மேகமலையில் மூன்று நாட்கள்! (2)

ஜெ.பாஸ்கரன்

அதிகாலை ஆறு மணிக்கு, நின்றபடி கும்பகோணம் காபி குடித்துக்கொண்டிருந்த அந்த தம்பதியருக்கு அறுபத்தி ஐந்து வயதிருக்கலாம் (இருவருக்கும் சேர்த்து!) – டீ கிளாஸில் கும்மோணம் காப்பி! அருகிலிருந்த கட்டிடத்தில் பல் தேய்த்து, முகம் கழுவி நாங்களும் கு.கா. கிளாஸில் குடித்தோம் – பரவாயில்லை, ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது. தண்ணீர்ப் பாட்டில், கூல் ட்ரிங்க் பாட்டில் என பல வண்ணங்களில் அடுக்கி வைத்திருந்தார்கள். பிஸ்கட், சாக்கலெட், சிப்ஸ் என வெளியூரிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான நொறுக்கித் தீனிகள்! எதுவும் வாங்காமல், பயணத்தைத் தொடர்ந்தோம்..

போகும் வழியில் ஏதாவது நீர்வீழ்ச்சிகள் இருக்கின்றனவா என்ற போது, ‘சுருளிப்பட்டியில் சுருளி ஃபால்ஸ் இருக்கிறது. கொரோனாவால் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. நேற்று திறந்துவிட்டதாகக் கேள்வி’ என்றார் ராம். போய்ப் பார்க்கலாம் என்று நினைத்தோம். தேனி தாண்டி சின்னமனூரில் திரும்பி மேகமலை செல்ல வேண்டிய நாங்கள், திரும்பாமல், நேராக சுருளிப்பட்டி சென்றோம் – 45கிமீ தேனிக்குத் தெற்கில் (20 கிமீ சீன்னமனூர் தாண்டி) உள்ள பஞ்சாயத்து – அங்குள்ள சுருளி நீர்வீழ்ச்சியில் முடிந்தால் குளிக்கலாம் என்று நினைத்தோம்.

சின்னமனூரில் காலை டிபன் முடித்துக்கொள்ள நல்ல ஓட்டலைத் தேடினோம் – காலை நான்கு மணிக்கே எழுந்து விட்டதால், ஏழு மணிக்குப் பசித்தது! சினிமா தியேட்டர் எதிரில், தெருவின் திருப்பத்தில் ஆரியபவன் என்றார்கள் – எங்கள் கண்ணில் தென்படவில்லை. பின்னர் வெளியில் கொஞ்சம் மாடர்ன் டீக்கடை போலும், உள்ளே அமர்ந்து சாப்பிடும் ஓட்டலைப் போலவும் இருந்த கட்டிடத்தில் நுழைந்தோம். எதிர்பார்த்ததைவிட சுத்தமாகவும், நன்றாகவும் இருந்தது இடம். இட்லி, வடை, பொங்கல், தோசை எல்லாமே கிடைத்தன – சூடாகவும், சுவையாகவும்! தேங்காய்ச் சட்னி மட்டும் கொஞ்சம் புளித்தது; முதல் நாள் சட்னி, ஃப்ரிஜ்ஜில் வைத்ததாக இருக்கலாம் என்று கொஞ்சம் ஆராய்ச்சி செய்தோம்! காப்பியும் நன்றாகவே இருந்தது, வேறென்ன வேண்டும்? சுருளிப்பட்டி நோக்கி டவேரா விரைந்தது!

ஏழெட்டு வெளியூர் வண்டிகள் நின்று கொண்டிருந்தன. சுருளி நீர்வீழ்ச்சி நோக்கி நாங்கள் நடந்து செல்லவேண்டும், அதுவரை கார்களுக்கு அனுமதியில்லை என்று ராம் சொல்ல, நடந்தோம். மண்சாலை, இரு புறமும் நடைபாதைக் கடைகள். பெரிய ஆலமரம், விழுதுகள் தரையை இன்னும் தொடவில்லை, வேரின் பலத்திலேயே கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. விழுதினைப் பிடித்துக்கொண்டு ஆட வேண்டும்போலத் தோன்றியது – மரத்தில் வேறு குரங்குகள் இருந்ததால் ஆசை காணாமல் போனது! ஏழெட்டு ஆடுகள் சிறிதும் கவலையின்றி பாலத்தினைக் கடந்து, எதிர்ப்பக்கக் கைப்பிடிச் சுவற்றில் முதுகைத் தேய்த்துக் கொண்டன.

