‘சாம்பிராணி மடம்’ – கணக்கு வாத்தியார்!/ஜெ.பாஸ்கரன்

சமீபத்திய எம் எம் சி 72 கோல்டன் மீட் உணர்த்தியது, ‘மனிதர்களையும், முகங்களையும் மறந்துவிடும் மனது’ என்பது. வயதையும், தேய்ந்துவிடும் செரிப்ரல் கார்டிகல் செல்களையும் காரணமாகக் காட்டினாலும், சில நுணுக்கமான முக baவங்கள், உடல் மொழிகள் மறந்தவர்களை ‘சட்’டென்று நினைவுக்குக் கொண்டு வரும் திறமை அந்தத் தேய்ந்த மூளைக்கு உண்டு என்பது வியக்கத்தக்கது! அப்படி ஒரு சந்திப்பு….
எண்பது வயதுக்கும் மேலிருக்கும் மனிதர். முன் வழுக்கையில் எண்ணிவிடக் கூடிய அளவில் பின் பக்கமாக வாரி விடப்பட்ட முடிகள், காதுகளில் கொஞ்சம் முடி, சிரிக்காவிட்டாலும் சிரித்தாற்போலிருக்கும் முகம், அரைக்கை வைத்த ஸ்லாக், அளவாய்த் தைக்கப்பட்ட பேண்ட்… மூன்றாவது முறையாக என்னைப் பார்க்க வருகிறார். வயதின் காரணமாக உள்ள சில சின்ன சின்ன உடல் உபாதைகள்…. கேட்டதையே திரும்ப ஒரு முறை கேட்டு நிச்சயப்படுத்திக்கொள்ளும் அந்தக்கால மனிதர்.
“ம்.. எப்டி இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன்.. ஐ ஆம் ஃபைன்! அக்கேஷனாலா கொஞ்சம் ‘சுருக்’ குன்னு ஷோல்டர்லே ஒரு பெயின் – அதுவும் ஏதாவது ஸ்ட்ரெயின் பண்ணிக்கிட்டாத்தான்”
“கழுத்துலே எலும்பு தேய்ஞ்சு போயிருக்கு. அது வழியா வர்ர நரம்பு அப்பப்ப கழுத்து மூவ்மெண்டுல சிக்கறதுனாலெ கொஞ்சம் வலிக்கும். சின்ன தலையணையா வெச்சுக்கோங்க. படுத்துக்கிட்டு டிவி பாக்காதிங்க…… “
சிரித்தபடியே கேட்டுக்கொண்டிருந்தார்.
அந்த சிரிப்பு – முன்னிரண்டு பற்களும் கொஞ்சமாக வெளியே தெரிய, கீழுதட்டில் அழுத்தியபடி கண்கள் சுருங்க, முகமே சிரிக்கும் சத்தமில்லாத சிரிப்பு – என் தேய்ந்த மூளைக்குள் ஒரு சின்ன மணியடித்தது!
ஆர் கே லக்‌ஷ்மனின் காமன் மேன், கட்டம் போட்ட கோட்டுடன், ஒரு வேளை சிரித்தால் இப்படி இருக்குமோ…. ம்ஹூம், எங்கேயோ பார்த்திருக்கிற சிரிப்பு…. எதிராளியின் மனம் நோகாமல் அவன் தவறைச் சொல்லும் சிரிப்பு…. ஒரு அப்பா, பிள்ளைக்கு…. ஒரு அண்ணன் தம்பிக்கு…. ஒரு ஆத்ம நண்பனுக்கு… வாத்சல்யம் நிறைந்த ஆசிரியர் ஒரு மாணவனுக்கு…. ஆமாம் அந்தச் சிரிப்புதான்… ‘அட, சாம்பிராணி மடம், இது கூடத் தெரியலையே’…. அதே சிரிப்புதான்.
அவசரமாக கேஸ் ஷீட்டைப் பார்த்தேன் .. அதே பெயர்தான்… எப்படி முதல் இரண்டு விஸிட்டுகளில் தவறவிட்டேன்… இருந்தாலும் எதற்கும் கேட்டுக்கொள்வோம்…
‘சார், நீங்க இராமகிருஷ்ணா ஸ்கூல் டீச்சர்தானே?’
