ஜெயதேவன் கவிதை

சாலையோரத் தேநீர்க் கடையிலிருந்துதான்
நமக்கான அரசியல் துவங்குகிறது.

அரிசி புடைத்துக் கல்லெடுக்கும் போதே
காய்ச்சி எடுக்கிறாள் அம்மாச்சி
ரேசன் கடைக்காரனை.

டாஸ்மாக்”கில் குப்புறக் கிடப்பவனும்
எதிர்பார்க்கிறான் கலப்படமற்ற போதையை.

முறுக்கு சுற்றும் மாரியம்மாவுக்குத்தான் தெரியும்
ஐம்பது காசின் மதிப்பு
மத்திய நிதியமைச்சகம் வெறும் புள்ளி விபரக் கிடங்கு—’

சாகக் கிடக்கும் அம்மாசி தாத்தாதான்
வாழ்க்கையை நிமிடங்களால் அளக்கிறார்——

வீட்டைவிட்டு வெளியேறச் சொல்லும் அக்கணம்தான்
முப்பது வயது மகனை
முலையிலிருந்து இறக்கிவிடுகிறாள் அறுபது வயது அம்மா—..

மனைவி ஊருக்கு போன பின் இருக்கும் சமையல்
அறையில்தான் மனைவி இருக்கிறாள் உண்மையில்…..

பட்டுப் பாவாடையில் சிரித்துக்கொண்டிருக்கும் பட்டாம்பூச்சிகள்
காற்றில் மிதக்கும் ஒற்றைப் பூச்சிக்காக ஏங்குவாள் சிறுமி—.

வாழ்வின் சாரங்களைஎல்லாம் ஒப்பாரி மூலம்
இறக்கி வைக்கிறாள் மனைவி
அகால மரணமுற்ற கணவனின் ஆம்புலன்ஸில்–

முத்து ஓன்று சொத்தை ஒன்றுமாய் பிள்ளை அமைகையில்
தொலைத்த ஆட்டுக்காகவே அழுகிறார்கள் அப்பாக்கள்–

எல்லா கணங்களும் ஏதோ ஒரு சுமையோடுதான் கழிகிறது….
ஓர் இறகைபோல்
கனமற்ற வாழ்வை நம்மில் யாரும் வாழ்கிறோமா?
வாழ்க்கை இரக்கமற்றது ஒரு கல்லைப் போல….


(மீள்..),..எனது *அம்மாவின் கோலங்கள் *தொகுப்பிலிருந்து