பூஜை சாமான்கள், வளையல்கள், விளையாட்டுச் சாமான்கள், பலூன், குளிக்கத் துண்டுகள், அகல் விளக்குகள் எல்லாம், நம் ஊர் திருவிழாக் காலங்களில் விற்கப்படும் கடைகளைப் போல, அங்கே விற்கப்படுகின்றன. சுள்ளிகள், மரக் கட்டைகள் எரியும் அடுப்புகளின் மேல் குழிப்பணியாரத் தட்டுகளில் போண்டாக்கள் எண்ணைக் குமிழிகளுடன் வெந்து கொண்டிருந்தன. பெரிய சிற்றுண்டி கடையில் குறுந்தாடியுடன் ஒருவர் வெங்காயம் வெட்டிக்கொண்டிருந்தார். முன் பக்கத்து செங்கல் அடுப்பில் பெரிய அலுமினிய இட்லிப் பானையும், அருகில் சிறிய அலுமினியப் பாத்திரத்தில் சாம்பாரும் தயாராகிக் கொண்டிருந்தன! எங்கேயும் ‘கேஸ்’ அடுப்புகளே தென்படவில்லை! இவ்வளவும் விற்பனையாகிவிடுமா என்ற கவலை என்னைத் தொற்றிக்கொண்டது – கடைக்காரருக்கே அந்தக் கவலை இருக்குமாவென்று தெரியவில்லை!

பகத்சிங் ஸ்டைலில் தொப்பியுடன் இருந்த காக்கி யூனிஃபர்ம், பூட்டிய கதவுக்குப் பின்னால் நின்றுகொண்டு, ‘அருவிக்குப் போக அனுமதி இன்னும் வழங்கவில்லை’ என்று தட்டையான குரலில் சொன்னார் – வருத்தமுடன், திரும்பினோம்.

மேகமலையில் உற்பத்தியாகும் சுருளி ஆற்றின் ஒரு பகுதிதான் சுருளி நீர்வீழ்ச்சி. 190 அடி உயரம் – இரண்டு பகுதிகளாக விழுகின்றது. மலையிலிருந்து விழும் அருவி நீர், மருத்துவ குணங்களைக் கொண்டது. சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த சுருளி நீர்வீழ்ச்சி என்றெல்லாம் கூகிளில் படித்ததை, நேரில் காண முடியாமல் செய்துவிட்ட கொரோனாவை என்ன சொல்லித் திட்ட?

ஆனாலும் இந்தக் கார்களும், மக்கள் கூட்டமும் இங்கு ஏன்? நம்மைப் போலவே ஏமாற்றமடைந்தவர்களா? இல்லை. அருகேயிருந்த ‘சுருளி வேலப்பர்’ கோயிலுக்குத் தன் குழந்தைகளுக்கு முடியிறக்கவும், நேர்த்திக் கடன் செலுத்தவும் வந்த பக்தர்கள்! தூரத்தில் கூரையடியில் மொட்டை, அருகே ஓடையில் குளியல், வேலப்பர் தரிசனம் என்று மக்கள் சென்றுகொண்டிருந்தார்கள்!

நீலக் கலர் போர்டில், வெள்ளை எழுத்துக்களில் ‘இந்து சமய அறநிலையத்துறை – அருள்மிகு சுருளி வேலப்பர் திருக்கோவில் , சுருளிமலை’ என்று எழுதியிருந்தது:

“முப்பது முக்கோடி தேவர்கள், நாற்பத்தென்னாயிரம் ரிஷிகள், பதினெட்டு சித்தர்கள் தவம் புரிந்த இடம். இத்திருக்கோவில் ‘ஓம்’ என்ற வடிவில் அமைந்துள்ளது. (ஓம் பிரணவம்). இங்கு தண்ணீரில் 48 நாட்களில் இரும்பும் கல்லாகும் அதிசயம். விபூதிக்குகை, மெளனகுரு ஆசிரமம், கைலாச குகை, கன்னிமார்த் திருக்கோவில்” – அருகே குங்குமம் இடப்பட்டுள்ள மஞ்சள் வேல் படம். படித்தபடியே நடந்தோம்.

அன்று பறித்த புதிய கொய்யாப் பழங்கள் (கிலோ 30 ரூபாய்தான்) வாங்கிக் கொண்டு, சின்னமனூர் திரும்பினோம்.

எங்ளைப் போலவே சிலரும் சுருளி நீர்வீழ்ச்சி பார்க்க வந்து, ஏமாற்றம் அடைந்ததை, வரும் வழியில் ராம் சொன்னார். மனம் கொஞ்சம் ஆறுதல் அடைந்தது – நாம் உலகில் தனியாக இல்லைதானே!

Sent from my iPhone

ReplyForward