கருடனூரை அடுத்திருந்த செம்பாறை என்ற அந்தச் சிற்றூருக்கு நான் எந்தக் கூழாங்கல்லையும் தேடிப் போகவில்லை. அங்கே ஒரு புதிய துணிக்கடையை எங்கள் துணி மில்லுக்கு வாடிக்கை பிடிப்பதற்கு அனுப்பப்பட்டிருந்தவன் நான்.
போய் இறங்கி என் வழக்கப்படி விசாரித்தபோது, கடை புதிதானாலும் பிஸினஸ் வட்டாரங்களில் மோசடிக்காரனாகத் தெரியவந்த ஒரு பழைய கல்லுளிமங்கனே கடைக்காரன் என்று தெரியவந்தது.
வந்த சுவடு தெரியாமல் அன்றே நான் திரும்பி இருக்க வேண்டும். ஆனால் சென்னை வண்டி அந்த ஊர் வழியாக இனி மறுநாள் காலைதான் வரும். ஏற்கனவே பொழுது சாய்ந்து கொண்டிருந்தது.
'மில்லில் இருந்து இன்னிக்கி ஆள் வரும்னு அவன் எதிர்பார்த்துண்டு இருப்பான் சார். நீங்க வந்தது எப்படியும் அவனுக்குத் தெரிஞ்சிடும். திருவண்ணாமலை போய் அங்கே மெட்ராஸ் வண்டியைப் பிடிங்க,' என்கிறார் நான் தங்குவதற்காக ரூம் என்ற பெயரில் ஒரு பொந்தைக் கொடுத்திருந்த, சிறிய ஆனால் ஊருக்குள் பெரிய ஹோட்டல்காரர் மணி.
'உங்களுக்கு என்ன, வாடகை தானே?' என்று நான் அலட்சியமாகப் புன்னகை செய்துவிட்டு ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினேன். சாயும் வெய்யில் நெருப்புத் தகடாகத் தான் ஆள் மீது சாய்ந்து கொண்டிருந்தது.
நிழலைத் தேடிய கண்களில் முல்லைக்குத் தேரீந்த வள்ளலின் பெயரில் நின்ற பூங்கா தென்பட்டது. உள்ளே இடுப்பளவு பூஞ்செடிகள், சரளைக் கற்களும் ஆளுயரப் பாறைகளுக்கும் நடுவே மலர்வதற்குத் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தன. இந்தச் சம்பவத்தில் பூங்கா நடுவே தடபுடலாக ஒரு தலையின் சிலை. யாரோ புதுயுக வள்ளலாயிருக்கும் என நினைத்தபடி அணுகினேன். இந்தச் சிற்றூரில் இந்தச் சிலை ஒரு ஆச்சரியம். டில்லியிலும் கல்கத்தாவிலும் சிற்பி சொக்கலிங்கத்தின் விரல்களில் இருந்து பிறந்து நிற்கும் காந்தி, நேதாஜி சிலைகளின் அதே புதிய பாணி. இந்தச் சிற்பியின் கையும் தேர்ந்த கையாக இருக்க வேண்டும். சிலையின் முகத்தில் குரூரமான வன்முறையின் பாவத்தை உறைய வைத்துப் பிடித்திருந்தார் சிற்பி.எந்த வள்ளலுக்கு சிலை எடுக்கப்பட்டதோ, அவருக்குள் ஒளிந்திருந்த உண்மையான ஆளை அம்பலப்படுத்தியபடி தான் அந்த முகச்சிலை அங்கே நின்றது.
'என் கண்கள் உருவத்தைப் பார்க்கின்றன. எனது விரல்கள் உருவத்துள் ஒளிந்திருக்கும் உயிரைப் பிடிக்கின்றன,' என்று சொக்கலிங்கம் ஒரு பேட்டியில் கூறியிருந்ததை, இந்தச் சிலையின் சிற்பியும் தைரியமாக ஒப்பிக்கலாம். சமீபித்த போது சிலையின் பீடத்தில் அதன் முகத்துக்கு நேரே ஒரு கூழாங்கல் செங்குத்தாக நிற்பதைக் கண்டேன். கீழே பொறிக்கப்பட்டிருக்கக் கூடிய நாமாவளியை நான் படிக்கவில்லை. எனவே இந்த வள்ளல் யார் என்று உடனே நான் தெரிந்து கொள்ளவில்லை.
