
(இன்று க நா சு பிறந்த தினம்.அவர் நினைவைப் போற்றும்படி இக் கவிதையைப் பதிவிடுகிறேன். விருட்சம் வெளியீடாக க.நா.சு கவிதைகள் கொண்டு வருகிறேன். பெரிய தொகுப்பு. க நா சு ஞானரத்தில் எழுததிய கவிதைகளும் அடங்கும். கிட்டத்தட்ட 200 கவிதைகள் இருக்கும்.)
படிப்பெல்லாம் வேறு ஏதோ மண்ணில்
பிறந்த இலக்கியங்கள் தான்-ஆனால்
சிந்தனையெல்லாம்-செயல் எப்படியானாலும்
இந்தப் பிறந்த மண்ணைவிட்டு நகரவே
மறுக்கிறது. எழுதுவதோ அநேகமாக
அந்நியப்பட்ட மொழி-என்று ஆகி
விடமுடியாது அது என்று தெரிந்தும்
எழுத வேண்டியதாக இருக்கிறது.
விஷயம் என்னமோ இந்தியத் தத்துவார்த்த
மான கருத்துக்களில் தோய்ந்து ஊறிய
விஷயங்கள்தான். என் கவிதைகள்
தமிழருக்கும் தமிழ் தெரிந்த ஆங்கிலேயருக்கும்
ஆங்கிலம் தெரிந்த தமிழருக்கும்-யாருக்கும்
புரியமாட்டேன் என்கிறதே என்ன செய்ய?
மேற்கு நோக்கி எழுதவா? கிழக்கு நோக்கி
எழுதவா என்று கேட்டுவிட்டு எதையும்
நோக்கி எழுதாமல் அடிமண்ணில் வேர்
விட்டு எழுதினால் போதும் என்றுதான்
தோன்றுகிறது. உள்ளே வார்த்தைகளைத்
துழாவ விட்டும் எழுதலாம்தான். உடனேயே
எழுதாவிட்டாலும்தான் என்ன என்று
கேட்கத் தோன்றுகிறது. உலகம் உய்ய
என் கவிதைகளைத்தான் எதிர் நோக்கிக்
காத்திருக்கிறதா? அதுவும் இல்லையே!
வருமீன் வருமளவும் காத்திருக்கும்
கொக்காக இந்த க்ஷணத்தில் கிடைக்கிற
என் அபூர்வ வாசகனைத் திருப்திப்படுத்து
வதுடன் என் வேலை முடிந்துவிட்டதாக
எனக்குத் தோன்றுகிறது. என் கவிதைகளில்
நம்பிக்கை வைக்காத அவற்றைத் தேடிப்
படிக்க முயலாத மனிதர்கள் அடங்கிய
உலகம் இது. ஆனால் இந்த மக்கள் வேறு
எதில்தான் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்
என்பதும் தெரியவில்லை. பணம், அரசியல்
வாதிகள், விஞ்ஞானம், தற்காலத்துக்குகந்த
ஸ்லோகங்கள், கட்சிகள் என்று பல
சொல்லலாம். ஆனால் அதிலும் அவர்கள்
பூரணமாக நம்பிக்கை கொண்டிருப்பதாகத்
தெரியவில்லையே. ஆனால் நான் எழுதி அவர்களுக்கு
ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதுமட்டும்
நிச்சயமாகத் தெரிகிறது. இதை உணரும்
விநாடிகளில் நான் என் பேனாவைத் தூக்கி
எறிந்து விடுகிறேன். ஆனால் மறுவினாடியே
தேடி எடுத்துக் கொண்டு மீண்டும் எழுத
உட்கார்ந்துவிடுகிறேன். வேறு எதுவும் செய்ய
எனக்குத் தெரியாதே!
ஒவ்வொரு தடவையும்
எழுதி முடித்தபின் எதற்காக இதை இட்படி
எழுதினோம் என்று எனக்கே புரியவில்லை.
ஆனால் என் எழுத்திலே என் காலடி மண்
ஒட்டிக் கொண்டிருப்பது எனக்கே தெரிய
வந்ததும் மீண்டும் ஏதோ எழுதத் துணி
கிறேன் யாரும் படிக்க முன்வராவிட்டாலும்.
