
இன்று நவீன விருட்சம் நிகழ்வில் வாசித்த
கட்டுரை
நன்றி அழகியசிங்கர் . வணக்கம் விருட்சம் நண்பர்களே ‘ இயக்குனர் அகத்தியனின் காதல் கோட்டை படத்தினிலே பார்க்காமலேயே ஏற்பட்ட ஒரு சமூகக் காதல் கதையைப் பார்த்து ரசித்தோம். அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே கு ப ராஜகோபாலன் அவர்கள் ‘ காணாமலே காதல் ‘ என்ற தலைப்பில் ஒரு சரித்திரக் காதல் கதை படைத்துள்ளார்.
காதல் கதைகளுக்கே வேண்டிய அந்த அழகு வரிகளை அங்கங்கே தெளித்து காதல் உணர்வினைப் படிப்பவர்கட்கு ஏற்படுத்தி விடுகிறார்.
சின்னக் கதைதான். ராஜேந்திர சோழன் வட நாடு திக்விஜயம் முடிந்து அவன் நிர்மாணித்த கங்கை கொண்ட சோழபுரத்தில் கட்டியுள்ள சோழீஸ்வரம் சிவன் கோயில் கும்பாபிஷேகம் அன்று நடக்கிறது . வந்திருக்கும் அரச பிரமுகர்களில் ராஜேந்திரனின் சகோதரி குந்தவை , அவள் கணவன் வேங்கியரசன் விமலாதித்யன் ,,அவர்கள் மகன் இளவரசன் ராஜராஜனும் உண்டு.
ராஜேந்திர சோழனின் புதல்வி இளவரசி அம்மங்கா தேவி , அத்தை மகன் இளவரசன் ராஜராஜனை எண்ணி ஏங்குவது கதையின் முதல் பகுதி . இரண்டாம் பகுதியில் அரண்மனைத் தோட்டத்தின் அழகைப் பற்றிய வருணனை . மூன்றாம் பகுதி அங்கு வந்திருக்கும் ராஜராஜன், அம்மங்கா தேவியை நினைத்து ஏங்குவது. இப்படிக் காணாமலே காதல் கொண்டு விட்ட இருவரும் அந்தத் தோட்டத்தில் சந்திப்பதில் கடைசிப் பகுதி .முடிகிறது கதை.
கதையின் அழகே அவர்களின் காதல் உணர்வுகளை ஆசிரியர் வெளிப்படுத்தும் விதமும் அதற்கு ஏற்றபடி அமைந்துள்ள அந்தத் தோட்டத்தின் அழகைப் பற்றிய வருணனைகளும் தான். நா. பார்த்தசாரதி கதைகளில் படித்த காதல் வருணனைகளுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறார் கு ப ரா அவர்கள். நான் இந்தக் கதையில் மிகவும் ரசித்த சில இடங்களை. அப்படியே பகிர்ந்து கொள்வதே இந்த மூத்த எழுத்தாளருக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் என்று நினைக்கிறேன்
முதல் பகுதியில் அம்மங்கா தேவியின் காதல் உணர்வுகள் .
யானையேற்றம், குதிரையேற்றம் , வில் வித்தை முதலியன கற்றவளுக்கு அத்தையைக் கண்டவுடன் , ஒரு சாதாரணப் பெண் போன்று ஏன் வெட்கம் ஏற்பட வேண்டும் . ‘அத்தானைப் பார்த்தாயா ‘ என்று கேட்டவுடன் , அவளை அறியாமல் மெய் சிலிர்த்தாள். முகம் சிவக்க மௌனமாகத் தலை குனிந்து கொண்டு நின்றாள். அவனது நடையுடை பாவனைகளை தன் மனோபாவனைப்படி கற்பனை செய்து பார்த்துக் கொண்டே இருந்தாள் .தன்னைப் பார்த்ததும் தன்னைப் பற்றி அவன் என்ன எண்ணுவான் என்பதையும் எண்ணிப் பார்க்க முயன்றாள் .என்றுமில்லாத வழக்கமாக அன்று அம்மங்கா தேவி நிலைக்கண்ணாடி அருகில் வெகுநேரம் நின்று தன்னைச் சீர்திருத்திக் கொண்டது தோழிகளுக்குக் கேலி செய்ய இடம் கொடுத்தது .
மிகவும் எளிமையான வரிகளில் காதல் வயப்பட்ட ஒரு பெண்ணின் உணர்வை சிறப்பாகச் சித்தரித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.
அடுத்த பகுதி. அந்த அரண்மனைத் தோட்டத்தின் அழகு. கோயில் கும்பாபிஷேகத்திற்குப் போகாமல் இந்த அரண்மனைத் தோட்டத்தில் இயற்கையின் அழகை ரசித்தபடி, ஒருவேளை அம்மங்கா வருவாளோ இங்கே என்ற எதிர்பார்ப்பில் ராஜராஜன் . இப்போது இந்தக் காதல் உணர்வை ஏற்றி விடும் அந்தத் தோட்டத்தின் அழகு கு ப ரா வார்த்தைகளில் .
