எங்கும் கேட்கும் இசையின் இரங்கல்../தஞ்சாவூர் ஹரணி

         000

இசையெனும் பேரண்டப் பறவையின்
இறகொன்று பிரிந்துவிட்டது

இசையெனும் பேரண்ட மரத்தின்
இலையொன்று உதிர்ந்துவிட்டது

இசையெனும் பேரண்டக் கருவியின்
இழையொன்று இற்று விட்டது

இசையெனும் பேரண்டப் பாடலின்
சுரமொன்று தொலைந்து விட்டது.

இசையெனும் பேரண்ட நதியின்
துளியொன்று உலர்ந்து விட்டது

இசையெனும் பேரண்ட மலரின்
மணமொன்று மறைந்து விட்டது.

இசையெனும் பேரண்ட வானின்
சுடரொன்று கருகி விட்டது,

இசையெனும் பேரண்டப் பூமியின்
துகளொன்று கரைந்து விட்டது.

இசையெனும் பேரண்ட நிலையின்
இசைவொன்றே நிலைத்து விட்டது