
தன்னுடைய படைப்புகளைத் தொகுத்து 40 தொகுதிகளாக வெளியிடும் தீராத ஆர்வத்தில் பாரதி நண்பர்களிடம் உதவி கேட்டு கடிதங்கள் எழுதினார். மண்ணெண்ணெய், தீக்குச்சிப் போல் தன் புத்தகங்கள் எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்க வேண்டும் என்ற கனவு பாரதிக்கு இருந்தது.
தமிழர்கள் பேராதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் பாரதி மணியார்டர்களுக்காக தினம் காத்திருந்தார். மணியார்டருக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் இடையே ஒரு துயரக் கண்ணி, நூற்றாண்டாகத் தொடர்ந்து வருகிறது. நம்பிக்கையைத் தரும் மணியார்டர்கள் ஒருநாளும் அவர்களுக்கு வந்ததில்லை. வாழ்நாளில் அழகும் நேர்த்தியும் நிரம்பிய புத்தகங்களை அச்சடிக்க விரும்பிய பாரதிக்கு, அவரின் வாழ்நாளில் அவர் விரும்பிய வண்ணம் ஒரு புத்தகம்கூட வெளியிட வாய்க்கவில்லை.
பாரதி தன்னுடைய சுய வரலாற்றை ‘சின்ன சங்கரன் கதை’ என்ற பெயரில் முக்கால் பகுதி எழுதி வைத்திருந்தார். புதுவையில் அவர் வீட்டில் இருந்த கையெழுத்துப் பிரதி காணாமல் போனது பேரிழப்பே. ஆழ்வார்களின் நாலாயிரம் திவ்விய பிரபந்தத்தைப் போல் ‘பாரதி ஆறாயிரம்’ எழுத எண்ணியிருந்தார். பாரதி அறுபத்தாறுடன் நின்று போனது.
ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வரவேண்டும் என்பது பாரதியின் பெரு விருப்பம். புதுவையின் கடற்கரையில் வந்து நிற்கும் கப்பல்களை ஆர்வமுடன் பார்க்கும் பாரதி, அருகில் இருக்கும் நண்பர்களிடம் ஐரோப்பிய பயண விருப்பத்தைச் சொல்லி ஆதங்கப்படுவாராம்.
பேரன்பின் அற்புதம்
தாகூர் நோபல் பரிசு வாங்கியதும், மேனாட்டில் அவருக்குப் பேரும் புகழும் உண்டாவதை நினைத்து, பாரதிக்கு மனவருத்தம். தாகூருக்குக் கிடைக்கிறதே என்பதல்ல. தன் கவிதைகள் தாகூரின் கவிதைகளைவிட மேம்பட்டவை, ஆனால் தமிழ்நாட்டு மக்கள் பாராமுகமாக இருக்கிறார்களே என்ற வேதனை.
சிறுவயதில் தாயைப் பறிகொடுத்து வளர்ந்த பாரதிக்கு வாழ்நாள் முழுக்கவே ஏமாற்றங்களும், தோல்விகளும்தான். தனிப்பட்ட வாழ்வின் துயரங்களை மீறி, பாரதியின் கவிதைகள் பேரொளியின் அழகும், பேரன்பின் அற்புதமும் நிரம்பியவை. தான் வாடகை வீட்டில் குடியிருந்தாலும், பிரபஞ்சம் தன் காலடியில் இருக்கிறது என்ற நம்பிக்கையே பாரதி. பாரதியின் கவிதைகள் தொடாத பாடுபொருள் இல்லை. முயற்சிக்காத புதிய சொல்முறை இல்லை. முக்காலத்தையும் தன் கவிதைகளில் பிரதிபலித்த பாரதி ‘தமிழின் அடையாளம்’.
யானை அடித்து, உடல்நலன் சரியான பிறகு, பாரதியார் ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒரு கூட்டத்தில் பேசுவதற்காகச் செல்கிறார். பாரதி கடைசியாக கலந்துகொண்ட கூட்டம் அதுதான். அக்கூட்டத்தில் பாரதியார் பேசிய தலைப்பு, ‘மனிதர்களுக்கு மரணமில்லை!’
இந்து தமிழ் திசை

வாழும் போது எந்த கவிஞரையும் மதிக்காத சமூகம். அந்த வரிசையில் பாரதி பெயர்இடம் பெற்றது வருத்தமான விஷயம் தான்.