பரணில் சில பழைய நினைவுகள்/முருகு

பொங்கல் விடுமுறையில்
பொழுதெப்படிக் கழிப்பது?

போகி அன்றே கவலை…
புலர்ந்து விட்டது காலையுடன்!

ஓய்வின்றி ஒரு நாளும்…
தோல் நோயர் குறை தீர…

உழைத்தே பழகிய
உடலும் மனமும்

ஓய்ந்திருக்க ஒப்புமா?
யோசனையில் ஆழ்ந்திருந்தேன்…

இருப்புக் கொள்ளாமல் தவிப்பதை…
இல்லத்தரசி புரிந்து கொண்டு…

“முப்பது வருஷ மூட்டை முடிச்சு
மூணு நாள்ல சுத்தம் பண்ணு”

என்று பழையன கழிய…
ஏற்றி விட்டாள் பரணில்!

ஒரு வேலை கிட்டிய உற்சாகத்தில்
ஒவ்வொன்றாய்ப் பிரித்தால்…

அத்தனையும் பொக்கிஷங்கள்…
அந்த நாள் ஞாபகங்கள்…

அன்று வரைந்த ஓவியக் கோடுகள்…
அழைத்துச் செல்கின்றன என்னை…

கால எந்திரத்தில் ஏற்றி…
கல்லூரிப் பருவத்துக்கு!

இன்று ஒன்று இருப்பதையும்,
என்னையும் மறந்த என்னை…

“பரண்லயே தூங்கிட்டியா” அவள்
பதறிய குரல் தட்டி எழுப்பியது…

“கண்ணெல்லாம் என்ன
கலங்கியிருக்கு?” என்கிறாள்

“தூசி” என்று போலியாய்த்
தும்மல் ஒன்று போட்டு

நினைவுத் தூசிகளால்
நெகிழ்ந்த விழி துடைக்கிறேன்…