பலே பிச்சைக்காரர்கள்/நாகேந்திர பாரதி

‘பாவம் பிச்சைக்காரங்க , ஒரு ரூபாய்க் காசுக்காக கையேந்தி எவ்வளவு கஷ்டப்படுறாங்க ‘ என்று பரிதாபப் படுபவர்கள் தயவு செய்து அவர்கள் கருத்தை மாற்றிக் கொள்வது உத்தமம்.

எங்கே அவர்களிடம் ஒரு ரூபாய் பிச்சை போட்டுப் பாருங்கள் . உங்கள் முகத்திலேயே கோபத்தோடு தூக்கி எறிந்து விடுவார்கள். ஐந்து ரூபாய்க்குக் குறைந்து பிச்சை வாங்குவது இல்லை என்பது அவர்களது தொழில் தர்மம். நாம் நைசாக நமக்கு உபயோகப்படாத ஒரு ரூபாய் நாணயத்தை அவர்களிடம் தள்ளி விட முடியாது. நம்மை விட, நாட்டின் பொருளாதாரம், பண வீக்கம் போன்றவற்றைத் தெளிவாக அறிந்தவர்கள் அவர்கள்.

அவர்கள் போட்டிருக்கும் அழுக்குத் துணியைப் பார்த்தும் பரிதாபப் பட்டு விட வேண்டாம். சில கம்பெனிகளில் கோட்டு சூட்டு டை என்பது எப்படி கண்டிப்பாக அணிந்து வர வேண்டுமோ , அது போன்று அவர்களின் பிச்சைக்காரத் தொழில் உடை அது . அதை அவர்கள் பெருமையோடு அணிந்து உள்ளார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்கள் ரோடு ரோடாக அலைந்து கொண்டிருப்பதைப் பார்த்தும் அனுதாபப் பட்டு விட வேண்டாம். அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்காக அவர்களே தேர்ந்தெடுத்துக் கொண்ட ஆரோக்கிய வாக்கிங் அது . நாம் போவதில்லையா காலையில் வாக்கிங். ஆனால் அவர்கள் நம்மைப் போல் இல்லாமல் மிகவும் சிரத்தையாக , பிச்சை நிச்சயம் கிடைக்கும் என்று ஆராய்ந்து கண்ட இடங்களுக்கு வாக்கிங் மேற்கொள்ளுவார்கள். அதனால் தான் அவர்களில் பெரும்பாலானோர் ஒல்லியான உடல் அமைப்போடு இருப்பார்கள்.

சில குண்டான பிச்சைக்காரர்களை நீங்கள் பார்த்திருந்தால் அவர்கள் போலிப் பிச்சைக்காரர்கள் அல்லது புதுப் பிச்சைக்காரர்கள் என்று நிச்சயம் செய்து கொள்ளலாம். நீங்கள் தரும் ஒரு ரூபாய் பிச்சையைக் கூட வாங்கிக் கொள்ளும் தன்மானம் இல்லாதவர்களாக இருப்பார்கள். அதில் இருந்தே நீங்கள் அவர்களை இனம் கண்டு கொண்டு அந்தக் குண்டர்களை நீங்கள் ஒதுக்கி விடலாம். ஆனால் நீங்கள் உங்களால் செலவு செய்ய முடியாத அந்த ஒரு ரூபாயை அவர்களிடம் தள்ளி விட நினைத்தால் நீங்களும் துரோகிகள் என்று அடையாளம் காட்டப் படுவீர்கள். எச்சரிக்கை .

அடுத்து நீங்கள் ரெயிலில் பிச்சை எடுப்பவர்களைப் பார்த்து பரிதாபப் படுவதும் அனாவசியம். அவர்கள் தங்கள் பெரியப்பாவையோ , சின்னம்மாவையோ வேறு ஊரில் சென்று பார்க்க இலவசப் பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்போதும் தங்கள் தொழிலையும் விட்டு விடாமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்ற அவர்களின் தொழில் பக்தியைப் புரிந்து கொள்ளுங்கள். வீக்கெண்டில் ஏதோ அவசர வேலைக்காக நம்மை ஆபீஸ் வரச் சொல்லும் மேனேஜரிடம் நாம் என்னென்ன பொய்க் காரணங்கள் சொல்லித் தப்பிக்கிறோம். நமக்கு அவர்களின் தொழில் பக்தி புரியாதுதான்.

மற்றும் கூட்டமான எல்லா இடங்களிலும் அவர்கள் இருப்பார்கள் என்று தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள். தியேட்டர் வாசலில் அவர்களைப் பார்த்திருக்கிறீர்களா , இல்லை , அவர்களுக்குத் தெரியும் , பெற்றோர் காசில், ஆயிரக்கணக்கில் செலவு செய்து நடிகர் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும் ரசிகர்கள், தங்களுக்கு ஐந்து ரூபாய் கூட தர்மம் செய்ய மாட்டார்கள் என்று.

ஆனால், கோயில், சர்ச் , மசூதி வாசலில் பாருங்கள். கூட்டம் கூட்டமாக இருப்பார்கள். சிலர் குடும்பத்தை , பிரித்து அனுப்பி வைத்து விடுவதும் உண்டு. உண்மையான மத நல்லிணக்கம் இவர்களிடம் தான் உள்ளது. அது தவிர , மனிதன் எங்கு மிகவும் இரக்க சுபாவம் நிறைந்து இருப்பான் என்ற சைக்காலஜி தெரிந்தவர்கள் அவர்கள். அந்த இரக்க சுபாவத்தின் காரணங்களைப் பற்றி அவர்கள் ஆராய்ச்சி செய்வது கிடையாது. அதை ஆராய கவிஞர்களும் , சிறுகதை எழுத்தாளர்களும் இருக்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். தங்களுக்குத் தேவை இல்லாத விஷயங்களில் அவர்கள் குழப்பிக் கொள்ளாமல் இருப்பதால் தான் , அவர்கள் பொண்டு பிள்ளைகளோடு நீண்ட நாட்கள் வாழ்கிறார்கள்.

‘ உட்கார்ந்த இடத்திலேயே சம்பாதிக்கிறான் ‘ என்று அலுவலகம் செல்லும் நம்மைப் பற்றி நமது பெற்றோர் பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும் உண்மையிலே அந்தப் பாராட்டுக்கு முழுத்தகுதி உடையவர்கள் பிச்சைக்காரர்களே என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்றே நம்புகிறேன். அது தவிர அவர்கள் யாரிடமும் கை கட்டி வேலை செய்யாமல், தன் கையே தனக்குதவி என்று உட்கார்ந்தோ , நின்றோ தம் கடமையைச் செய்யும் சுய தொழில் முனைவர்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். .

எனவே , இனிமேலும் அவர்களைப் ‘பாவம் பிச்சைக்காரர்கள் ‘ என்று சொல்லி பரிதாபப் படாமல் ‘ பலே பிச்சைக்காரர்கள் ‘ என்று சொல்லிப் பாராட்டப் பழகிக் கொள்வோம்.