
முல்லா நஸ்ருதீன் காலையிலேயே தன் கழுதையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு சோகம் காத்தார். அவர் மனைவிக்கு ஏன் இந்த சோகம் என்று புரியவில்லை. சனி இரவு அவர் தத்துவம் வாசிக்காததால் ஞாயிறு பகலில் அவர் செய்த பெகெளம் உங்களுக்கும் அவர் வசிக்கும் தெருவுக்கும் தெரியும்தானே. அதனால் அவர் மனைவி நேற்றிரவு அவருடைய மேஜையில் தத்துவ நூல்களை எடுத்து அடுக்கி வைத்துவிட்டார். மேலும் முல்லா கவிதை நூல்கள் பக்கமும் போய்விடக்கூடாதே- முல்லா வரும் குட்டிக்கதைகளில் அவர் கவிதை நூல்கள் பக்கம் போனால் வாசகர்களிடமிருந்து கடும் ஆட்சேபணைகள் வருகின்றன.அவர் மனைவி எடுத்து வைத்த நூல்களில் ஃபிராண்ட்ஸ் ஃபேனானின் (Frantz Fanon) ‘கறுப்புத் தோலும் வெள்ளை முகமூடிகளும்’ நூலும் இருந்ததுதான் வினையாகிப்போய்விட்டது. இப்போதெல்லாம் யார் ஃபேனானை வாசிக்கிறார்கள்? ஃபேனான் நஸ்ருதீனின் இளமைக்கால பொக்கிஷமல்லவா? சார்த்தரின் ஏன் எழுதவேண்டும், கடப்பாடுடைய இலக்கியம், கிராம்சியின் ‘organic intellectual’ என்ற கருத்தாக்கம், ஃபேனானின் The wretched of the earth புத்தகம் இவையெல்லாம் சேர்ந்ததல்லவா அவருடைய இளமைக்காலம்? எங்கே போயிற்று அவையெல்லாம் என்று நினைத்து நஸ்ருதீனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் இரவும் சரியாகத் தூங்கவில்லை. அவர் மனைவியோ அவருடைய சோகம் ஏதோ புத்தகக்கண்காட்சி முடிந்து போனது பற்றியது என்ற அளவில் புரிந்துகொண்டு என்ன விஷயம் என்று விளக்க வற்புறுத்தினார். கடப்பாடுடைய இலக்கியம் என்பதை விளக்க முற்பட்டால் பிக் பாஸ் பார்க்கும் சமூக அங்கத்தினருக்கும் தனக்கும் விவாகரத்து ஆகிவிடும் என்று அவருக்கு அச்சமேற்பட்டதால் அவர் ஃபானனின் ‘கறுப்புத் தோலும் வெள்ளைமுகமூடிகளும்’ புத்தகத்திலிருந்து ஒரு வாசகத்தைச் சொன்னார்: “ ..இந்த உலகத்தில் ஏகப்பட்ட முட்டாள்கள் இருக்கிறார்கள். இதை நான் சொல்லிவிட்ட காரணத்தினாலேயே இதை நான் நிரூபிக்க வேண்டிய பாரத்தை சுமக்கவேண்டியவனாகி விட்டேன்.” அவர் மனைவி சற்றே யோசித்துவிட்டுச் சொன்னார்:” இந்த உலகமே புத்திசாலிகளால் நிரம்பியிருக்கிறது என்று சொல்லுங்கள். எதையும் நிரூபிக்கவேண்டிய அவசியமிருக்காது.”