“ஆமாம்” – அவர் தலைக்கு மேல் ஒரு ஆச்சரியக் குறி!
“9 கே, 10 கே செக்‌ஷன் கிளாஸ் டீச்சரா இருந்தீங்க தானே… இங்க்ளீஷும், ஜெனரல் மேத்ஸும் எடுத்தீங்க தானே?”
“ஆமாம்”. தலையில் இரண்டு ஆச்சர்யக் குறிகள்!!
“உங்க வீடு இந்திப் பிரசார் சபா பக்கத்துல இருந்ததில்லே…. அகஸ்தியர் கோவிலுக்குக் கூட வருவீங்கல்ல?”
மீண்டும் அதே சிரிப்பு. எனக்குத் தெரிந்துவிட்டது – ஆர் கே எம் மெயின் ஸ்கூலில் எனது கிளாஸ் டீச்சர் திரு நாராயணசாமி அவர்களேதான். பஞ்சகச்ச வேட்டிகளிடையே, பாண்ட், சர்ட் போட்டு வரும் ஒரு சில ஆசிரியர்களில் ஒருவர். அமைதியானவர். அருமையாக மேத்ஸ், வழியுடன் சொல்லிக்கொடுப்பார். (மேத்ஸ் ‘வழி’ என்ன என்போர், way of deriving at the end result or steps என்றறிக!). போர்டிலும் எழுதி வைப்பார். கோபம் வந்தால், அதிக பட்ச திட்டு “சாம்பிராணி மடம்” (இப்போது நினைவு படுத்தியபோது, கையால் வாய் மூடி சிரித்துச் சொன்னார் – ‘மடச் சாம்பிராணி’ என்பதைத்தான் அப்படிச் சொல்வேன் என்றார்!) தான்!
நானும், டிசி என்கிற டி.சந்திரசேகரும் (கர்நாடக இசைக் கலைஞர் தஞ்சாவூர் தியாகராஜன் அவர்கள் புதல்வன்) அவர் வீட்டுக்குச் சென்று திருத்திய ஹோம் வொர்க் நோட்டுப்புத்தகங்களை எடுத்து வந்திருக்கிறோம். அகச்தியர் கோவில் முருகன் சன்னதியில் அவர் நிற்கும்போது, தூணுக்குப் பின்னால் மறைந்து நின்று பார்த்திருக்கிறோம்- ஒரு ‘ஹீரோ வொர்ஷிப்!’ !
டிசியுடன் வரும் பாஸ்கர் நான்தான் என்ற போது என்னைவிட மகிழ்ந்தவர் அவர்தான். ஒரு நல்லாசிரியரின் உண்மையான மகிழ்ச்சி. அதற்கும் அதே முன்பல் கீழுதட்டை அழுத்தும் கண் சுருக்கிய சிரிப்பு!
பாதம் தொட்டு வணங்கினேன். டிசி யிடம் (பாண்டிச்சேரியில் இருக்கும் டிசி, எஃப் சி ஐ லிருந்து ஓய்வு பெற்ற அதிகாரி) சொல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
“எம் எஸ் சி, எம் எட் முடித்து ஆர் கே எம் சேர்ந்தேன். பின்னர் டபுள் எம் ஏ, பிஸினஸ் மானேஜ்மெண்ட் எல்லாம் முடித்து, ரிஸர்வ் வங்கியில் அதிகாரியாகப் பணிபுரிந்து, ரிடையர் ஆனேன்” என்றார். ‘உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி’ என்றவரை கையமர்த்தி, ‘உன்னை’ என்றே சொல்லலாம் சார் என்றேன் மாணவனின் பவ்யத்துடன்!
மீண்டும் அதே சிரிப்பு… விடை பெற்றுக்கொண்டார்…
‘சாம்பிராணி மடம்’ காற்றில் சுற்றி வந்தது!!
ஆசிரியர் ஏன் ரிஸர்வ் வங்கியில் வேலைக்குப் போய்விட்டார்? அந்தக் காலத்தில் ஆசிரியர்களுக்கு நல்ல மரியாதை இருந்ததே என நினைத்தேன். ‘மரியாதை சரி, வசதியாக வாழ நிதி யிருந்ததா?’ என என் மைண்ட் வாய்ஸ் கேட்க, என்னிடம் பதில் இல்லை.