
காட்டு வழியே ஒரு துறவி போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு புதர்க்கிடையில் ஏதோ தெரிந்தது. அது என்னவென்று பார்த்தார். அது ஒரு வெண்கலப் பானை நிறைய தங்கக் காசுகள். ‘ஐயோ ஆட்கொல்லி இருக்கிறதே ஆட்கொல்லி இருக்கிறதே!’ என்று கூறி அந்த இடத்திலிருந்து விரைந்து சென்றார்.
அந்த வழியே இரு நண்பர்கள் வந்தனர். அவர்களைப் பார்த்து துறவி ‘ஆட்கொல்லி இருக்கிறது அந்தப் பக்கம் போகாதீர்கள்’ என கூறிக் கொண்டே சென்றார். ஆனால் அவர்கள் இருவரும் கேட்காமல் அவ் வழியே சென்று அப் பானையைப் பார்த்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அவர்கள் இருவரும் காசுகளைப் பங்கிட்டுக் கொள்ள முடிவு செய்தனர். பகலில் ஊருக்குச் சென்றால் எல்லோரும் பார்த்து விடுவர் என்பதால் இரவு யாருக்கும் தெரியாமல் ஊருக்குச் செல்ல தீர்மானித்தனர்.
இருவருக்கும் பசித்தது. ஆகவே ஒருவர் காவல் இருக்க ஒருவன் உணவு வாங்கி வரவும் பேசிக் கொண்டனர். உணவு வாங்கி வர செல்பவனுக்கு பெருங்கவலை அவன் ஓடி விடுவானோ என அரைகுறை நம்பிக்கையுடன் சென்றான்.
தங்கத்தின் நிறம், ஒளி, குணம் காத்திருந்தவரை என்னவோ செய்தது. பக்கத்தில் வளர்ந்திருந்த மூங்கிலைப் படீர் என ஒடித்தார். கத்தி போலக் கூர்மையாக இருந்தது. கண்களில் வெறி ஏறிக் காத்திருந்தார். உணவு வாங்கி வந்தவர் அதை வைத்து விட்டு நிமிர்ந்தார். அவர் வயிற்றில் கூரான மூங்கில் பாய்ந்தது. அலறிச் சாய்ந்தார்.
கொலை செய்தவன் கையைக் கழுவி விட்டு உணவை உண்டார். அடுத்த நிமிடம் சரிந்து விழுந்து இறந்தார். உணவு கொண்டு வந்தவர் அதில் விஷம் கலந்தது இவருக்குத் தெரியுமா என்ன?
துறவி மீண்டும் அவ்வழியே வந்தார். ‘ஆட்கொல்லி இருவரைக் கொன்று விட்டதே! இன்னும் எத்தனை பேரைக் கொல்லுமோ? என வருந்திய படியே சென்றார்.
Thanks to Mr. Vijayaraghavan – Editor Kriyasakthi
