
என்பா (1)
கலைவாணி என்பது இயற்பெயராம் கானத்தில்
தலைவாணி சுரங்களின் எழில் வாணி
உலகில் யாவருக்கும் காற்றே உயிர்மூச்சாம்
வாணிக்கு இசையே மூச்சு.
என்பா (2)
செந்தமிழ் மொழியிலும் சுந்தரத் தெலுங்கிலும்
மனமள்ளும் மலையாள மொழியிலும் இசைத்த
இசைவாணி இன்புறு தேசத்தில் இன்றில்லை
நீர்க்குமிழி வாழ்வென்று உணர்.
என்பா (3)
விருதுகள் குவித்து வைத்தார் குவியலாய்
வருடங்கள் எல்லாம் பாடிக் கவர்ந்தார்
விருதும் விருந்தும் சுவைதான் நிலையில்லை
வாணி மறைந்தும் நிற்பார்.
என்பா (4)
ஏழு சுரங்களுக்குள் வண்ண ஜாலங்கள்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
கடலலைப் போலே வாழ்வின் ஆட்டம்
கலைவாணி இல்லை வாட்டமே.
என்பா (5)
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு கொஞ்சல்
ஒவ்வொரு ராகமும் ஒவ்வொரு கெஞ்சல்
யாவும் யாவும் இயற்கையின் விதியே
வாணியும் இயற்கை வழியே.
என்பா (6)
ஊரெங்கும் உலகமெங்கும் ஒலித்த பாடலாய்
ஊரெங்கும் உலகமெங்கும் வாங்கிய விருதுகள்
பசிதீர்ந்த பறவைகள் கூடுகள் சேரும்
வாணியும் மரணக் கூட்டில்.
என்பா (7)
ஐம்பது ஆண்டுகள் இசையில் அரசாட்சி
திரையின் மொழிகள் யாவிலும் குடியாட்சி
காலத்தின் இசையில் மயங்காதோர் இல்லை
வாணியும் மயங்கிப் போனார்.
என்பா (8)
எங்கோ பிறந்தார் எங்கோ சென்றார்
எங்கோ கற்றார் எங்கோ பாடினார்
பூமியும் ஒன்றும் வானமும் ஒன்று
வாணியே தமிழின் பெண்.
என்பா (9)
மறைந்து பாடுவார் மணக்கப் பாடுவார்
காதுக்குள் நுழைந்து இதயம் இனிக்கும்
உயிர்வாழ வேண்டும் காற்று கண்ணறியாது
வாணியின் இசையும் இதயத்தில்.
என்பா (10)
நிலவும் சூரியனும் நிரந்தரம் என்றும்
வானமும் பூமியும் வாழ்வு முழுக்க
அழிவன அத்தனை உயிரும் நிச்சயமே
வாணியின் இசை வாழும்.
