கம்பனைக் காண்போம் –69 /வளவ. துரையன்

        இப்பொழுதே வெற்றி

ஆடினர் பாடினர் அங்கும் இங்குமாய்
ஓடினர் உவகை மாநறவு உண்டு ஓர்கிலார்
வீடினர் அரக்கர் என்று உவக்கும் விம்மலால்
சூடினர் முறைமுறை துளவத்தாள் மலர்.

[நறவு=மது; வீடினர்=அழிந்தனர்; விம்மல்=பூரிப்பு] [194]

பெரியவர்களிடம் ஒரு வேண்டுதலுக்காக நாம் செல்கிறோம். முதற்கண் அவர் அவரின் வீட்டில் இருக்க வேண்டும்; நாம் கேட்பதை அவர் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கவலைப் படுகிறோம், இச்சூழலில் அவரைப் பார்த்துவிட்டாலே நம் செயல் நிறைவேறி விட்டதாக நினைத்து மகிழ்கிறோம்.

அதுபோல தேவர்கள் தங்கள் குறைகளை முறையிட திருமாலை வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்துத் தியானம் செய்கிறார்கள். உடனே திருமால் அவர்கள் முன் கருடன் மீது அமர்ந்த கோலத்தில் தோன்றுகிறார். அப்போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சியைக் கம்பன் இப்பாடல் மூலம் வெளிப்படுத்துகிறான்.

”தேவர்களில்  பலர் மகிழ்ச்சியாகிய மதுவை உண்டதால் இன்னது செய்வது எனத் தெரியாமல் ஆடினார்கள்; பாடினார்கள்; அங்கும் இங்குமாக ஓடினார்கள்; அரக்கர்கள் அப்போதே அழிந்து போய்விட்டனர் என எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். திருத்துழாய் அணிந்த திருமாலின் திருவடிகளை முறையாகத் தொழுது தம் தலையில் அணிந்து கொண்டனர்.” என்பது இப்பாடலின் பொருளாகும்.    

திருமாலைப் பார்த்த போதே அரக்கர் அழிந்து விட்டார்கள் என மகிழ்ந்தனர் என்பது நல்ல உள்ள வெளிப்பாடு. ’முறை முறை’ என்பது வந்திருந்தவர்களில் அவரவர்க்கு ஏற்றபடி அதாவது முதலில் இவர் அடுத்து இவர் என்ற முறைப்படி தொழுதலைக் காட்டுகிறது. இது தற்போது நாம் பின்பற்றும் முறையன்றோ?கம்பன் அப்போதே இதைக் காட்டி இருக்கிறான்.