பேராசிரியர் சு. பசுபதி, சென்னையில் 1940 செப்டம்பர் 21 இல் பிறந்தவர்/முனைவர் மு.இளங்கோவன்.

பேராசிரியர் சு. பசுபதி, சென்னையில் 1940 செப்டம்பர் 21 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர்: ஜெயலட்சுமி, வாங்கல் எம். சுப்பராயன் ஆவர். சு. பசுபதியின் இளமைக்கல்வி சென்னை இராமகிருஷ்ண மிஷனில் அமைந்தது.

சு. பசுபதி சென்னைப் பல்கலைக்கழகத்தின் கிண்டிப் பொறியியல் கல்லூரியில் படித்துத் தொலைத்தொடர்புத் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர் (1963). இவர் சென்னை ஐ.ஐ.டியில் முது தொழில்நுட்பம் (எம்.டெக்) படித்தவர் (1966). அமெரிக்காவின் ஏல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு பட்டம் பெற்றவர்(1972).

1972 முதல் 2006 வரை டொராண்டோ பல்கலைக்கழகத்தில் மின்னியல் கணினித்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தகைசார் பேராசிரியராக அப் பல்கலைக்கழகத்தில் பணியைத் தொடர்பவர்.

சென்னை ஐ.ஐ.டி-யில் பயின்றபொழுது நோபல் பரிசு விஞ்ஞானி சி.வி. இராமன் அவர்களின் திருக்கையால் பரிசு பெற்ற பெருமைக்குரியவர் (1966). 2010-இல் சென்னை ஐ.ஐ.டி-யின் புகழ்பெற்ற பழைய மாணவருள் ஒருவராய்த் (Distinguished Alumnus Award) தேர்வு செய்யப் பெற்றவர்.

1951- இல் பரலி சு. நெல்லையப்பர், நாரண. துரைக்கண்ணன் போன்றோரின் முன் தொடங்கப்பெற்ற பாரதி கலைக்கழகத்தின் (சென்னை -1) வாழ்நாள் உறுப்பினர் இவர்.

பேராசிரியர் சு. பசுபதி அவர்களின் துணைவியார் பெயர் ஜெயா பசுபதி ஆகும். இவர்களுக்கு வாணி என்ற ஒரு மகள் உண்டு.

‘சந்தவசந்தம்’ இணையக் கவிதைக் குழுமத்தில் பல ஆண்டுகளாகக் கவிதைகள், யாப்பிலக்கண விளக்கங்கள் எழுதிவருபவர். டொராண்டோவில் 2006 – இல் நடந்த திருமுறை மாநாட்டில் “நாயன்மார்கள்” கவியரங்கம், 2016 – இல் நடந்த தொல்காப்பியக் கவியரங்கம் ஆகியவற்றிற்குத் தலைமை வகித்து நடத்தியவர். கனடாவில் நடைபெறும் தமிழ் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளில் ஆர்வமாகக் கலந்துகொண்டு, தம் பங்களிப்பை நல்குபவர்.

சு. பசுபதியின் படைப்புகள் கலைமகள், அமுதசுரபி, கோபுரதரிசனம், அம்மன் தரிசனம், பாரதி கலைக்கழக இதழான “கவியமுதம்” போன்ற ஏடுகளிலும், “திண்ணை’ இணைய இதழிலும் வெளிவந்துள்ளன.

பேராசிரியர் சு. பசுபதி அவர்களுக்குத் தமிழிலும் இசையிலும் நல்ல ஈடுபாடு உண்டு. இத்துறை சார்ந்த பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

  1. கவிதை இயற்றிக் கலக்கு,(இரண்டாம் பதிப்பு, அச்சில்). 2. சங்கச் சுரங்கம் – 1,3.. சங்கச் சுரங்கம் – 2, 4.சொல்லயில் (சொல்+ அயில் = சொல்லயில்; அயில் = கூர்மை/வேல்) இவர்தம் தமிழ்க் கொடையாகும்.

கவிதை இயற்றிக் கலக்கு: நூல் அறிமுகம்

மின்னணுவியல் துறையில் பணிபுரிந்தாலும் தமிழின்மேல் பேராசிரியர் சு. பசுபதி அவர்களுக்கு மிகுந்த பற்று உண்டு. குறிப்பாகத் தமிழ் யாப்பு சார்ந்து மிகுதியும் எழுதியவர். முறையாக வகுப்பெடுத்துத் தமிழ் யாப்பிலக்கணங்களை மாணவர்களுக்கு விளக்கியவர். பல்கலைக்கழகத்தில் தம் பணிகளுக்கு இடையே இவர் பிறதுறை மாணவர்களுக்குத் தமிழ் யாப்பிலக்கணங்களின் அடிப்படைகளைப் புரியவைத்து, பலரை மரபுப்பாடல் புனைய வைத்தவர். யாப்பு என்றால் அஞ்சியோடும் கூட்டத்தை அன்பொழுக அழைத்து, அவர்களுக்கு எழுத்து, சீர், அசை, சீர், தளை, அடி, தொடை பயிற்றுவிக்கும் பணியை ஈடுபாட்டுடன் செய்தவர்.

பேராசிரியர் சு. பசுபதி இணையக் குழுக்களில் தம் யாப்பிலக்கணக் கருத்துகளை எழுதியதால் உலகம் முழுவதும் பலர் பேராசிரியர் பசுபதியிடம் ஐயங்களை எழுப்பித் தெளிவுபெற்றுள்ளனர். அந்த வகையில் கவிதை இயக்கிக் கலக்கு என்ற தலைப்பில் ஆறாண்டுகள் பல்வேறு நிலைகளில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டில் இந்த நூலை வெளியிட்டுள்ளார். 384 பக்கங்களைக் கொண்ட இந்த நூல், யாப்பிலக்கணங்களை எளிமையாகப் புரியவைக்கும் நூல். தேவையான விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும் பயிற்சிகளும் இந்த நூலில் இருப்பதால் யாப்பு ஆர்வலர்களுக்கு இந்த நூல் மிகச் சிறந்த கையேட்டு நூலாகும்.

பேராசிரியர் சு. பசுபதி, யாப்பிலக்கணம் குறித்த தம் கட்டுரைகளை உருவாக்கும் முன் தம் காலத்திற்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த அனைத்துவகையான இலக்கண நூல்களையும் ஆழமாகக் கற்று, தக்கவாறு சிந்தித்து யாப்பிலக்கணத்தை எளிமைப்படுத்தி இந்த நூலில் வழங்கியுள்ளார்.

One Comment on “பேராசிரியர் சு. பசுபதி, சென்னையில் 1940 செப்டம்பர் 21 இல் பிறந்தவர்/முனைவர் மு.இளங்கோவன்.”

  1. சிறந்த அறிஞர், கவிஞர், பேராசிரியர் , தமிழ்க் காதலர் அமரர் பசுபதி அவர்களின் ஆன்மா சாந்தி பெறும். ஓம் சாந்தி.

Comments are closed.