மணல் – குறுநாவல். அசோகமித்திரன்/ஜெ.பாஸ்கரன்

1969 ல் கணையாழியில் தொடராக 7 மாதங்கள் வெளிவந்த குறுநாவல் ‘மணல்’. அசோகமித்திரனின் எளிமையான ஆனால் வலிமையான எழுத்துக்களில், மிகவும் யதார்த்தமான பாத்திரப்படைப்புகளும், சம்பவங்களும் நிறைந்த குறுநாவல். கைக்கும் வாய்க்கும் பற்றாத ஏழ்மையான பிராமணக் குடும்பம், அதன் ஏழ்மையின் நிர்பந்தங்கள், அபிலாக்‌ஷைகள், ஒண்டுக்குடித்தனத்தில் உழலும் நிதர்சனங்கள், ஆண் பெண் மனச்சிக்கல்கள் என ஆர்பாட்ட அலங்காரங்களின்றி சம்பவங்களைக் கோர்த்துப் படைத்துள்ள குறுநாவல்.
பிராமணக் குடும்பக் கதையாக எழுதப்பட்டிருந்தாலும், அதில் வரும் மனிதர்களும், சம்பவங்களும் எந்த ஒரு மத்தியதர குடும்பத்திலும் காணக் கூடியவைதான் என்பது அசோகமித்திரனின் எழுத்தில் தெரிகின்றது. பெயர்களையும், இடங்களையும் மாற்றிப் பார்த்தாலும், சம்பவங்களின் அழுத்தமும், மனிதர்களின் இயல்புகளும், சமூக அவலங்களும் எல்லோருக்கும் பொருந்திப்போவது அசோகமித்திரனின் பரந்துபட்ட சமூகப் பார்வையைக் காட்டுகிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு குடும்பம். அப்பாவும் இரண்டு பிள்ளைகளும் சம்பாதித்தாலும், அன்றாடத் தேவைகளுக்கே தடுமாறும் நிலை. சமையலறையே உலகம் என உழலும் அம்மா, இரண்டு குழந்தைகளுடன், இரண்டு மாதம் தாய் வீட்டில் தங்க வந்திருக்கும் பெரிய பெண் வனஜா, தலைப் பிரசவத்திற்காக வரும் இரண்டாவது பெண் பவானி, பள்ளி இறுதித் தேர்வு எழுதி, கல்லூரியில் சேரக் காத்திருக்கும் மூன்றாவது பெண் சரோஜினி எனப் பெண் பாத்திரங்களின் மூலம் நடுத்தர வர்க்கத்தின் உறவுச் சிக்கல்களையும், மனச்சிதைவுகளையும் மிக எளிமையான உரையாடல்கள் மூலம் காட்சிப்படுத்துகிறார் அ.மி.
தன்னால் எதையும் கட்டுப்படுத்த இயலாத கையறுநிலையில் அப்பா (அவரது நிதி நிலைமை அப்படி), திருமணம் செய்துகொள்ளப் பெண் பார்த்து வந்தும் முடிவெடுக்க முடியாத பெரியவன் மணி (அவனது கோபமும், சைக்கிளை எப்போதும் ஒரு ஒழுங்கில்லாமல் நிறுத்தி, தனது காலணிகளைக் கழற்றி வீசுபவன் என்பதிலும் அவனது குணாதிசயம் புரிந்துவிடும்!), குழந்தைகளுடன் விளையாடும் அடுத்த மகன் அப்பு, அமைதியாக வீட்டைப் பற்றியோ, திருமணத்திற்கிருக்கும் தங்கயைப் பற்றியோ கவலைப் படாமல், வேற்று சாதிப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு செல்பவன் – இப்படி இந்த வீட்டின் ஆண்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கின்றனர்!
மணியின் ஜாதகத்தைக் கேட்டு வருபவர், சரோஜினியின் பெரியம்மா, வீட்டு சாஸ்திரிகள், ஆஸ்பத்திரி மேட்ரன், மற்ற நர்சுகள் சிப்பந்திகள் என அத்தனை பாத்திரங்களும் சதையும் இரத்தமுமாக நம்முன் உலா வருகின்றனர். அ.மி. யின் கூரிய பார்வையும், சம்பவங்களும், அவர்களின் உரையாடல்களும் நம்மையும் அவர்களுடன் ஒரு பாத்திரமாகவே மாற்றி விடுகின்றன.