என் இடது கை தன்னையறியாமலே பீடத்தில் இருந்த கூழாங்கல்லை எடுத்துக்கொண்டது. சிலையையே பார்த்த நான் கையில் எடுத்த கல்லைப் பற்றிய பிரக்ஞை இல்லாமலே சற்றுப் பின்வாங்கி, சிலையின் சுற்றுமுகத் தோற்றத்தைப் பார்த்தபடி அதன் பின்புறம் வந்தேன்.
அது கடினமான உலோகத்தால் பார்க்கப்பட்ட சிலை. சுற்றி வருகையில் அதன் குரூரபாவம் மேலும் மேலும் தத்ரூபமடைந்து கொண்டிருந்தது. சிலையின் பின்புறத்துக்கு வந்தபோது சற்றுத்தள்ளி, பெரிய பாறை ஒன்றில் உட்கார்ந்திருந்த யாரோ ஒரு வெள்ளித் தலையர் என்னைக் கவனிப்பதை உணர்ந்தேன். பாறையின் ஒரு புறம் ஏற வசதியான சரிவு. அதன் செங்குத்தான மறுபகுதிப் புறமாகப் பாறையின் நிழலில் மூன்றோ நான்கோ பேர் நின்றார்கள். அவர்கள் என் கண்ணில் பட்டதுக்குக் காரணம், நடுவே நின்று விரலினால் எதிரே நிற்பவரனின் கண்ணில் குத்துகிற பாவனையோடு பேசிக்கொண்டிருந்த ஆள்தான். அவன் மீது என் கண்பட்ட உடனேயே நான் லோசனை அதிர்ச்சியுடன் இடது கையிலிருந்த கூழாங்கல்லை வலது கைக்கு மாற்றினேன். கல் வலது கைக்குப் போகுமுன் நழுவி என் கால் பெருவிரல் ஒன்றின் மீது விழுந்தது. நான் நின்ற இடம் மேடானதால் விழுந்த வேகத்தில் சப்தமில்லாமல் உருண்டு ஓடிப்போய்க் கண்குத்திப் பேச்சாளியின் செருப்புக் காலில் முட்டி ஒரு சுற்று உருண்டு அவனது புறங்கால் மீது ஏறி ஆச்சரியமாக நின்று கொண்டது கூழாங்கல்.
அந்தக்கணம் தான் அவனைக் கண்ட அதிர்ச்சியின் காரணத்தைக் கூட அறிந்தேன். சிலை அந்த ஆளின் முகச்சிலை தான்.
இதை நான் உணர்ந்த அதே வேளை நிமிர்ந்து தனக்கு மேலே பாறையில் உட்கார்ந்திருந்த வெள்ளித்தலையரைப் பார்த்தான் அந்த ஆள். கல்லைப் போட்டது வெள்ளித்தலையரல்ல என்று கூறி, கல்லை நான் நழுவவிட்டதாக மன்னிப்புக் கேட்கலாம் என்ற எண்ணம் என் மனதில் உருவாகுவதற்குள்...
நிலச்சரிவை ஒரு மிருக வேகத்தில் பாய்ந்து கடந்து பாறைமீது இருவரைப் பிடித்துக் கீழே இழுத்துத் தடபுட என்று அடித்தான் கண்குத்தி. அவனது சகபாடிகள் முன்னே ஓடிவந்து சிதறி கால்களை அகட்டி நின்றபடி, 'ஆ!அடிங்க அண்ணாச்சி! வாத்யாரு விளையாடறாரு!' என்று கதகளி நடனம் ஆடினார்கள்.
இவ்வளவும் ஒரு சில விநாடிகளுக்குள் நடந்தவையாதலால் எனக்கு என்ன செய்வது என்றே தோன்றவில்லை. அடித்த வள்ளல் கண்குத்தியும் அவனுடைய ஆட்களும் உடனேயே இடத்தை விட்டு வேகமாக மறைந்துவிட்டனர். அதற்கப்புறம்தான், என் வலதுகால் பெருவிரல் நகத்தில் விண்விண் என்று வலியையே உணர்ந்தேன்.
