மேகமலையில் மூன்று நாட்கள்! (1).

ஜெ.பாஸ்கரன்

மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் வடகிழக்கு மூலையில், அதிக மழை பொழியும் சிரபுஞ்சி சென்றபோது, அங்கு மலைகளைத் தழுவிச்செல்லும் மேகக் கூட்டங்களைப் பார்த்து பரவசப்பட்டேன் – மேகங்களின் ஆலயம் – மேகாலயா – எனச் சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.


மூன்று வாரங்களுக்கு முன், இந்தியாவின் தென் கோடியில் தேனிக்கருகில் உள்ள மேகமலைக்குப் போன போது, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உச்சிகளில் ஒரு அழகான மேகங்களின் சரணாலயம் இருப்பதைக் காணப் போகிறேன் என்று மேகாலயாவில் இருந்தபோது நினைத்துக் கூடப் பார்க்கவில்லை! சொல்லப் போனால், இங்கு மேகங்கள் நம்மைத் தழுவிச் செல்கின்றன; எங்கும் குளுமையான பச்சை படர்ந்த தேயிலைத் தோட்டங்கள்; பெரிய மலைகளால் சூழப்பட்ட பாத்திரத்தில் சேமித்து வைத்தாற்போல் பெரிய ஏரி; தோட்டங்களைச் சுற்றிக் காட்டு மிருகங்கள் அலையும் காடுகள் என ஒர் இயற்கை எழில் கொஞ்சும் சொர்கமாக இருக்கின்றது மேகமலை!


முக்கியமாக மனிதர்களும், செயற்கையான கட்டிடங்களும், கழிவுகளும், மாசுகளும் இல்லாத சுத்தமான காற்றையும், இயற்கையையும் அனுபவிக்க முடிந்தது! காலையில் பறவைகளின் பாட்டும், அவ்வப்போது தூறும் மழையின் தாளமும், மலை முகடுகளைத் தழுவி ஆடும் வெண்பஞ்சு மேகங்களும், நிசப்தத்தினூடே காதுக்குள் சுருதி மீட்டும் தனிமையின் இனிய நாதமும் நம் ஆத்மாவைத் தரிசிக்க வைப்பதாக இருந்தன!


முதல் முறை கொரோனா அதிகரித்ததால், ட்ரிப் தட்டிப்போனது! மீண்டும் செப்டம்பர் 12 முதல்14 வரை ‘ப்ரையர் டீ எஸ்டேட்’ பங்களா கிடைக்க, நானும், கலாவும், அவள் அண்ணா மன்னியும் கிளம்பினோம் – ஏற்பாடுகள் முழுப் பொறுப்பும் வழக்கம்போல் என்னுடையது அல்ல! எல்லாம் என் மைத்துனன் பாலாஜியும், அவன் மனைவி ரோகினியும், கலாவும் பேசி திட்டமிட, சமத்துக் குழந்தையாக நான் உடன் போய்விட்டு வந்தேன்! (‘குழந்தையா’ என நக்கலடிப்பவர்களுடன் எனக்குப் பேசுவதற்கு ஒன்றும் இல்லை!).


பாண்டியன் எக்ஸ்பிரஸில் 11 ஆம் தேதி இரவு கிளம்பினோம் – மிகவும் சிரமப்பட்டு, செங்குத்தான எஸ்கலேடரில் ஊர்ந்து ஏறி, இரும்பு பாலத்தில் நடந்து, நாலாவது பிளாட்ஃபாரத்தில் கையில் சூட்கேஸ், தோள்பை சகிதம் படிகளில், ஒவ்வொரு படியாக இறங்கினோம் – வண்டி வந்து கதவுகள் திறக்கப் படாமல் இருக்க, எங்கள் கோச் இருந்த வண்டியின் கடைசீப் பகுதிக்கு சூட்கேஸ்களை உருட்டிச் சென்றோம். நான்காம் பிளாட்ஃபாரத்திற்கு, நேராக உள்ளே நுழைய அங்கு ஒரு நேர்வழி இருப்பது தெரியாமல், மேலே ஏறி இறங்கிய மேதமையை எண்ணிக் கொஞ்சம் வருந்தினோம்! செல்லில் கொஞ்சம் மேய்ந்து, எதிரே இருந்த ரயில்வே காண்டீனில் நீருடன் சமமாகக் கலக்கப்பட்ட பால் வாங்கி, நாக்கு சுடச் சுடக் குடித்தோம்!
அன்று அடித்த மொட்டையில் சந்தனம் தடவிய தலையுடன் ஒரு குழந்தை ஓட, அதன் பாட்டி கூடவே கையில் தண்ணீர் பாட்டிலுடன் ஓடிக்கொண்டிருந்தார். கதர் வேட்டி, அரைக் கைச் சட்டையுடன் கர்மவீரர் சாயலில் ஒருவர் – குழந்தையின் தாத்தா – கொஞ்சம் இடைவெளி விட்டுச் சென்றுகொண்டிருந்தார். பாண்டியனில், இரவு முழுதும் அந்தக் குழந்தை அழப்போவதையோ, அதற்கு யூடியூபில் சுசீலாவின் பழைய தாலாட்டுப் பாட்டை போட்டுத் தூங்க வைக்கப் போவதையோ, பாட்டு முடிந்தும் தூங்காததால், பாட்டி அதே பாட்டைத் தொடந்து பாடப் போவதையோ, நாங்கள் அப்போது அறிந்திருக்க நியாயமில்லை!


ஆண்டன் செகாவின் ‘நெல்லிக்காய்’ சிறுகதையைப் பாதியில் நிறுத்தி, தூங்கிவிட்டேன் – பாட்டியின் பாட்டில், குழந்தை மிரண்டு, தூங்கவில்லை – நாங்கள் தூங்கி விட்டோம்! விடியற்காலை 4.45 க்குக் கொடை ரோடு ஸ்டேஷனில் இறங்கி, முழு பிளாட்ஃபாரமும் நடந்து, வெளியே வந்தோம் – காத்திருந்த டவேராவில் (மேலே மலைப் பாதைகளுக்கு இந்த வண்டிதான் ஏற்றது என்றார், மூன்று நாளும் எங்களுடன் இருக்கப் போகும் ஐம்பது வயாதான டிரைவர் ராம்!) கிளம்பினோம். அருமையான NH 45 சாலையில் தேனி நோக்கி வழுக்கிச் சென்றது டவேரா.


காலையின் குளிர்ச்சியும், திறந்திருந்த கார் ஜன்னல் வழியே முகத்திலறையும் சில்லென்ற குளிர்க் காற்றும், கன்ணுக்கெட்டிய தூரம் வரையில் மலைகளும் பச்சை வயல்வெளிகளும் அடுத்த மூன்று நாட்களுக்கான முன்னோட்டமாக இருந்தன! சோம்பலாய், சைக்கிளில் செல்லும் முண்டாசு ஆசாமிகளும், மங்கி கேப், ஸ்வெட்டர் பாதுகாப்புடன் வேகமாய் நடக்கும் சில பெரிசுகளும், தன் காரியத்தின் கவனம் காரணமாக, சுற்றிப் படர்ந்திருக்கும் இயற்கை எழிலை ரசிப்பதாய்த் தெரியவில்லை!


ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, அங்கிருந்த ஒரு ‘கும்பகோணம் டிகிரி காப்பி’ கடையில் இறங்கினோம்….
ஜெ.பாஸ்கரன்.

Sent from my iPhone

ReplyForward