வாணி ஜெயராம்! /ஆர்க்கே!

கானமதை காற்றினிலே
வார்த்து வைத்த ஞான ரதம்.

இசையதனை இழைபிரித்து கோர்த்துவைத்த பாட்டுச்சரம்.

மொழிகடந்து குரல்வளத்தால்
செவி நிறைத்த தேனமுதம்.

மனததனை வருடிவைத்து
மலைக்க வைத்த இசை இமயம்.

வருது வருதென வரிசையாய்
விருது குவித்த கானக்கலைவாணி.

இன்குரல் நரம்பெடுத்து
இசையின் வீணையதை
இதயத்துள் மீட்டிவைத்த பாட்டரசி.

எளிமை இனிமை பணிவு தன்னடக்கம்
ஈங்கிவற்றால் மட்டுமே தன்னை அறியவைத்த தனிமெட்டுத் தாரகை.

அப்போதும் இப்போதும் எப்போதும்
எத்தனை பெண்குரல்கள்
வரிசைகட்டி இசைவெளியில்
வந்தாலென்ன …
அத்தனை அத்தனை குரல்களிலும்
வாணியெனும் ராணித்தேனீயின்
கானத்தேன் சொட்டும் சுவையும்
சற்றேனும் கலந்திருக்கும்–
அவரவர் அறிவர் நாமறிவோம்.

மெட்டிற்கு பாட்டும்
பாட்டுக்குக் குரலும்
இனிமைச் சாலையதில்
ஏற்றிவைத்த
கானச்சுடரொளியே!

நீ காற்றில் கரைந்தாய் என்று
சொன்னது யார்?
கானச் சாகரத்திலன்றோ
நீ என்றென்றும் கலந்திருந்து
நிலைத்து நிற்கிறாய் காலமெலாம்!
——-அன்புடன் ஆர்க்கே!