வண்ணதாசன் கவிதை

எப்போதும் ஒரு
மடக்குக் குடை வைத்திருக்கிறேன்.
திடீர் மழையில் நீங்கள் நனைந்தால்
அதை விரித்துக்கொடுக்கிறேன்.
என்னிடம் ஒரு மாயமரம் உண்டு.
ஒரு குறிப்பிட்ட இடத்தின்
பச்சை வெட்டுப்படும்போது
தவிக்கும் பறவைகளுக்கு
அது கிளை நீட்டுகிறது.
என்னிடம் ஒரு
கரும்பலகை உண்டு.
பைத்தியக்காரர்கள் தங்கள் கனவுகளை எழுத
அதைக் கொடுத்துவிடுகிறேன்.
என்னிடம் எப்போதும் ஒரு
மிட்டாய்க்காரன் உண்டு.
பள்ளிக்கூடத்திற்கு அழுதபடி வரும்
பிள்ளைகளின் மணிக்கட்டில்
சவ்வுக்கடிகாரம் கட்டிவிடுவான்.
என்னிடம் ஒரு கடவுள் உண்டு.
ஒரு பிரயோஜனமும் இல்லாமல்
அவன் தான் திரிகிறான்
ஊரைச் சுற்றிக்கொண்டு
ஊதாரியாக.

  • வண்ணதாசன்