தமிழ்நாட்டின் Hemingway/சுஜாதா தேசிகன்

சுஜாதா காலமான போது, அஞ்சலி செலுத்த அசோகமித்திரன் வந்திருந்தார். மத்தியான வேளையில் சென்னை வெயிலுக்குக் களைத்துப் போயிருந்தார். வீட்டுக்கு கிளம்பியவர், முடியாமல் மயக்கத்தில் அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டார். உடனே சிலர் அவருக்கு தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தார்கள். கொடுத்தவர்களுக்கு நிச்சயம் அவர் அசோகமித்திரன் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தண்ணீர் அருந்திவிட்டு சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “வேளச்சேரிக்கு போகணும், பஸ்டாண்ட் வரை யாராவது கொண்டு விட முடியுமா ?” என்று கூட்டத்தைப் பார்த்து கேட்டதை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.

அங்கிருந்த ஒரு பிரபல டைரக்டர், “இவர் தமிழ்நாட்டின் Hemingway. இவருக்கா இந்த நிலமை ?” என்றார்.

எதையும் வித்தியாசமாகச் செய்யும் ஒரு டைரக்டர் இவருக்கு ஒரு ஆட்டோ பிடித்து கொடுத்தார்.

எழுதிப் பிழைப்பதில் உள்ள சிரமங்கள்? என்ற கேள்விக்கு இவரின் ஒரு வரி பதில்:

“எல்லாச் சிரமங்களையும் துயரங்களையும் அனுபவித்தாயிற்று”