த இல்லத்தின் நிர்வாக அதிகாரி திருமதி கீதா மூர்த்தி கூறினார். குரோம்பேட்டை மெயின் ஜிஎஸ்டி ரோடிலிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் இருக்கிறது இந்த இல்லம். ஒரு கிமீ சுற்றளவில், ஏராளமான தனியார் மருத்துவ மனைகள், மருத்துவக் கல்லூரி, டிஸ்பென்சரிகள் வந்து விட்ட படியால், சேவை மனப்பான்மையுடன் ஒரு மருத்துவ மனையாக இயங்கமுடியவில்லை என்பதை உணரமுடிந்தது. ஆனாலும், ஆரோக்கியமான முதியவர்களுக்கான இல்லமாக மட்டும் இல்லாமல், நோய்வாய்ப்பட்டுள்ள முதியவர்களுக்கான இல்லமாகவும் இது இயங்கி வருவது சிறப்பு. நடக்க முடிந்தவர்கள், நடக்க முடியாதவர்கள் (டயப்பர் வேண்டியவர்கள்), படுத்த படுக்கையாக கிடப்பவர்கள் என ஒரு மருத்துவ மனை போலவே செயல்படுகின்றது இந்த இல்லம். மிகவும் முடியாதவர்கள் முதல் மாடியிலும் (இரண்டு பேர், மூன்று பேர், நான்கு பேர் என அறை அளவிற்கும், உடல் நிலைக்கும் ஏற்றபடி), ‘முடிந்தவர்கள்’ தரை தளத்தில் தனி அறைகள், இரண்டு பேர் கொண்ட அறைகளிலும் இருந்தார்கள். ஓரளவுக்கு சுத்தமாயும், காற்றோட்ட வசதியுடனும் இருந்தது இல்லம். எல்லா அறைகளிலும் மின் விசிறி, ‘அட்டாச்சுடு’ கழிப்பறைகள் என வசதியாக இருந்தன.
24 மணிநேரமும் ANM நர்சுகள் கவனித்துக் கொள்கின்றனர். மருந்துகள் கொடுப்பது, படுக்கையிலேயே உணவு கொடுப்பது, டயப்பர் மாற்றுவது என எல்லாவற்றையும் கவனித்துச் செய்கிறார்கள். தினமும் காலை ஒரு மருத்துவர் வந்து எல்லோரையும் பார்த்துச் செல்கிறார். எமர்ஜென்சி என்றால், கூப்பிட்டவுடன் வருகிறார். தேவைக்கேற்றபடி, அருகிலுள்ள மருத்துவ மனைகளில் சேர்த்தும் சிகிச்சை அளிக்கபடுகிறது என்றார் கீதா. மூன்று ஷிஃப்ட் வேலை செய்யும் செவிலியர்கள் பாராட்டுக்குரியவர்கள். விசிட்டிங் டாக்டருக்கு வயது 70க்கும் மேலே. அவரது தூரத்துச் சொந்தம் ஒருவரும் இங்கு தங்கியிருக்கிறார் என்று கீதா சொன்னபோது, வியப்பாக இருந்தது.
காலை 6 மணிக்குக் காப்பி/டீ, 8 மணிக்கு டிபன், 10 மணிக்கு பால்/காப்பி, 12.30 மணிக்கு மதிய உணவு, 3.30 மணிக்கு டீ, இரவு 7 மணிக்கு டின்னர், ஒரு கப் பால்! விசேஷ நாட்களிலும், ஸ்பான்சர் நாட்களிலும், ஸ்பெஷலாக, பாயசம், வடை, அப்பளம் போன்றவை கூடுதலாக வழங்கப்படுகின்றன.
நடக்க முடிந்தவர்கள் காமன் ஹாலில் டிவி பார்க்கலாம். சில அறைகளிலும் டி.வி உள்ளன. மாதத்தில் சில நாட்களில், நாம சங்கீர்த்தனம், பஜனைகள் நடத்தப்படுகின்றன. இவை தவிர, ஒரு லைப்ரரியும் இருக்கின்றது. பொது சவுண்ட் சிஸ்டம் மூலம் நடக்க முடியாதவர்களுக்கு அவர்கள் அறையிலேயே பஜனைப் பாடல்களைக் கேட்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேல் மாடியில், தனியாக சமையலறையும், உடைகள், பெட்ஷீட்டுகள் போன்றவற்றை துவைக்க, தனித்தனியாக வாஷிங் மெஷின்களும் உள்ளன. நாங்கள் சென்ற நேரம், கட்டில்கள், பீரோக்கள், சின்ன அலமாரிகள் போன்றவற்றிற்குப் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார்கள். ஆர்வோ குடிநீர் வசதியும் செய்துள்ளார்கள்!
இங்கேயே இறந்துவிடும் சில முதியவர்களுக்கு, ஈமக்கிரியைகளும் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார் கீதா. பெரிய சேவை அது என்றால் மிகையில்லை. வாசலில் எப்போதும் தயார் நிலையில் ஒரு ஆம்புலன்ஸ் நின்று கொண்டிருக்கிறது.
எல்லா வசதிகளும் செய்து கொடுத்தாலும், தன் குழந்தைகளுடன் இல்லையே என்ற ஏக்கத்தையும், துக்கத்தையும் தவிர்க்க முடியாதென்றே தோன்றுகின்றது. தன் பென்ஷன் பணத்தைக் கொடுத்துவிட்டு, என்னை இறுதி வரையில் வைத்துக்கொள்ளுங்கள் என்று இந்த இடத்தை நேசிப்பவர்களும் இங்கு உண்டு. முதியவர்களுடன் ‘செட்’ ஆகாத பிள்ளைகள், மகள், மருமகள்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தியானம் செய்துகொண்டிருந்தார் ஒருவர்! இரண்டு பாட்டிகள் மலர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார்கள் – பஜனைப் பாடல்கள் சொல்லிக்கொடுப்பார்களாம். முதல் நாள் வைகுண்ட ஏகாதசிக்கும், மறுநாள் கிருத்திகைக்கும் தொடர்ந்து விரதமிருக்கும் பாட்டியும், படுத்தபடியே எங்களைப் பார்த்து வணக்கம் சொன்ன பாட்டியும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்கள்!
Sri Jeyendra Saraswathi Swamigal Diamond Jubilee Educational and Health Trust மூலம் நடத்தப்பட்டு வரும் இந்த முதியோர் இல்லம் வித்தியாசமாக, நோய்வாய்ப்பட்டவர்களையும் கவனித்துக் கொள்கிறது என்பது போற்றத்தக்கது!
அன்னதானம் (ஒரு நாளைக்கு டிபன் 1500/- மதிய உணவு 3000/- முழு நாள் உணவும் 5000/-), நன்கொடை அளிப்பவர்களுக்கு U/S 80G வரி விலக்கும் உண்டு என்பது கூடுதல் தகவல்.
அபர்ணா வர்மாவின் “Love and Respect Old Age People, Because you are ageing too….” என்ற வாக்கியம் நினைவிற்கொள்ளத்தக்கது!

One Comment on “முதுமை என்னும் தனிமை!/ஜெ.பாஸ்கரன்”

Comments are closed.