விருட்சம் கவியரங்கில் இன்று வாசித்த எனது கவிதை

நிஜ புத்தரை விடவும்
சாந்தமான முகம்
ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு
மத்தியில் அமைதி அமைதி அமைதி
மூடிய விழிகள் உள்முகமாக
எதையோ
தரிசித்துக் கொண்டிருக்கிறது
கடற்கரையில் போதிமரம் இல்லை
காற்று, நீர், நிலம், நெருப்பு, ஆகாசம் என
ஐம்பூதங்களும் சூழ்ந்திருக்க
அவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்
ஆசையைக் கைவிட்டதும்
அனைத்துமே சொந்தமாகிவிட்டது
அவருக்கு
புத்தம் என்பது பிரபஞ்சமையம்
மெளனத்தின் இறுதி காட்சி
வெட்ட வெளி சூன்யம்
அலைந்து திரிந்த கண்கள்
புத்தரின் காலடியில்
நிலைகுத்தி நின்றது
புத்தருக்கு துறப்பதற்கு
ராஜ்ஜியம் இருந்தது
இல்லாதவன் எதனைத்
துறக்க முடியும்
எல்லாவற்றையும் கைவிடுவதற்கு
ஏதாவது ஒன்று
இருக்க வேண்டுமல்லவா
சிற்பக் காட்சியில்
மெய்மறந்த ஒரு சிறுவன்
காணிக்கையாக
ஒரு ரூபாயை
எடுத்து வீசுகிறான்
வெட்ட வெளியிலிருந்து
ஒருதுளி புத்தரின் மீது
பட்டுத்தெரிக்கின்றது
புத்தரின் கண்கள்
சற்றே திறந்து மூடியது
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி!
