
சுப்புணியைச் சொல்வார்கள்
பிழைக்கத் தெரியாதவனென்று
நடுத்தெருவில் கிடக்கும் முள்ளை
எடுத்து ஓரமாகப் போடுவான்
தெருக்குழாய் வீணாய்க்
கொட்டுகையில் நிறுத்துவான்
ஏழுமணிக்கும் எரிந்து கொண்டிருக்கும்
தெருவிளைக்கை நிறுத்தச் சொல்வான்
வாசலில் கீரைக்காரியிடம்
சாலையோரம் கிழிந்த செருப்புத்
தைப்பவரிடம் பேரம் பேசமாட்டான்
முச்சந்தியில் பச்சை விளக்கு
வரட்டுமென்றுக் காத்திருப்பான்
பெரியவர்களுக்கும் பெண்களுக்கும்
எழுந்து இடம் தருவான்
நடத்துநரிடம் சில்லறையே
நாள்தோறும் தர முயல்வான்
எந்த வரிசையிலும் அவசரமாய்
எப்போதும் முன்னேற மாட்டான்
அதனால்தான்
சுப்ப்புணியைச் சொல்வார்கள்
பிழைக்கத் தெரியாதவனென்று