எளிமையான சமையல், பொது மருத்துவ மனையில் சிகிச்சை, முக்கால் ரூபாய்க்கு அரை ரூபாயைத் தேடிக் கொடுத்து, மீதியை பிறகு தருகிறேன் என்று ரிக்‌ஷாகாரனிடன் சொல்வது, மகனிடம் பத்து ரூபாய் வாங்கி வீட்டுக்கு சாமான்கள் வாங்கும் அவலநிலையில் அப்பா என ஒவ்வொரு இடத்திலும் அந்தக் குடும்பத்தின் நிதி நெருக்கடியைச் சொல்லிக்கொண்டே வருகிறார் அ.மி.
இரண்டு அடுப்புகளில் சமையல், ஸ்டவில் பால் காய்ச்சுவது, காப்பி போடுவது, உப்புமா செய்வது, அவசரத்திற்கு, ‘முழுக் கொதி கிளம்பாத குழம்பு’ விடுவது, மசித்த பருப்பு எனக் காட்சிப்படுத்துவதில், அந்தக் கால மத்தியதரக் குடும்பங்களின் வாழ்க்கை முறைகளை அ.மி. மிக நுணுக்கமாக வெளிப்படுத்துகிறார்.
போகிற போக்கில், பாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் கதையை மட்டுமன்றி, கால ஓட்டத்தையும் மிக அழகாகச் சொல்லிவிடுகிறார் அ.மி. அப்பு தன் திருமண விபரத்தை வெளியிடும் தருணம் – அப்பாவே கேள்விகளைக் கேட்டு, பதிலும் சொல்லி, அப்புவின் மெளனத்தின் மூலம் மறுநாள் அவன் வேற்று சாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப்போவதை அ.மி. வெளிப்படுத்துவது வித்தியாசமான உத்தி. அதுபோலவே வனஜாவின் கடிதம் மூலம் தனிக்குடித்தனம் சென்ற அப்புவிற்குக் குழந்தை பிறந்ததைச் சொல்லி, கழிந்துபோன வருடங்களைச் சொல்கிறார்.
அம்மாவின் இறப்புக்குப் பிறகு, சரோஜினியின் தலையில் பொறுப்புகள் சுமத்தப்படுவதை மிக இயல்பாக எடுத்துச் செல்கிறார் அ.மி. சுயநலத்துடன் சகோதரிகள், பொறுப்பில்லாத சகோதரர்கள், இயலாமையில் அப்பா – சரோஜினி என்ன செய்கிறாள் என்பது கதையின் முடிவு.
ஆரம்பம் முதலே சரோஜினியின் பாத்திரம் எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடன் படைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பொறுமைக்கும், ஏமாற்றங்களுக்கும் ஓர் எல்லை உண்டல்லவா? அது சரியா இல்லையா என்பது விவாதத்திற்குரியது. ஆனாலும் சரோஜினியின் முடிவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வித்தியாசமாக முடிக்க வேண்டும் என்று அ.மி. நினைத்திருக்கலாம்!
(கணையாழி 1969 நவம்பர் இதழில் வெளியான சில விமர்சனக் கடிதங்களை எழுத்தாளர் ஸிந்துஜா எனக்கு அனுப்பியிருந்தார். ‘மணல்’ கதையின் முடிவில் பலருக்கும் ஒப்பிதல் இல்லை!).
அருமையான தலைப்பு – மணல் போல ஒட்டாத உறவுகள்! இயல்பான உரையாடல்களும், சம்பவக் கோர்வைகளும். மனிதர்களின் முரண்களும், இயலாமைகளும். 60 – 70 களின் மத்திய வர்கக் குடும்பத்தில் நாமும் இருந்துவிட்டு வந்த உணர்வு நம்மை ஆட்கொண்டுவிடும்! இது அ.மி. யின் எளிய ஆனால் வலிய எழுத்துக்களின் வெற்றி.
தவறவே விடக்கூடாத படைப்பு !