
லா.ச.ரா., அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், வண்ணதாசன் ஆகியோரின் பத்து சிறந்த சிறுகதைகள் கொண்ட, “முத்துக்கள் பத்து” தொகுப்புகளை வாசித்திருக்கிறேன். அந்த வரிசையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு, வெளிவந்துள்ள முத்துக்கள் பத்து – அழகிய சிங்கரின் சிறந்த பத்துக் கதைகளைக் கொண்ட தொகுப்பு!
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ‘நவீன விருட்சம்’ பத்திரிகையை தனியொரு மனிதராக வெளியிட்டுக்கொண்டிருக்கிறார். இது ஒரு இமாலய சாதனை என்றே சொல்ல வேண்டும்! விருட்சத்தில் எழுதாத எழுத்தாளர்களே இல்லை என்னும் அளவிற்கு, அன்றைய மூத்த படைப்பாளிகள் முதல் இன்றைய புதிய நவீனத்துவ எழுத்தாளர்கள் வரை அனைவரின் படைப்புகளையும் சிங்கர் தனது பத்திரிகையில் இடம்பெறச் செய்திருக்கிறார். அவரது அனுபவமும், மாறுபட்ட சிந்தனைகளும், பரந்துபட்ட வாசிப்பும் இத்தொகுப்பின் ஒவ்வொரு கதையிலும் வெளிப்படுகிறது. எளிமையான நடை, தினசரி வாழ்க்கையில் நாம் காணும் மனிதர்கள், அன்றாடம் நம் கவனத்திலிருந்து தப்பிவிடும் சாதாரண நிகழ்வுகள், சின்னச் சின்ன மனவிகாரங்கள் என வாழ்க்கையின் ஊடான ஒரு சுவாரஸ்யமான பயண அனுபவத்தைக் கொடுக்கும் கதைகள்!
எழுத்தாளர் ஸிந்துஜா தனது வாழ்த்துரையில், “அழகிய சிங்கரின் கதைகள் மேலை நாட்டுச் சரக்குகளின் பாதிப்பில் வெளியாகாமல், இம்மண்ணில் காலூன்றி நிற்கின்றன. இதன் விளைவாக அவர் கதைகளில் வாசகரை ஏமாற்றி விடக்கூடிய எளிமை சர்வ சாதாரணமாகக் கவிந்திருக்கிறது. பொதுவாக மற்றவர் கவனத்தைக் கவரும் பொருட்டு எழுப்பும் இரைச்சல்கள், படாடோபங்கள் ஆகியவற்றை அழகியசிங்கர் கவனமாகத் தவிர்த்திருக்கிறார்” என்று சொல்வது, இத்தொகுப்பின் அத்தனை கதைகளுக்கும் பொருந்தும்!
வேலையில்லாப் பட்டதாரி, வேலைக்காக ஒரு இண்டர்வியூவிற்குப் போகும்போது, ஒரு கால் செருப்பு அறுந்துவிடுகிறது. சாலையோர வயதான செருப்பு தைப்பவனிடம் சரி செய்துகொண்டு செல்கிறான். டைப்ரைட்டிங் மிஷின் விலை, அது வைக்கப்பட்டிருக்கும் ‘டேபிள்’ விலையெல்லாம் இவனுக்குத் தெரியவில்லை.. ஹயர் பாஸ் செய்திருந்த போதிலும்! “நான் மெஷின் வாங்கப் போவதில்லை… என்னால் அது முடியாது. எனக்கு டைப் அடிக்க மட்டும் தெரிஞ்சாப் போதும்” என்று பதில் சொல்லிவிட்டு, வேலை கிடைக்காமல் வெளியேறும் இளைஞனைப் பற்றிய கதை “செருப்பு” – அவன் மனதில் ஓடும் எண்ணங்களே கதையின் ஜீவனாக இருக்கிறது. சுயமாக உழைத்து சம்பாதிக்கும் வயதான செருப்பு தைப்பவரைப் பார்த்து வெட்கப் படுகிறான். தன்னிலும் இளைய வயது, சுறுசுறுப்பாக வேலை செய்யும் பி.ஏ. வைப் பார்த்து, ‘கெட்டிக்காரனாக இருக்க வேண்டும்’ என்று நினைக்கிறான். எல்லாச் சூழல்களிலும் தன்னைப் பொருத்திப் பார்க்கும் வேலையில்லாத பட்டதாரியின் உளவியலை நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார் சிங்கர்.
