கதை சொல்லிகள்/தங்கேஸ்

ஓடும் நதியிலிருந்து கரையில் குதிக்க துடித்துக் கொண்டிருக்கும்  

 கெண்டை மீனுக்கு 

சாந்த சொருபியாய் 

காட்சியளித்துக்கொண்டிருக்கிறது

கரையிலிருக்கும்  வெண்நாரை

வெள்ளைத் தேவதையின்

கலையும் பிம்பங்களை

 யாருக்கும்  தெரியாமல் 

புரட்டிக் கொண்டே போகிறது

 கதை சொல்லும் நதி

வளமையான  கதை சொல்லிக்கு

நாரையைப் போல மீனும் 

ஒரு புனைவு தானேயன்றி

வேறொன்றுமில்லை

தூண்டிலை சிலுவையாக்கும்

கரங்கள் மட்டும்

அதன் புனைவுக்குள்

ஏனோ எப்போதும் வருவதேயில்லை

கடலில் கலக்கும் எண்ணிலா பாத்திரங்கள் பற்றியும்

பாதியில் கரையில் ஒதுங்கும்

 அதிர்ஷ்டமற்ற பாத்திரங்கள் பற்றியும் கூட 

கதை சொல்லிகள் பெரிதாக கவலைப் படுவதில்லை

தன்னைப் போல எத்தனை எத்தனை

 கதை சொல்லிகள்

இந்தக்  கடலுக்குள் சத்தமின்றி அமிழ்ந்து கிடக்கிறார்கள்

என்பதும்  அவர்கள்  அறியாததில்லை

One Comment on “கதை சொல்லிகள்/தங்கேஸ்”

Comments are closed.