
நடைமேடை
இரண்டில்தான் நாங்கள் கூடுவோம் மாலை ஐந்திலிருந்து ஒருவர் ஒருவராக..
விரைவு வண்டிகள் நிற்காத சிறிய நிலையம் அது
தெருவிலிருந்து சரிவில் ஏறி
உள்ளே நுழைந்து விடலாம்
மேற்புறம் பளபளக்கும் சிமெண்ட் இருக்கை எங்களுக்காக காத்திருக்கும்
ஒரு வேப்பமரம்
ஒரு அரசமரம் இவைகளும் எங்கள் கூட்டணியில் உண்டு ..
அரசியல் தொடங்கி ஆன்மீகம் தொடர்ந்து சிலசமயம் இலக்கியம் என
கடலை கொறித்து
பிஸ்கட் கடித்து
என்ன கதைத்தாலும் முடிவில் மூட்டு வலியையும் நீரிழிவு நோயின் சமீப அளவையும் பகிர்ந்திவிட்டுதான் கூட்டம் கலையும்..
ஏனோ தெரியவில்லை புதிதாக அமைந்திருக்கும் பெஞ்சுகள் போன்சாய்
ரகமாக
குட்டையாக இருக்கின்றன.. சாயும் வசதியும் கிடையாது..
ஒரு மனிதன் கால்களைத் தொங்கவிட்டுக்
கொண்டு ஆசுவாசமாக உட்கார வேண்டாமா..