கிழிந்த சட்டையுடன் பாறையருகேரு கிடந்தவரை நோக்கி நான் போகவும் அவர் தாமாக எழுந்து நின்று கொண்டார். கீழே சிதறிக் கிடந்த அவரது ரூபாய் நோட்டுகளையும் சில்லறையையும் நான் பொறுக்கினேன். அவரது கண்களைச் சுற்றி வீக்கம் ஏற ஆரம்பித்து விட்டது. இடது கன்னத்தில் ஏதோ குத்திய இரண்டு தடங்களில் ரத்தம் கசிந்து ஓட ஆரம்பித்தது. வள்ளல் கண்குத்தி, கை விரல் மோதிரத்தையே ஆயுதமாக்கி இருக்கிறான்.
பாறையைச் சுற்றி இறங்கும் போது நான் குனிந்து அந்தக் கூழாங்கல்லைப் பொறுக்கிக்கொண்டேன். அடிபட்டவர் கிழிந்த ஷர்ட்டுடன் ஊர்வலம் வர வேண்டாம் என்று அதைக் கழற்றி வீசினார். அவருக்கும் சரி எனக்கும் சரி போலீஸிற்குப் போவது அர்த்தமற்றதாகப்பட்டது. முதலுதவி உபகரணங்கள் ஹோட்டலில் என் பையில் இருந்தமையால் அடிபட்டவரை அங்கே அழைத்துச் சென்றேன்.
ஹோட்டல் மணி, அடிபட்டவரைப் பார்த்ததும் பதறிப் போனார். என்னை விட சுறுசுறுப்பாக தேர்ச்சி பெற்ற தோரணையில் முதலுதவி செய்தார். அடிபட்டவருக்குக் காபி கொடுத்து என் ரூமில் இருத்தி விட்டு வெளியே ஒரு மேஜைக்கு இழுத்து வந்து நடந்ததைக் கேட்டார். 'ஆள் யார் தெரியுமில்லையா?' என்று கேட்டவர், 'சிற்பி சொக்கலிங்கம்!' என்று ஒரு போடு போட்டார்.
'இந்தியப் பிரசித்தம் இருந்து என்ன? ஒழுங்கான வருமானம் கிடையாது. நாலு பெண் குழந்தைகள். மூன்று பேரை எப்படியோ கட்டிக் கொடுத்து விட்டார். நாலாவது பெண் குதிர்ந்து நிற்கிறாள். அவளுக்காகத்தான் இந்தச் சிலையையே செய்ய உடன்பட்டார் மனிதர். இல்லாவிட்டால் இவ்வளவு தூரம் கீழே இறங்கி இருக்க மாட்டார். என்ன முழிக்கிறேள்? ஒன்று தெரிந்து கொள்ளுங்கோ, செம்பாறை பார்க்கில் நிற்கிற சிலை, அந்தச் சிலையை செய்த சொக்கலிங்கத்தை அடித்த வள்ளலின் சிலை. நீங்கள் சந்திக்க வந்த துணிக்கடைக்காரக் கல்லுளிமங்கனும் அதே வள்ளல்தான்!'
என் கண் மேஜையில் நான் வைத்திருந்த கூழாங்கல்லில் இறங்கி நின்றது.
'தனக்கே சிலை வைக்க இவரை மெட்ராஸ் போய்ப் பிடித்து வந்த வள்ளல், இன்னும் இவருக்குத் தரவேண்டிய இருபதாயிரத்து சொச்சத்தையும் தரவில்லை. சொக்கலிங்கம் மெட்ராஸுக்கும் செம்பாறைக்கும் அலைந்து கொண்டிருக்கிறார். இவர், இங்கே வராமல் பண்ணத்தான் ஏதோ சாக்கில் அவரை இப்போ அடித்திருக்கிறான். பொண்ணு கல்யாணம் நடக்கப் போறதோ?
மேலும் அவர் தொடருமுன், என் நெஞ்சு திடுதிடுவென்று அடிக்க என் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் கொட்டின. 'எனக்கு வயது முப்பதாகிக் கொண்டிருக்கிறது. அப்பா போய்விட்டார். அம்மா மட்டும்தான். மாத வருமானம் பயணச் செலவுகள் கழித்து இரண்டாயிரத்து ஐநூறு.' சொற்கள் புரண்டு புரண்டு ஓடி நின்றதும் உலகமே தலைகீழாக நிற்கிற உணர்வு. 'சீதனம் அது இது வேண்டாம்!'
