திமிரி சிறுகதைத் தொகுப்பு/
நெய்வேலி பாரதிக்குமார்

திமிரி சிறுகதைத் தொகுப்பு

_ஐ. கிருத்திகா
ஸீரோ டிகிரி வெளியீடு
Rs 220

விமர்சனம்
நெய்வேலி பாரதிக்குமார்

எழுத்தாளர் ஐ..கிருத்திகா அவர்களுடைய ‘திமிரி’ சிறுகதை நூலை வாசிக்க வேண்டும் என்று கேட்டபொழுது பெருமழையையும் பொருட்படுத்தாமல் சிரமம் பாராமல் உடனே அனுப்பி வைத்தார். நிதானமாக நேரம் எடுத்து வாசிக்க வேண்டிய கதைகள் என்பதால் நான்தான் சற்று தாமதமாக வாசித்தேன்.

மிகச் சமீபத்தில் அ. வெண்ணிலா அவர்கள் எழுதிய இந்திர நீலம் சிறுகதைத் தொகுப்பை வாசித்துவிட்டு அதன் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் இருந்தேன். அதற்கு அடுத்து திமிரி வாசிக்கக் கிடைத்தது தற்செயல் என்றாலும் தமிழ் இலக்கிய உலகில் இரண்டுமே மிக முக்கியமான நூல்கள் எனலாம். பெண்ணின் அக உலகை பெருவெடிப்புக்கு இணையாக வெண்ணிலா அவர்கள் நிகழ்த்திக் காட்டியபிறகு ஒரு பூ மலர்வது போல கிருத்திகா மென்மையாக அதே சமயம் மிக வலிமையாக திமிரி தொகுப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

`அம்மாவின் அழகை வியத்தல் என்பது மகளின் பார்வையினூடே வாசிக்கும்போது முற்றிலும் புதிதாகத்தான் இருந்தது. பதின்ம பருவத்தில் பெண்ணுடலில் இயற்கை நிகழ்த்தும் மாற்றங்கள் உளவியல் சிக்கல்கள், உலகம் அவர்கள் மீதும் அதற்கு மாறுபாடாக பெண்கள் இவ்வுலகை அணுக வேண்டிய புதுவிதமான பதட்டத்தையும் மிக நுட்பமாக இருட்டில் ஒளிரும் ஆயிரம் கண்கள் என்கிற சிறுகதையில் எழுதி இருக்கிறார்.

உண்மையில் ஒரு பெண் பூப்படையும் சமயம் இரண்டு ரகசிய உலகங்கள் உருவாகின்றன ஒன்று அப்பெண்ணினுடையது மற்றொன்று அப்பெண்ணின் தாயினுடையது. இரண்டுமே தண்டவாளங்கள் போல தனித்தனியான உலகங்கள் அவை. ஆனால் இணைந்தேதான் பயணிக்க வேண்டும். இந்த இரண்டு உலகத்தின் ஒருபகுதியை உணர்த்தி இருக்கிறார். ஆனால் அவர்கள் மீது மேயும் கண்கள் ’ஒளிரும்’ கண்களா? எனக்கு இந்த தலைப்புதான் நெருடுகிறது.. அவை அச்சுறுத்தும் கண்கள் மிரட்டும் கண்கள் என்று இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

காட்சி அனுபவம் என்பது ஒரு கதையை ஒருபடி மேலே உயர்த்தும். கிருத்திகாவின் கதைகளில் நுட்பமான காட்சி வர்ணனை சட்டென அந்த இடத்தில் நம்மை நிறுத்துகிறது. தூங்கி எழும் பெண்களின் சங்கிலி ஜாக்கெட் கொக்கிகளில் மாட்டி பின் அதை அனிச்சையாக விடுவிப்பதை பலமுறை கண்டிருக்கிறேன். ஆனால் இம்மாதிரி நுட்பமாக அதை பதிவு செய்தல் அரிது. நான் அந்த காட்சிக்குள் நின்றேன்.
கிருத்திகா அவர்களின் எழுத்தில் பல இடங்களில் நம்மை உணர முடிகிறது.

சந்தேகங்களை, கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் பெண்ணுக்கு எப்பொழுதுமே இருந்து கொண்டே இருக்கிறது. திருமணம் ஆகும் வரை எல்லா பார்வைகளுக்கும் செயல்களுக்கும் ஏதேனும் ஒரு இடத்தில் இருந்து கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கிறது. பின் இன்னுமா குழந்தை இல்லை அப்புறம் பிள்ளையை இப்படியா வளர்ப்பே, மாப்பிள்ளை தகையலையா, பொண்ணுக்கு விசேஷம் ஏதுமில்லையா இப்படி கேள்விகள் ஓய்வதே இல்லை கணை அருமையான தலைப்பு எனக்குப் பிடித்தமான கதை அதுவும் அந்த அண்ணியார் என்னும் சொல்லாடல் அழகு…
ஆரம்பத்தில் ஒரு கவிஞராக இருந்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் சில வரிகளை வாசிக்கும் போது எழுகிறது. கனவு கதையில் “குளிரை நினைச்சுப் பயப்படாதடி போர்த்திக்கோ.. இதமா இருக்கும் நீர்க்கம்பளம்” என்னும் வர்ணனையோடு நிறுத்த மனம் வரவில்லை “பூ வேலைப்பாடு செய்த நீர்க்கம்பளம்” என்று எழுதுகையில் அவருக்குள் இருக்கும் கவிஞர் அகப்படுகிறார்.

கொண்டாலத்தி கதையிலும் விரல் பட்டால் சட்டென வழிந்துவிடும் நீர் மணிகள். காற்று பட்டால் கலைந்துவிடும் ஜலத்துணுக்குகள்.. என்று நீளும் வரிகள் ரசிக்க வைக்கின்றன.
ஆனால் அதே கதையில் இறுதிப்பகுதியில் வரும் வரிகள் என்ன ஒரு யதார்த்தமான பெண்ணின் மன உணர்வுகளின் பிரதிபலிப்பு என யோசிக்க வைக்கின்றன. ஒருவேளை எனக்கு கிடைத்த பெயர் என்னைப் பாதித்திருந்தால் நான் தோண்டியிருப்பேன் வலியில் துடித்திருப்பான் ஆனால் .பொன்னான தருணங்களை இழந்திருப்பேன் என்கிற வரிகள் அத்தனை உண்மையானவை.

பேச்சின் அடிநாதமான மொழிக்கு ஒரு வசீகரம் இருக்கிறது என்கிற வரிகளை அவரது சொல்லாடல்களே உணர்த்துகின்றன.

‘புருஷா மிருகம், பெரீம்மா, திமிரி என்று…
கூடடைதல், பெரீம்மா, கணை ஆகியன மிக முக்கியமான கதைகள் உளவியல் ரீதியான அலசல் முதிர்ச்சியோடும் யதார்த்தத்தோடும் எழுதப்பட்ட கவனமான கதைகள்
பிரபஞ்சன் சொல்லுவார் பெண்கள் எழுதும் கதைகளில் சமையல் குறிப்புகளோ, வீட்டு உபயோகக் குறிப்புகளோ இல்லாமல் ஒரு தொகுப்பையும் வாசித்ததில்லை என்பார். அது கேலியல்ல அங்கிருந்து அவர்களால் வரமுடியவில்லை என்னும் வருத்தம்

ஒரு பெண்கள் விடுதியில் அமர்ந்து ஒவ்வொரு பெண்ணின் அக உலகையும் தரிசிக்கும் அனுபவத்தை கிருத்திகாவின் திமிரி அளிக்கிறது.