அந்த 80 வயது வாசகர்!/கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

மூன்று நாட்களாக காய்ச்சல். அந்த நேரம் பார்த்துதான் இந்து தமிழ் திசையில் யாமறிந்த புலவன் நூலுக்கு நேர்த்துயான விமர்சனம் வந்தது. காய்ச்சலுடன் ஜலதோஷமும் சேர்ந்துகொண்டதால், கண்ணகளில் நீர் விடாமல் வடிந்து கொண்டே இருந்தது.
எல்லா வேலைகளையும் தூக்கி வைத்துவிட்டு அந்தத் துயரத்தை அனுபவித்துகொண்டிந்தேன்.
எனது துயரங்களை பலருக்குத் தெரிவிப்பதில்லை. ஆகவே விமர்சனம் வந்த அன்று காலையே உற்சாகமாக ஒருவர் பேசினார். கூடுதலாக வாட்ஸ் அப் இல் பத்திரிகை செய்தியை படம் பிடித்து அனுப்பி இருந்தார். அதைத் தொடர்ந்து தொலைபேசியும் செய்து வாழ்த்தியவர்,நூலையும் வாங்கினார்.
இப்படி அன்று முழுக்க உடல் சோர்விலும் என்னை உற்சாகப்படுத்திய குரல்கள் அநேகம். ஒரு வெளிநாட்டு நபர் இரவுவரை நான் விமர்சன ஒளிநகலை ஃபேஸ்புக்கில் போடவில்லை என்பதை உணர்ந்து இரவு உள்பெட்டியில் செய்தி அனுப்பி, விமர்சனம் வந்துள்ளதை இன்னும் பார்க்கவில்லையா? எனக் கேட்டார். பார்த்தேன் என்றேன். இரவு வரை அதன் நகலை நீங்கள் பகிரவில்லை. ஆகவேதான்செய்தி அனுப்பினேன் என்றார்.
அவரும் அதை ஸ்கேன் செய்து அனுப்பி வைத்தார். அதைத்தான் நான் எடுத்து இரவு பதிவில் பயன்படுத்தி இருந்தேன். அவரும் அதற்கு லைக் போட்டார்.
இப்படி அன்று பலரும் செய்தியை ஸ்கேன் செய்து அனுப்பிவைத்தார்கள். எழுதும் நிலையில் எனது உடல் ஒத்துழைக்கவில்லை. ஆகவேதான் தாமதம் எனத் தெரிவிக்கவில்லை.
எனக்கு அப்போது ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.விமர்சனம் வந்துள்ளது எனது நூல் குறித்து. ஆனால் இவர்கள் இவ்வளவு உற்சாகம் பெறுகிறார்களே? எப்படி?
எந்தளவுக்கு ஒருநூலை, ஒரு வேலையை நேசித்தால் இப்படி தீயாய் வேலை பார்ப்பார்கள் இவர்கள் என யோசித்த போது மீண்டும் கண்களில் நீர் வழிந்தது.
ஆனால் அது ஜலதோஷத்தால் வந்த கண்ணீர் இல்லை. ஆனந்தத்தால் வந்தது.
இன்னொரு கதையை சொல்லியே ஆகவேண்டும். ஒருவர் விருகம்பாக்கம் சாய் நகரில் இருந்து அழைத்தார். நூல் கேட்டார். தொகை ஜிபே செய்ய தெரியாது. விபிபி அனுப்புங்கள் என்றார். இல்லை எனில் மணி ஆர்டர் செய்கிறேன் என்றார்.
நேரில் வந்து கொடுத்து பணம்பெற்றுக் கொள்கிறேன் என்றேன். அன்றே அனுப்புங்கள் என்றார். அவரிடம் காய்ச்சல் கதை சொல்ல முடியவில்லை. ஆனால் மாலையே உடல் மோசமானது.
அடுத்தநாள் அவர் காலை 7 மணிக்கு அழைத்தார். எடுக்கவில்லை. 8 மணி அடித்தார். எடுக்கவில்லை. 10மணி. பிறகு மாலை 7. பின் 8. அதன் பின் மறுநாள். இப்படி 3 நாள்கள் இடைவிடாமல் அழைப்பு.
மூன்றால் நாள் எடுத்தேன்.நூல் கேட்டார். விவரத்தை சொன்னேன். இன்று கிடைக்குமா? என்றார். அப்போது இரவு 8 மணி. கிடைக்கும் சார் என்றேன். ஆள் அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு நானே சாய் நகருக்கு அவர் வீடு தேடிப் போனேன். அவர் நம்பி இருக்கமாட்டார். ஆனால் 9 மணிக்குப் போய் நின்றேன். சந்தோஷமாக உள்ளே அழைத்தார். ஹாலில் உள்ள ஒரு சாமி படத்தின் கீழ் பணம் தயாராக இருந்தது. அவர் மனைவி எடுத்து கொடுத்தார். அவர் பார்சலை பிரித்து படிக்க உட்கார்ந்தார். அவருக்கு வயது 80.
நான் அவரை விசாரித்தேன். பாரதி விஜயம் படித்திருக்கிறேன். பிரமாதமான புத்தகம். இந்த ஆசிரியரை எனக்குப் பிடிக்கும் என்றார்.
நான் மகிழ்ச்சி சார் எனப் புறப்பட்டேன். அவர் வெளியே வந்து உங்க பெயர் என்றார். நான் ராஜா, பதிப்பகத்தின் ஆபீஸ் பாய் என்றேன். அவர் கடற்கரய்க்கு வாழ்த்து சொல்லுங்கள் என்றார்.
ஒரு நூல் வேண்டி தொலைபேசி செய்து, கடைக்காரர் எடுக்கவில்லை என்றால் போடா புடுங்கி என நானே சும்மா இருந்துவிடுவேன்.
கொடுத்தால் காசு. இல்லை என்றால் நமக்கு என்ன நட்டம் என நினைப்பதுதான் இயல்பு.
ஆனால் இப்படி வெறிப்பிடித்த வாசகனாக ஒரு நாளும் இருந்ததில்லை.
ஒருநூல் என்ன என்ன மாதிரியான அனுபவங்களை எல்லாம் கொடுக்கிறது. யோசித்தால் இதுவே என் வாழ்வில் பெற்ற பெரும் பரிசு எனத் தோன்றுகிறது. #வாழ்க பாரதி