அக்கம் பக்கம்! /ஆர்க்கே!

கயிறு இழுக்கும் போட்டியெனில்
கட்டிய ரிப்பனின்
எதிர்முனையில் அணிவகுக்கிறார்கள்.

கவிதை எழுதி வைத்தால்
ரசனைப் பார்வையுறாமல்
விமர்சனப் பார்வை கொள்கிறார்கள்.

திருட்டோ கற்பழிப்போ வழிப்பறியோ
நம்பிக்கைத் துரோகமோ அவமரியாதை நிகழ்வோ
அவைகளில் ஏதேனும்
என் மீதான குற்றச்சாட்டெனில்
பொறுப்பாய் அமைதி காத்து
என் எதிர்கொள்ளலை
ஆவலாய் எதிர் நோக்குகிறார்கள்.

நான் வீழ்ந்துவிடும் நேரங்களில்
கவனமாய் வேறுதிசையில்
அவசர வேலை வைத்துக் கொள்கிறார்கள்.

புலியென்னைத் துரத்தினால்
புலியின் பசி குறித்தே
விசனப்படுகிறார்கள்.

காலத்தின் கயிற்றசைவில்
அவர்களுக்கும்
எனக்குமான
சம்பவங்களின்
நிகழ்வுமுற்று வெளியேற்றத்தில்
தம்மிடத்து தடங்களை
அழித்தோ மாற்றியோ
தம் திசைப்பகுதி நோக்கியோ
லாவகமாய் திருப்பி வைத்து விடுகிறார்கள்.

தன்முனைப்பேதுமில்லா
பிரயத்தனங்களில்
நான் கைக்கொண்ட மௌனத்தை
களப்பலி ஆக்குகிறார்கள்.

எல்லாவித நியாய தர்ம தராசுகளில்
அவர்கள் தரப்புத் தட்டு
தாழ்வதையே
உள் விருப்பாக்குகிறார்கள்.

எனக்கும் அவர்களுக்குமான
வாழ்நிலை தொகுப்புகளில்
என் குறித்த
சலனமாற்றங்களை மட்டும்
மிக ஞாபகமாய்
பிறருடன் அமைந்துவிடுவதாகவே
வடிவமைத்து வைக்கிறார்கள்!
———- அன்புடன் ஆர்க்கே!