கம்பனைக் காண்போம் -68/
வளவ. துரையன்



பால காண்டத்தில் திருஅவதாரப்படலம் இனி தொடங்குகிறது
தாமரைக்காடு பூத்ததோ?

  1. கருமுகில் தாமரைக் காடு பூத்துநீடு
    இருசுடர் இருபுறத்து ஏந்தி ஏந்துஅலர்த்
    திருவொடும் பொலிய ஓர் செம்பொன் குன்றின்மேல்
    வருவபோல் கலுழன் வந்து தோன்றினான். [192]
    [திரு=இலக்குமி; கலுழன்=கருடாழ்வான்]

இப்பாடலில் இல்பொருள் உவமை கூறப்பட்டுள்ளது. அதாவது உலகில் இல்லாத பொருளை உவமையாகக் கூறுவது. நீலமேகத்தில் தாமரை மலர்கள் மிகுதியாகப் பூத்திருந்தது என்று சொல்லப்படுகிறது. அதன் இருபக்கங்களிலும் சந்திரனும் சூரியனும் ஆகிய இரு சுடர்கள் இருந்தனவாம். பொன்மலை ஒன்று இருந்ததாம். இவையெல்லாம் உலகில் காணப்பட முடியாதவை. இவை எல்லாம் உவமை கூறப்படுவதைப் பாடலின் விளக்கத்தில் காணலாம்.

நீலமேகமானது தன்னிடத்தே தாமரை மலர்கள் மிகுதியாகப் பூத்து, நெடுந்தூரம் ஒளிவிடும் சந்திரன், சூரியன் ஆகிய இரு சுடர்களைத் தன் இருபக்கங்களிலும் தாங்கிக் கொண்டு, தாமரை மலரால் தாங்கப் பெறும் இலக்குமியோடு, ஒரு செம்பொன்மலை மேல் வருவது போல கருடாழ்வான் மீது ஏறி வந்து காட்சி அளித்தான்.      

தேவர்கள் வேண்ட திருமால் வந்ததை இப்பாடல் சொல்கிறது. நீலமேகம் திருமாலுக்கு உவமையாகும். தாமரைக் காடு அவரின் திருமேனிக்கும், சந்திர சூரியர்கள் சங்கு சக்கரங்களுக்கும், பொன்மலை கருடனுக்கும் உவமையாகும். 
”பொன்மலை மேலெழுந்த கார்முகில் போன்றுளர் வந்து காணீர்” என்னும் திருமங்கையாழ்வார் வாக்கு இங்கு நினைவில் கொள்ளத்தக்கதாகும்.