எழுத்தில் ஹிம்சை/சுஜாதா

That joyful day was just like having washed the whole city which seemed to be crystal clear…

1953 வாக்கில் திருச்சி,பெரிய கடைத் தெருவில் இயங்கி வந்த ‘சிவாஜி’ என்ற பத்திரிகையில் “எழுத்தில் ஹிம்சை” என்ற தலைப்பில், எஸ்.ரங்கராஜன் என்னும் இயற்பெயரில் வெளிவந்தது தான் சுஜாதா எழுதி பிரசுரமான முதல் சிறு கதை.

கதை எழுதியவரை அவரது கதா பாத்திரங்களே வந்து சந்திப்பது போன்றதாம் அந்தக் கதை. ஏறத்தாழ, 18 ஆவது வயதில் இக்கதையை எழுதியவர், அதன்பிறகு 12 ஆண்டுகள் கழித்துத்தான் பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்தாராம். இதில் என்ன விஷேசம் என்றால், அந்தக் கதை பிரசுரம் ஆன அன்று அவர் அடைந்த அளவற்ற அந்த சந்தோஷத்தை மறுபடியும் அவர் பெறவே இல்லையாம்!

அந்தக் கதையைக் கண்டுபிடித்துக் கொடுப்பவருக்குத் தன் மகளையும் கட்டிக் கொடுத்து, பாதி ராஜ்யத்தைத் தருவதாக, (எழுத்துலக சக்கரவர்த்தி என்ற பாணியில்) நகைச்சுவையாகக் கூறியும் கதை கிடைக்கவே இல்லை. இல்லாத மகளையும் இல்லாத ராஜ்யத்தையும் கொடுக்கிறேன் என்று சொன்னதால் தான் கதை கிடைக்கவில்லையே என்னவோ!ஒருவேளை, அதைக் கண்டு பிடித்து, குமுதம் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தால் அடுத்த ஜென்மத்தில் மின்தடை இல்லாத ‘தமிழகம்’ கிடைக்கும் என்றாராம்.

ஆனால் இதில் வருந்தத் தக்க விஷயம் என்னவென்றால்,அவர் மறைந்த பிறகு அந்தக் கதை கிடைத்திருக்கிறது. அளவற்ற சந்தோஷத்தைக் கொடுத்த அவரது அந்த முதல் கதையை திரும்ப அவரால் படிக்க முடியாமல் போய்விட்டதே! அந்த 18 வயதில் என்ன அசால்டான வார்த்தை வீச்சு! இந்தக் கதை கண்டுபிடிக்கப் பட்டதே ஒரு பெரிய கதை! ஒரு புண்ணியவான் சிவாஜி பத்திரிக்கை நடத்தியவரின் வம்சாவளியைத தொடர்பு கொள்ளுதல்.. ஏமாற்றம்…பழைய புத்தகம், பேப்பர்களை எல்லாம் ஸ்கேன் செய்து வைத்திருக்கும் நபர் அகப்படுதல்… ஒரு பழைய ஹார்ட் டிஸ்க்கை நோண்டிக் கொண்டிருக்கும் போது, எதேச்சையாக, அந்த சிவாஜி இதழ் அகப்படுதல், அதில் எஸ்.ரங்கராஜன் என்ற பெயர் கண்ணில் படுதல் என தேடுதல் வேட்டை முடிவடைகிறது.

தன் முதல் கதை வந்த நாளைப் பற்றி சுஜாதா,

“என் சிறுகதை வெளிவந்த அன்றைய தினம் திருச்சி நகரமே அலம்பிவிட்டது போலத் துல்லியமாகத் தோன்றியது. எல்லோருமே அத்தனை நல்லவர்களாக இருந்தார்கள். இரண்டு பிரதிகளை வாங்கிக் கொண்டு, அந்தக் கடையருகில், வேறு யாராவது நல்லவர்கள் அந்தத் தரமான சிவாஜி பத்திரிக்கையை வாங்குகிறார்களா என்று ஒரு மணிநேரம் காத்திருந்து பார்த்து விட்டு, வீட்டுக்கு வந்த உடனே அடுத்த சிறுகதையை இரவோடு இரவாக எழுதி, மறுநாள் சிவாஜி ஆபீசுக்கு எடுத்துக் கொண்டு போனேன்.

கதவைத் திறந்தவர் ஒரு குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு,அதை முதுகில் தட்டிக் கொண்டே, ‘யாரு?’ என்று என்னை சந்தேகமாகக் கேட்டார். நான் அவர்கள் இதழில் சிறுகதை எழுதியவன் என்று அறிமுகம் செய்து கொண்டதும், முதல் கதைக்கெல்லாம் சன்மானம் கிடையாது என்றார். நான் சன்மானத்திற்கு வரவில்லை என்று சொல்லி, அடுத்த கதையைச் சமர்ப்பித்தேன். அதை அந்தக் குழந்தை தனக்குக் கொடுத்து தான் ஆகவேண்டும் என்று பிடிவாதமாக அலறியது. அந்தக் கதை வெளிவரவே இல்லை” என்று அவர் எழுதிய “என் முதல் கதை” என்னும் கட்டுரையில் குறிப்பிடுகிறார். அந்த இரண்டாவது சிறுகதை என்னவாயிற்றோ!