
அந்தியைக் கடந்து செல்லும் பறவைகள்
கூடடைந்த பின்னர் அடங்கும் சிறகசைவு
நாளெல்லாம் தன்மேல் கவிந்திருந்த ஒளிமுழுமையை
உதறியா விடும்
நாற்காலியுடன் அறையை மாற்றி
பிறிதொரு அறையில் அமர்ந்தாலும்
மூழ்கியிருக்கும் கருமையை
எவ்விதம் உதறுவது
சேமித்தலின்றி செலவாகிப் போன
நல்தருணங்களில் ஒன்றேனும்
எனது துயிலினுள் மாறுவேடத்தில்
நடமாடாமலா தப்பித்துவிடும்
வெளிரும் சாளரத்தின் கண்ணாடியின்மேல்
உதிரும் விழிப்பின் முதல் சிமிட்டலில்
புறம் துல்லியமாய்த் தோன்றாவிடினும்
அடுத்தடுத்த சிமிட்டலில் நேர்த்தியடைய தவறுவதில்லை
யாராது ஒருவரால் வாசல்கதவு தட்டப்பட்டாலும் சரிதான்
அன்றி இயல்பாய் நானே திறந்தாலும் சரிதான்
சாத்தப்பட்டிருக்கும் இரட்டை மரக் கதவின் இருபுறமும்
இவ்வுலகம்தான்.
