துருக்கியரின் தூக்கணாங்குருவி/பாலஸ்தீனக் கவி மகமது தர்வீஷி


__
பாலஸ்தீனக் கவி மகமது தர்வீஷின் “நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்?’ தொகுப்பிலிருந்து-ஆங்கிலத்தில்: முகமது ஷாஹீன்

தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

எனது குதிரை ஆகாயத்தோடு ஒத்திசைந்து செல்வது
நான் மதியத்தில் என்ன நடக்கும் என கனவு கண்டிருக்கிறேன்
துருக்கியர் எனக்குக் கீழேயும், ஆகாயத்திற்குக் கீழேயும் சவாரி செய்வார்கள்
தாங்கள் எழுப்பும் கூடாரங்களைத் தாண்டி எதையும் கனவு காணாமல்
எதிர்வரும் குளிர்காலத்தின் வீச்சுகளில் நம் ஆடுகளுக்கு என்ன ஆகும் என்று எதுவும் தெரிந்திராமல்
எனது குதிரை மாலை நேரத்தோடு ஒத்திசைந்து செல்வது
துருக்கியர் தங்கள் பெயர்களைக் கிராமங்களின் கூரைகளில் உள்நுழைப்பார்கள், தூக்கணாங்குருவிகளைப் போல
தங்கள் சோளக்கொல்லைகளில் பாதுகாப்பாய் அயர்ந்து உறங்குவார்கள்
அவர்கள் மதியத்தில் என்ன நடக்கும் என கனவு காண மாட்டார்கள்
ஆகாயம், மெதுவே, மெதுவே
மாலை நேரத்தில் தங்கள் மக்களுக்கே திரும்பிவரும்போது
*
எங்களுக்கு ஒரு கனவு இருக்கிறது: காற்று ஒரு நண்பனைப் போல வீசி, அரேபிய காஃபியின் நறுமணத்தை கோடைகாலத்தையும், அந்நியர்களையும் சூழ்ந்திருக்கும் மலைகளுக்கு எடுத்துச் செல்லுமென…
*
நானே என்னுடைய கனவு. பூமி குறுகிவிடும்போது நான் அதை தூக்கணாங்குருவியின் இறகால் அகலமாக்கி, நான் அதனுடனே கூடுதலாய் வளர்ந்தேன். நானே என்னுடைய கனவு…
மக்கள் திரள்களில் இருக்கையில் நான் என்னைப் பற்றிய எண்ணங்களால் நிரம்பியிருக்கிறேன்,
கேள்விகளாலும்,
இரண்டு கால்களால் நடக்கும் நட்சத்திரங்களைப் பற்றிய கேள்விகளாலும், அவற்றில் ஒன்று நான் காதலிப்பது
என்னுடைய நாடுகடத்தப்பட்ட வாழ்க்கையிலும் ஜெரூசலத்திற்குச் செல்ல, புனித யாத்தரீகர்களுக்கு வழிகள் இருக்கின்றன


  • கற்களிலிருந்து இறகுகள் போல பறித்தெடுக்கப்பட்ட சொற்கள்,
    எத்தனை தீர்க்கதரிசிகள் நகரத்திற்குத் தேவை
    அது தன் தந்தையின் பெரைப் பாதுகாக்க,
    “ போரிலல்ல நான் கீழே விழுந்தது’ என வருத்தமுற.
    ஓவ்வொருவரிடத்தும் ஆகாயம் எவ்வளவு தூரம் மாற்றமடைகிறது
    அதன் சிவப்பு சால்வை அனைவரையும் வியப்பில் ஆழ்த்த?
    ஓ என் கனவே, அவ்வாறு எங்களை உற்றுப் பார்க்காதே
    தியாகிகளில் கடைசி ஆளாக இருக்காதே!
    *
    வண்ணத்துப்பூச்சியின் தெளிவைப் பார்க்கும்போது என் கனவுக்காக நான் பயப்படுகிறேன்
    மல்பெரி பழங்களின் கறையை சிணுங்கும் குதிரையின் மீது பார்க்கும்போதும்
    அதற்காக நான் பயப்படுக்கிறேன்
    மத்தியத்தரைக்கடல் கரையைக் கடந்து கடவுளர்களைத் தேடி வரும்
    தந்தையையும் மகனையும் நினைத்து
    அவர்களுக்கு முன்னால் தங்கத்தைத் தேடிச்சென்றவர்களையும் நினைத்து
    என் கனவுக்காக என் கைகளை நினைத்து பயப்படுக்கிறேன்
    என் தோளின் மேல் பாடுவதற்காகக் காத்து நின்றிருக்கும்
    ஒரு நட்சத்திரத்தை நினைத்தும்
    *
    பழைமையான இரவுகளின் மக்களாகிய எங்களுக்கு
    நிலவின் லயத்தில் ஏறுவதற்கு
    எங்களுக்கென சம்பிரதாயங்கள் இருக்கின்றன
    நாங்கள் எங்கள் கனவுகள் உண்மையானவை என நம்புகிறோம்
    பொய்யைப் பகல்களுக்குக் கொடுக்கிறோம்
    துருக்கியர் வந்ததிலிருந்தே பகல்கள் எங்களுடன் இல்லை
    அவர்கள் இப்போது எங்களுடன் இருப்பதால்
    நாங்கள் மேலும் நகர்ந்து செல்லத் தயாராகிறோம்
    எங்கள் நாட்களை அவர்களுக்குப் பின்னே விட்டுவிட்டு.
    சீக்கிரமே நாங்கள் எங்கள் வயல்களுக்குத் திரும்பிவிடுவோம்
    நாங்கள் எங்கள் படுக்கைவிரிப்புகளிலிருந்து வெள்ளைக்கொடிகளைத்
    தயார் செய்வோம், எங்களுக்கு ஒரு கொடி கட்டாயம் தேவைப்படுமானால்
    அது வெறுமையாக இருக்கட்டும் எந்தவித ஆடம்பர சின்னங்களும் இல்லாமல்…
    நான் அமைதியாக இருப்போம்
    அந்நியர்களின் பாரவண்டிகளின் பின்னே நாம் நம்முடைய கனவுகளைப் பறக்கவிடாத பட்சத்தில்
    *
    எங்களுக்கு ஒரு கனவு இருக்கிறது
    எங்களை சுமந்து செல்லும் ஒரு கனவைக் கண்டுபிடிப்பதற்கு
    இறந்தவர்களை நட்சத்திரம் சுமந்து செல்வதைப் போல!