'மெதுவா!' என்றார் ஹோட்டல்காரர். பிறகு சாவதானமாக பேச்சை மாற்றும் தோரணையில் கூறினார். 'இந்தக் கூழாங்கல்லோடு தான் சொக்கலிங்கம் இங்கே இன்னிக்கு வந்தார். சிற்பியோல்லியோ, இப்படி எதையாவது ஒரு பொறுக்கிக்குவார்ன்னு நான் இதப்பத்தி அவருகிட்டக் கேக்கலே. எங்கே மெட்ராஸ்லேருந்தான்னு மட்டும் கேட்டேன். திருவண்ணாமலையிலேருந்துன்னு சொல்லிட்டு பார்க் பக்கமாகப் போனார். அவர் போனதுக்கு அப்புறம் நீங்க போனேள்.'
ஹோட்டல்கார மணியின் நாசூக்கான தரகுக்கும் அப்பால் நான் சிலையைப் பார்த்த விதமே என் கல்யாணத்தை விதித்தி விட்டது என பஸ்ஸில் நானும் சொக்கலிங்கமும் சென்னை திரும்பிய போதுதான் எனக்குத் தெரிந்தது. திருவண்ணாமலை வரும்போது அவர் சொன்னார்: 'ஓவியத்தைப் பார்க்கிற போது நேரே முன்பின்னாகப் போய் வந்து ஒவ்வொரு தூரத்திலும் இருந்து பார்க்க வேண்டும். சிலையைப் பார்ப்பதற்கு அதைச் சுற்றி நடந்து ஒவ்வொரு கோணத்திலும் இருந்து பார்க்க வேண்டும். சிலையைப் பார்ப்பதற்கு அதைச் சுற்றி நடந்து ஒவ்வொரு கோணத்திலும் இருந்து பார்ப்பதே முறை. மிக மிக அபூர்வமானவர்கள்தான் இந்த முறைப்படி பார்ப்பார்கள். நீ அந்தச் சிலையை இப்படிப் பார்ப்பதை நான் கவனித்ததுமே உன்னை என் மாப்பிள்ளையா மனதில் பண்ணிவிட்டேன்.'
பெண்ணைப் பார்க்காமலே வாக்குக் கொடுத்து விட்டதால், அவளைப் பார்த்ததும் அவளை எனக்கு ரொம்பவும் பிடித்து விட்டது என்று சொல்லி மெனக்கெட வேண்டாம்.
அவளது பெயரிலும் ஒரு கல், ருக்மணி என்று வந்து விழுந்தது என்பதைச் சொல்லியாக வேண்டும். அதோடு கூழாங்கல்லின் கதையும் பாக்கி இருக்கிறது.
திருவண்ணாமலையின் பெரிய கோவிலில் கல்யாணம். மாப்பிள்ளையாகப்பட்ட எனக்கும் என் பிடிவாதத்துக்கும் உடன்பட்ட அம்மாவுக்கும் காட்ட வேண்டிய உபசாரத்தை விட அதிக உபசரிப்பைப் பெற்றுக் கொண்டிருந்தார் ஒருவர். ஏனோ அவரைப் பார்த்த கண்கள் அவரை விட்டு விலக்க மறுத்தன.இவ்வளவுக்கும் படுஅழுக்காக முரண்டாசு,குர்த்தா, பஞ்சகச்சம் ஆகியவற்றை அணிந்திருந்தார். பிரம்மாண்ட சிறகு போல் அவரது தோள்களில் இருந்து ஒரு போர்வை தொங்கிக் கொண்டிருந்தது. பழசுபட்ட அழகாகச் சுருண்டிருந்த வெண்தாடி. முகத்தில் மகாகர்மம் பொதிந்த சிரிப்பும் இடையறாத நெருப்பின் உக்ரமும் ஒரே வேளையில் தோன்று நின்றன.
"யாரவர்? என்றேன் நான்.
ருக்மணி உதடசைக்காமலேயே பதில் சொன்னாள்: "நீ செய்த அந்தச் சிலைக்கு முன்னாடி இதை வை"ன்னு அந்த கூழாங்கல்லை அப்பாகிட்ட இவர்தான் கொடுத்து அனுப்பினார்.'
பசுமை, பிப்ரவரி 1988.