‘ தோட்டத்திற்குள் குறுக்கும் நெடுக்குமாக சிறு சிறு கால்வாய்கள் ஓடிக் கொண்டிருந்தன. அவைகளில் புதுவெள்ளத்தின் செந்நிறமான ஜலம் மிதந்து சென்று கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் நீரும் நிழலுமான தோற்றம். ஆனி மாதம். இளவேனில் எங்கும் பரவி கனிந்து நின்ற பருவம். அந்த இயற்கை லாவண்யம் அவனுடைய புலன் வாயில்களில் தீப் போலத் தாக்கி அவனது பால் உள்ளத்தைப் பொங்கச் செய்தது . அந்தப் பூரிப்பில் அவன் பரவசம் ஆனான். அவன் மட்டுமா, இந்த இயற்கை வருணனையில் நம்மையும் பரவசப் படுத்தி விடுகிறார் ஆசிரியர். அந்த அரண்மனைத் தோட்டத்தின் வேனிற்பருவத்து நிழல் நம்மையும் குளிர்விக்கிறது . .
ராஜராஜன் அந்த அரண்மனைத் தோட்டத்தில் மெய்மறந்து அமர்ந்திருந்தான். இப்போது அம்மங்கா தேவி நினைவு. சோழ நாட்டின் இயற்கை அழகு சோழ நாட்டின் இளவரசியின் நினைவையும் இழுத்து வரும்தானே.
.
‘இந்த எழிலின் நடுவே எழிலைத் தவிர வேறென்ன பிறக்க முடியும். மேகத்தில் மின்னலைத் தவிர வேறென்ன பிறக்கும். என்னைச் சுற்றியிருக்கும் இந்த சுகச் சூழலின் சாரமாகத்தான் இருப்பாள் அம்மங்கா , அதில் என்ன சந்தேகம். ‘என்று சொல்லிக்கொண்டான் ராஜராஜன்.
‘மரம் செடி கொடிகளில் இருக்கும் தளதளப்பின் ஈரம் நித்திய யவ்வனத்தின் பசையைக் கொண்டிருக்கிறது . காதலும் அதன் கனிவும் இங்கே நிழல் தட்டி நிற்கின்றன. இந்த சவுந்தரியம் என் கண்ணுக்கு அம்மங்கா தேவியின் சாயல் கொண்டது போல் தென்படுகிறது . இது என்னுடையது. இந்த நாடு என்னுடையது . அம்மங்கா என்னுடையவள். அம்மங்கா ‘ .
ராஜராஜன் மெய்மறந்து கத்தி விட்டான். வெட்கம் கொண்டவனாய் சுற்று முற்றும் கவனித்தான். யாரும் அருகே இருந்ததாகத் தெரியவில்லை.
ஆனால், மரத்தின் பின்னால் பதுங்கியிருந்து அம்மங்கா தேவி ராஜராஜன் பேசியதைக் கேட்டுக் கொண்டு இருந்தாள் . அவளும் கோயிலுக்குப் போகாமல் இந்தக் குமரன் வருவானா என்று தோட்டத்துக்கு வந்தவள் தானே. அவள் மார்பு அடித்துக் கொண்ட வேகம் அவளைத் திடுக்கிடச் செய்தது . ஒரு நிமிஷம் கூட அங்கே பதுங்கி இருக்க முடியாது என்று அவளுக்குத் தோன்றியது .
சோலை மலரைப் போல தன் உள்ள இதழ்களை விரித்து மணத்தை வெளியே வீசி எறிந்தாள்.
அந்தத் தியாகத்திற்குப் பிறகு அவள் மனது பளு குறைந்ததுபோல் லேசாக மிதந்தது.
ஆனால் ஒரு கவலையும் இருந்தது. ஒரு பரபரப்பும் துடிப்பும் கூட இருந்தது. அந்த மணம் காற்றில் கலந்து வீணாகாமல் ராஜராஜன் புலனில் போய்த் தாக்குமா என்று ஏங்கினாள்.
ராஜராஜன் ‘ அம்மங்கா ‘ என்று பிரிவாற்றாமை கொண்ட பறவையைப் போல் அலறியதைக் கேட்டுக் கொண்டிருந்த அம்மங்கா தேவி இளகினாள் .அந்தத் தாபம் நிறைந்த அழைப்புக்குப் பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை அவளால். மெள்ள மறைவில் இருந்து வெளியே வந்தாள் .அவளது புது ஆடை செய்த சப்தத்தைக் கேட்டு ராஜராஜன் திரும்பிப் பார்த்தான். அழகு அவன் முன்னே உருவெடுத்து வந்து நின்றதோ என்று பிரமை கொண்டான்.
‘அம்மங்கா ‘ என்றான் ராஜராஜன்.
‘அத்தான் ‘ என்று மெல்லிய குரலில் அம்மங்கா தேவி பூ திறந்து பேசுவது போல் மொழிந்தாள்.
அவ்வளவுதான். பலஹீனமான வார்த்தைகள் அவர்களது நெஞ்சிலிருந்து கிளம்பி உதடுகளின் அருகே வந்து வெட்கிப் பின் வாங்கின. அந்த மஹா மௌனத்தில் இருவர் உள்ளங்களும் உரையாடின .
நன்றி வணக்கம்.