என் படிப்பு மட்டும் இதையெல்லாம் ஒரு
மண்ணும் விளைவிக்காது என்பது நிச்சயம்
ஆனால் அந்தப் படிப்பில்லாவிட்டாலும்
எழுதுவதைத் தொடர்ந்து எழுத முடியாது.
அழகாகக் காற்றில் பறக்கும் சோப்
கொப்புளம் இரு மெல்லிய சோப்
பரப்பின் இழு பறியால் தோன்றுகிறது.
அதே போல என் எழுத்தும் ஏதோ
இரண்டு மண்களின் இழுபறியால்
தோன்றி நிற்கிறதோ என்கிற சந்தேகம்
எனக்கு ஏற்படுகிறது. நியாயமான
சந்தேகம்தான். சந்தேகம் தீரத்தான்
வழியில்லை. “பாட்டுக்களைக் பாடு.
உன் பாட்டுக்களால் என்னைப் பாடு’
என்று பராசக்தி தன்னைக் கேட்பதாகப்
பாரதி சொல்கிறான். என் கவிதையைப்
பராசக்தி விரும்பமாட்டாள்; அவளுக்குப்
பாட்டு வேண்டும், கவிதை வேண்டாம்.
என் காலடி மண்ணில்தான் என் கவிதை
நாய் போலக் கழுதைபோலக் குதிரைபோல
விழுந்து விழுந்து புரள்கிறது. எழுந்திருக்க
மறுக்கிறது. பாயை விரிக்காமல் தரையில்
படுத்துறங்க எனக்குப் பிடிக்கும். ஆனால்
புழுதியில் படுத்துறங்கிவிட எனக்குத்
திராணியில்லை. மண் ஒட்டிவிடுமே முதுகில்
என்று பயமாக இருக்கிறது; சட்டை
அழுக்காகிவிடுமே என்று தோன்றுகிறது.
முதுகும் சட்டையும் இல்லாவிட்டால் மனிதனாக
மற்றவர் ஏற்க மாட்டார்களே என்றும்
பயமாக இருக்கிறது. தரையில் முதுகிலும்
மீசையிலும் மண் ஒட்டப் படுத்துக் கிடப்பதில்
ஒரு சுகம் காண முடியும் என்று தெரிந்து
கொள்ளவே பல காலம் பிடிக்கிறது. புஸ்த
கங்களைப் பரப்பி அவற்றின் மேலும் படுத்து
உறங்கலாம்-இரவு வேலை செய்யும் பத்
திரிகாசிரியர்கள் செய்வது போல புஸ்
தகங்களிலிருந்து ஒரு ரஸாயன ஊறலாக
உடம்புக்குள் அறிவெல்லாம் கசியலாம்தான்.
ஆனால் அச் சுமையைவிடத் தரைப் புழுதி
எத்தனையோ விதங்களில் மேலானது என்று
தான் தோன்றுகிறது-ஆரோக்கியம் கெடாது.
நாய்கள் தங்கள் உடலில் ஏற்படும் புண்களைக்
குப்பைத் தொட்டியில் புரண்டு புரண்டு ஆற்றிக்
கொள்வதாகச் சொல்கிறார்கள். அதுவும்
உண்மையாகவே இருக்கலாம். ஒவ்வொரு
தடவையும் தரையில் விழுந்து எழும்போது என்
பலம் கூடுகிற மாதிரித்தான் தெரிகிறது. என்
உடல் புண்கள், மனப் புண்கள், ஆறிவிடு
கின்றன – அறிவுப் புண்கள்தான் சுலபமாக
ஆற மறுக்கின்றன. ஒரு ஆயுளில் ஆறுமோ
ஆறாதோ- எனக்கு நிச்சயமாகச் சொல்லத்
தெரியவில்லை. என் காலடி மண்ணையும் என்னை
ஒட்டிவரும் என் நிழலையும் நான் நம்பி என்
காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறேன். அவை
இரண்டையும் தவிர்க்க முடியும் என்று
நிச்சயமாக எனக்குத் தெரியவில்லை!
(ஞானரதம் டிசம்பர் 1986)
