
வயசு என்னவோ எழுபதுக்கும் மேலாகிவிட்டது
ஒரு கண் ஏதோ யாருக்கோ செய்த பாவத்துக்காகப்
பொட்டையாகிப் போய் விட்டது. ஆனால் டாக்டர்
அதிகமாகப் படித்ததினால்தான் என்கிறார்
படிக்காமல் இருந்துவிடத் தெரியவில்லையே
என்று வருந்த வேண்டியதாக இருக்கிறது
மற்ற கண்ணை நியாயமான சதை மறைக்கிறது,
கீழே விழுந்து சூத்தாமட்டையில் அடிபட்டுத்
தடி ஊன்றிக் கொண்டு நடக்க வேண்டிய
தாக இருக்கிறது. பற்களில் பாதிக்கும் மேல்
பூச்சி வைத்து அரித்து விட்டது. மறு பாதி வேறு
ஏதோ காரணம் கூறுகிறது. வேறு சில பற்கள்
எதையாவது கடிக்கும் போது நொறுங்கிக்
கலந்து வயிற்றுக்குள் போய் விடுகின்றன.
எப்போதுமே காதுகள் சரியாகக் கேட்டதில்லை
சங்கீதமும் தெரியாது கேட்கவும் தெரியாது
இப்போது யாராவது ஏதாவது சொன்னால்
என்ன ஏது என்று இரண்டாம் தடவை
கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டிய
தாக இருக்கிறது. எனினும் ஏதாவது நல்ல
புத்தகம் என்றால் படிக்க வேண்டும் என்கிற
சபலம் தட்டுகிறது. நல்ல இனிப்புப் பண்டம்
என்றால் தேடிப் போய் வயிறு பின்னர் வலித்தாலும்
சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது.
யாராவது அழகான பெண் தெருவோடு போனால்
தூரத்திலிருந்தேனும் பார்க்க வேண்டும் என்று
தோன்றுகிறது. இந்தச் சபலங்கள் ஏன்?
வாழ்க்கைக் கணக்கு ஒரு வழியாக முடிந்து
விட்டது என்று சொல்ல ஏன் மனம்
வரமாட்டேனென்கிறது. சபலம் ஒன்று
தான் இன்று மிச்சமாக இருக்கிறது.

அப்பட்டமான எழுத்துக்கள்.