
இன்று மா.வே சிவகுமார் என்பவரின் வரலாற்றை படிக்கநேர்ந்தது.
மா.வே சிவகுமார் ஒரு வங்கி ஊழியர். வங்கியில் வேலை செய்தபடி கதை எழுதுகிறார். கதைகளை படித்த ஜெயகாந்தன் இவரை சிஷ்யராக சேர்த்துக்கொள்கிறார். நாயகன் விமர்சனம் எழுதுகையில் “150 படங்களில் நடித்தபின் இப்பதான் கமலஹாசன் நடிக்க கற்றுக்கொன்டு இருக்கிறார்” என எழுதுகிறார். அதை படித்த கமலஹாசன் இவரை கூப்பிட்டு பேசிவிட்டு தன் அசிஸ்டென்ட ஆக சேர்த்துக்கொள்கிறார்.
வங்கியில் வேலைசெய்தபடியே சினிமாவிலும் இயங்குகிறார். தேவர்மகன் வரை கமலுடன் பணியாற்றுகிறார். சிவாஜியுடன் அறிமுகம் ஆகிறார். சிவாஜிக்கு இவர் மேல் நல்ல மதிப்பு. அதை எல்லாம் நம்பி “உங்கள் ஜூனியர்” என்ற சொந்தப்படம் எடுத்து தானே ஹீரோவாக நடிக்கிறார். சொந்தப்படம் எடுக்கவேண்டாம் என கமல் பலமுறை சொல்லியும் கேட்கவில்லை.
அதன்பின் சொந்தபடம் எடுப்பவர்களுக்கு என்னென்ன ஆகுமோ அது எல்லாம் இவருக்கும் நடந்தது. பணம் இல்லை. கந்துவட்டிக்கு பணம் வாங்கி, வங்கி வேலையை விட்டு நின்று வி.ஆர்.எஸ் வாங்கி, வீட்டை விற்று எல்லாம் படத்தை எடுத்து படம் பெட்டிக்குள் முடங்கியது.
இத்தனை திறமை இருந்தும் தன்னை யாரும் அங்கீகரிக்கவில்லை எனும் ஆதங்கத்தில் படம் எடுக்க தேசிய திரைப்பட கழகத்திடம் அனுமதி கேட்டு சாகும் வரை உண்னாவிரதம் இருக்கிறார். அதன்பின் 2016ம் ஆண்டில் தன் 50களில் மரணம் அடைகிறார்.
தொழில், குடும்பம் இரண்டும் ஸ்டேபிளாக இருந்தால் மீதமுள்ள நேரத்தில் (கைகாசை செலவு செய்யாமல்..இது ரொம்ப முக்கியம்) கதை, கவிதை, சினிமான்னு எதையும் செய்யலாம்.
ஆனால் எல்லாமே ஒரு எல்லை வரை மட்டுமே. அந்த எல்லையை தாண்டுகையில் யோசிக்கணும். நடிகர் விவேக் கூட அரசு வேலையை விட்டுட்டு சினிமாவுக்கு வந்தவர்தான். அன்று அவருக்கு அது ஒரு டெசிசன் பாயிண்ட். Crossing the Rubicon என்பது போல ரிவர்ஸ் செய்யவே முடியாத முடிவு அது. அந்த குழப்பத்தில் சினிமாவை நம்பி அரசு வேலையை விடலாமா, வேண்டாமா என யோசித்து பஞ்சு அருணாச்சலத்திடம் போய் பேசுகிறார். அவர் “உன் ஒரு வருட சம்பளத்தை ஒரு படத்தில் சம்பளமா வாங்கலாம். தைரியமா இறங்கு” என்றார். அதன்பின்னரே விவேக் வேலையை விட்டார்.
ஆனால் விவேக் கூட சொந்தபடம் எடுக்க வரலை. நடிக்கமட்டுமே வந்தார். நடிக்க கடன் வாங்கும் அவசியம் இல்லை. அவரது மார்க்கட்டும் அப்ப நல்லா இருந்தது.
என்னதான் கனவுத்துறை, கலைத்துறை என்றாலும் அதுவும் ஒரு தொழில்தான்…தொழிலை லாஜிக்காக மட்டுமே பார்க்கணும். கனவாக மட்டுமே அணுகினால் கஸ்டம் தான்.
~
