இது நடந்து ஏறத்தாழ 50 ஆண்டுகள் ஆயிருக்கும்/பரதன் வெங்கட்

நன்றி : அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு

இது நடந்து ஏறத்தாழ 50 ஆண்டுகள்
ஆயிருக்கும். திருச்சி ஜங்ஷனில் இரவு நேர பாசஞ்சர்… நான்காவது பிளாட்பாரத்தில்…இரவு 11மணிக்கு
புறப்படும். என்( நானல்ல) பெட்டியில்
கூட்டம் வந்து உட்கார்ந்து கொண்டது.
மேல் தட்டில் ஏறி அவரவர் படுத்துக்
கொண்டனர்.
எனக்கு எதிர்புறத்தில் ஓர் இளைஞன்.
படித்தவனாக,பட்டதாரியாக இருக்க
வேண்டும். திருச்சி நகரத்தில் எத்தனையோ கல்லூரிகள் இருக்கின்றனவே.பெட்டி படுக்கைகளோடு வியாபித்திருந்தான்.
பெட்டியை தலைமாட்டிலும் படுக்கையை
அந்த இருக்கையின் மீது முழுமையாக
விரித்து,ஐந்தாறு பேர் உட்கார வேண்டிய
அந்த இடத்தை முழுக்க ஆக்கிரமித்துக்
கொண்டான்.
இப்பொது ஒரு பெரியவர் வண்டியில்
ஏறினார். அவர் ஒரு விவசாயி போன்று
காணப்பட்டார். மேலே சட்டை போடவில்லை. ஒரு வெள்ளைத் துண்டு
மட்டும் இடது தோளில் போட்டிருந்தார்.
” தம்பீ…இங்க உட்காரலாமா ? ” என்று
அதீத மரியாதையுடன் கேட்டார்.
அந்த படித்த இளைஞனோ, திரும்பிக்
கூட பார்க்காமல், ” பின்னால் ஆள்
வராங்க அவங்களுக்கு சேர்த்து இடம்
போட்டிருக்கேன் ” என்று மிடுக்குடன்
கூறி வண்டியை விட்டு இறங்கி,
பிளாட்பாரத்தில் போய் நின்று சிகரட்
புகைக்க ஆரம்பித்தான். பெரியவர்
உட்கார இடமில்லாமல் நின்று கொண்டே
இருந்தார்.
வண்டி புறப்படுவதற்கான அறிவிப்பு
அளிக்கப் பட்டது. அனைவரும் ஏறிவிட்டனர்.அந்த இளைஞனும் வந்து
அமர்ந்து கொண்டான். வண்டியும்
புறப்பட்டு விட்டது.ஆனால் அவன்
சொன்னது போல் வேறு யாரும் அவன்
ஆக்கரமித்திருந்த இடத்தில் வந்து
அமரவில்லை. அந்தப் பெரியவர் அங்கு
உட்காரக் கூடாதென்றே பொய் சொல்லி
இருக்கிறான்.
அப்போதும் அந்தப் பெரியவர் நின்றகொண்டே தான் வந்தார். வண்டி
பொன் மலையைத் தாண்டி வேகம்
பிடிக்கத் தொடங்கியது.
மௌனமாக நடக்கும் இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டே
இருந்தேன். எல்லோரும் கண்களை
மூடியநிலையில் உட்கார்ந்து கொண்டே
தூங்கலானார்கள். ஆனால் அவன் அந்த
இடத்தில் படுத்துத் தூங்கவில்லை.அவன்
என்னுள் மிகவும் சிறுமைப் பட்டு போனான்.
அவன் மனச்சாட்சி அவனை உறுத்தி
இருக்குமோ என்னவோ, அவன் அந்தப்
பெரியவரைப் பார்த்து, ” பரவாயில்லை
வந்து உட்காருங்கள் ” என்று ஏதோ தானம் கொடுப்பது போல கூறினான்.
அந்தப் பெரியவரோ,இதுவரை அவன்
பக்கமே திரும்பாதிருந்தவர், அவனை
நோக்கி ” வேண்டாம் தம்பி…எப்போ யாரோ வருகிறார்கள் என்று என்னிடம்
சொன்னீர்களோ அவர்களே வந்து
உட்காரட்டும். அந்த இடம் எனக்கு
வேண்டவே வேண்டாம் தம்பீ ” என
சாட்டையில் அடித்தது போல் சொன்னார்.
நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். ஒரு
நாடகம் என் முன்னால் விரிவடைவதைக்
காண முடிந்தது. இளைஞனுக்கு ஏற்பட்ட
தர்மசங்கடம் அவன் முகத்தில் நன்றாகத்
தெரிந்தது. அவனால் படுக்க முடியவில்லை. பெரியவரும் உட்கார
மறுக்கிறார். கெட்டிக்காரன் புளுகு எட்டு
நாள் தான் என்பார்கள். இங்கு எட்டு
நிமிடம் கூட தாக்குப் பிடிக்கவில்லை.
செய்வதறியாது அந்த இளைஞன்
நெளிந்து கொண்டிருப்பது அப்பட்டமாகத்
தெரிந்தது.
இந்த நேரத்தில் இன்னொரு அதிசயம்.
என்னருகே உட்கார்ந்திருந்தவர் அந்தப்
பெரியவரைப் பார்த்து, ” அந்தப் பையனை எனக்காக மன்னித்து விடுங்கள்…வாங்க என் சீட்டுல வந்து
உட்காருங்க” என்று கூறி இருக்கையை
விட்டு எழுந்தார். மனித நேயம் போட்டி
போட ஆரம்பித்தது.
அந்தப் பெரியவர்,
” ஐயோ…வேண்டாமுங்க, அது உங்க இடம் நான் உட்காரக் கூடாது. இதோ
தஞ்சாவூரு இப்ப வந்துரும் .நான்
இறங்கீருவேன். தம்பி மேல எனக்கு எந்த
வருத்தமுமில்ல. அவர் தாராளமா படுத்துக் கொள்ளட்டும்” என்றார்.
தஞ்சாவூர் ஜங்ஷன் வந்தது. அந்த
பெயர் தெரியாத பெரியவர் அமைதியாக
இறங்கி இருட்டில் மறைந்து போனார்.
வண்டி மீண்டும் புறப்பட்டது. அதன்
பிறகு நானும் மயலாடுதுறையில்
இறங்கிவிட்டேன். அதுவரை இந்த
இளைஞன் படுக்கவுமில்லை
தூங்கவுமில்லை. அதற்குப் பிறகு அவன்
தூங்கியிருப்பானா ?
ஒரு பெரியவரை ஏமாற்ற நினைத்து
தன்னைத் தானே ஏமாற்றிக்
கொண்டானோ…!

One Comment on “இது நடந்து ஏறத்தாழ 50 ஆண்டுகள் ஆயிருக்கும்/பரதன் வெங்கட்”

Comments are closed.