திருமணத்திற்கு முன்பே மருத்துவரிடம் போகவேண்டிய நிலையில் காதலர்கள் – அவர்களது உரையாடல்கள் மூலம், கோபம், வெறுப்பு, இயலாமை, பரிவு, பயம் என எல்லா உணர்வுகளையும் காட்டிவிடுகிறார் ஆசிரியர். ‘கை விட்டுவிட மாட்டியே?’ கேள்வியில் வாழ்வின் நிலையாமை தொக்கி நிற்கிறது. ‘இன்றைய இளைஞர்களுக்கு எல்லாமே அவசரம்’ என்னும் டாக்டரின் குரலில் சமூக அவலம் தெரிகிறது!
‘அங்கிள்’ இத்தொகுப்பின் ஆகச் சிறந்த கதையாக நான் கருதுகிறேன். தன் குழந்தையை மனைவியின் அக்கா வீட்டில் வளர்க்க விட்டுவிடும் பெற்றோர் பற்றிய கதை. இதை ஏற்றுக்கொள்ள முடியாத தந்தை; அக்கா நன்கு பார்த்துக்கொள்வாள் என்னும் தாய். இருவருக்கும் இடையே நடக்கும் மனப் போராட்டமே கதையின் கரு. கதையின் முடிவில் சிங்கர் வைத்திருக்கும் ‘திருப்பம்’, அவர் ஒரு தேர்ந்த கதைசொல்லி என்பதைக் காட்டுகிறது!
‘மன்னிக்க வேண்டுகிறேன்’ – குற்ற உணர்வில் உழலும் ஆட்டோ டிரைவர், ‘ரோஜா நிறச் சட்டை’ யின் துர் அதிர்ஷ்டத்தினால்தான், அலுவலகத்தில் சண்டைகள் வருகின்றன என நம்பும் பத்மனாபன், ‘பின் பின்கதைச் சுருக்கம்’ – பிசினஸில் பணம் இழப்பு, குடி, சந்தேகம் என ஏதோ ஒரு காரணத்தினால் விவாகரத்து கேட்கும் மனைவி, வருந்தும் கணவன் இவர்களின் மனப் போராட்டங்கள், ‘லாக்கர்’ – வங்கி லாக்கரில் தெரியாமல் பூட்டப்பட்டுவிடும் மிஸஸ் சாரி, விளைவுகளைச் சந்திக்கும் வங்கி அதிகாரி, ‘தேடல்’ – ஞாபக மறதியுள்ள சாரங்கன் வங்கியிலிருந்து காணாமல் போகும் குழப்பம், ‘ஆண்களை நம்பமாட்டாள்’ – ‘குட் டச். பேட் டச்’ எல்லாம் கற்றுக்கொடுக்கும் பாட்டி! இந்த மாந்தர்களை நாம் ஏதோ ஒரு தருணத்தில் சந்தித்திருப்போம். அவர்களைப் பற்றி, எளிய நடையில் சுவாரஸ்யமாகக் கதை சொல்கிறார் சிங்கர். எந்த ஒரு சாதாரண சம்பவத்தையும், அதன் பின்னணியையும் அசாதாரணமான எளிய கதையாகப் படைப்பதில் சிங்கர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.
‘செல்வி’ கதை கொஞ்சம் நாடகத் தன்மையுடன் இருக்கிறது. கதை சொல்லியின் அமெரிக்கப் பயண அனுபவம், இப்படி ஒரு செயலைத் தூண்டுமா என்பது கேள்விக்குரியது. எல்லோராலும் தூற்றப்படும் கதை சொல்லிக்கு என்ன ஆகும் எனபதை ஒரு பரபரப்புடன் சொல்லியிருக்கிறார் சிங்கர்.
வாசிக்கலாம்!
