இலக்கிய இன்பம் 68/கோவை எழிலன்

வந்தாளே காளியம்மா

மாமியார் மருமகள் சண்டையை அழகான கவிதையாக வடித்தெடுத்து இருக்கிறார் கண்ணதாசன். செட்டி நாட்டு மாமியார் மான்மியம் என்ற கவிதையின் சில அடிகள் மாமியார் தன் தம்பி மகள் மருமகளாக வந்திருந்தால் கொண்டு வந்திருக்கக் கூடிய சீதனங்களைப் பட்டியலிட்டு ஒன்றும் இல்லாத மருமகளைச் சாடுகிறாள்.

பாடலுக்கு விளக்கம் தேவையில்லை.

“எட்டுக் கண் விட்டெரிக்க
எந்தம்பி மகளிருக்க
குத்துக் கல்போலே ஒண்ணெ
கூட்டிவந்தோம் வீடுவரை!
ஆறாயிரம் வரைக்கும்
அள்ளி வச்ச சீதனமும்
ஆறு வண்டி சாமானும்
அடுக்கி வைக்க பாத்திரமும்
சொக்க வெள்ளிப் பால்குடமும்
சோதி மின்னும் ரத்தினமும்
பச்சரிசி மூட்டையுடன்
பருப்புவகை அத்தனையும்
எட்டுக்கல் மூக்குத்தியும்
ஏழு பவன் சங்கிலியும்
கண்டசரம் தோடு
காப்பு வைர மோதிரமும்
கண்டாங்கிப் பட்டுவகை
காசியிலே நெய்த பட்டு
மெத்தையுமே பத்துவகை
விரிச்சு வைக்க கம்பளமும்
தேக்கு மரம் கடைஞ்சு
செஞ்சு வச்ச பீரோவும்
தந்திருப்பான் எங்க தம்பி
தன் மகளை தந்திருந்தா
வந்தாளே காளியம்மா
வாய்க்கரிசி இல்லாமல்
அப்பன் கொடுத்த சொத்து
ஆறுநாள் தாங்காது
கப்பலிலே வருகுதுன்னு
கதையா கதைபடிச்சான்”