
காலச்சக்கரத்தின்
பின்னே
என்நினைவுச் சங்கிலி
ஓடுகிறது
பயந்து,அழுது ஓட்டிய
ஒவ்வொரு முறையும் பொறுமையோடு
கற்றுத்தந்த பாங்கு
ஒருமுறைகூட என்னிடத்தில்
உன்வயது
முதிர்ந்த காலத்தில்
எட்டிப் பார்க்கவில்லை
உன்னை மிதித்து ஓட்டி பெருவிரலில் கசிந்த
குருதியின் கருணை பிசுபிசுத்துக் கிடக்கிறது
மூலையில் கிடக்கும் மிதிவண்டியில்
பொங்கலன்று
தூசி துடைத்து
எண்ணெயிட்டுக் கொண்டிருக்கிறேன்
மிதிவண்டி
முழுவதும்
அப்பாவின் தேய்ந்த பாதங்கள்
அதில்
என் உடல்
