ஃப்ரான்ஸ் காஃப்காவும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸும்/எம்.டி.முத்துக்குமாரசாமி


——-
மார்க்வெஸின் நாவல்களில் காஃப்காவின் செல்வாக்கு மிகவும் அதிகம் ஆனால் அதை மார்க்வெஸின் விசேஷமான நடையால் உடனடியாகக் கண்டுபிடிக்க இயலாது. தனிமை, பிறப்பும் இறப்பும், இயற்கை-சகமனிதர்- கடவுள்- தன்னிலை— ஆகியவற்றிலிருந்து அந்நியமாதல், தனி நபர் ஆன்மிகத்துக்கான தேடல், தனிமனித சுதந்திரம் என்றால் என்ன என்ற கேள்வி, காதலின் அருமை, சரித்திரத்தின் அபத்தம் -என்பதாகிய இருத்தலியல் பிரச்சனைகள் இருவருக்குமே பொதுவானவை. காஃப்காவின் எழுத்து முறை நுட்பமானது; அருவமானது; நீதியற்ற உலகில் தன்னுடைய உணர்கொம்புகள் அடித்து நொறுக்கப்படுவதை தான் எப்பொழுதும் ஏதேனும் ஒரு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை மையமாக வைத்து கதை சொல்வது; அடங்கிய தொனியாலானது. மார்க்வெஸின் நடை அலங்காரமானது (News of a Kidnapping- என்ற அபுனைவில் மட்டும் மார்க்வெஸின் நடை வணிகப் பத்திரிக்கைகளின் நடை போல எளிமையாக இருக்கிறது), அதிசய சம்பவங்களாலும் ஆர்ப்பாட்ட உணர்ச்சிகளாலும் பீடிக்கப்படுவது; தூலமான சம்பவங்களின் வழி கதை சொல்வது, உச்ச ஸ்தாயி தொனியாலானது. காஃப்கா ஒரு அருவ ஓவியரென்றால் மார்க்வெஸ் ஒரு இம்ப்ரஷனிச ஓவியர். என்றாலும் காஃப்காவின் ஒற்றைக் கதையே மார்க்வெஸின் நடையையும் உலகப்பார்வையையும் தீர்மானிப்பதாக இருந்தது. பல பேட்டிகளில் மார்க்வெஸ் தான் காஃப்காவின் ‘உருமாற்றம்’ சிறுகதையை முதன் முதலாக வாசித்தபோது அதில் கிரெகர் சாம்சா ஒரு பூச்சியாக உருமாறுவதைப் படித்து ஒரு சிலிர்ப்புக்கு (சுந்தர ராமசாமி புதுமைப்பித்தனைப் படித்து ஒரு சிலிர்ப்புக்கு ஆளானது போல) உள்ளானதாகவும், இப்படியெல்லாம் எழுதலாம் என்றால் நான் எப்போதோ இப்படியெல்லாம் கதைகள் எழுதியிருப்பேனே என்று சிறுகதைகள் எழுத ஆரம்பித்ததாகவும் சொல்லியிருக்கிறார். காஃப்கா எழுதிய ஒரே மேஜிக்கல் ரியலிச வரி உண்டென்றால் அது ‘உருமாற்றம்’ கதையின் ஆரம்ப வரிதான்.
காஃப்காவிய அருவ அபத்தம் மார்க்வெஸிடம் சம்பவங்களின் வழி நடந்தேறுகிறது. மார்க்வெஸின் அனைத்து நாவல்களையும் வைத்து இதை விளக்கலாம் என்றாலும் ‘காலரா சமய காதல்’ நாவலில் இதற்கான உதாரண காஃப்காவிய அபத்த சம்பவங்கள் பல இருக்கின்றன. நாவலில் ஃப்ளொரெண்டினோ அரிசாவும் ஃபெர்மினா டாசாவும் பதின்பருவ காதலர்களாக இருக்கிறார்கள். கடிதங்கள் எழுதியும் சந்தித்துமாய் காதல் உனமத்தத்தை அடைகிறது. ஃபெர்மினாவின் தந்தை காதலர்களைப் பிரிப்பதற்காகக் அவளை வேறு ஊருக்கே அனுப்பிவிடுகிறார். அப்படி பலவந்தமாய் பிரிக்கப்படுகையில் ஃபெர்மினா தன் நீண்ட கூந்தல் சடையை வெட்டி தன் காதல் பரிசாக அரிசாவுக்கு அனுப்புகிறாள். அரிசா ஃபெர்மினாவுக்க தன் காதல் கடிதங்களை தந்தி மூலம் அனுப்பிக்கொண்டே இருக்கிறான். பல வருடங்களுக்குப் பிறகு ஊருக்குத் திரும்பும் ஃபெர்மினாவைப் பார்க்க நகரச் சந்தைக்கு வந்து அவளை எதிர்பாரா மகிழ்ச்சியில் ஆழ்த்த விரும்பும் அரிசா அவளை தூரத்திலிருந்து கவனிக்கிறான். நாவலின் மத்தியபகுதியில் வரும் அந்த சந்தைக் காட்சி வருணனை மார்க்வெஸின் நடையில் மிகவும் பிரமிப்பூட்டுவது; அழகானது. ஃபெர்மினா தான் ஏதோ ஏற்கனவே மணமானவள் போலவும் தன் கை பற்றி ஃப்ளோரெண்டினொ அரிசா அருகே இருப்பது போலவும் மிதந்து நடந்து செல்கிறாள். ஃபெர்மினா அவளை நெருங்கி அவள் காதுகளில் அவர்கள் இருவருமே அறிந்த அவளின் செல்லப்பெயரால் அழைக்கிறான். திரும்பிப் பார்க்கும் ஃபெர்மினா அடுத்த நொடியே அரிசாவை ‘நான் உன்னைக் காதலிக்கவில்லை’ என நிராகரிக்கிறாள்.
அதன் பிறகு தன் கூந்தல் சடை உட்பட தான் அரிசாவுக்குக் கொடுத்த அத்தனை பரிசுப்பொருள்களையும் திரும்ப வாங்கிக்கொள்ளும் ஃபெர்மினா உடனடியாகவே டாக்டர் ஜுவனெல் உர்பினோவை மணமுடித்துவிடுகிறாள். மனமுறிவுக்கு ஆளாகும் ஃப்ளோரெண்டினோ அரிசா பெண் பித்தனாகிறான்.
ஃப்ளோரெண்டினோ அரிசா ஃபெர்மினாவுக்காக முப்பத்தாறு வருடங்கள் காத்திருக்கிறான். ஃப்ர்மினாவின் கணவன் உர்பினோ மாமரத்தில் ஏறும்போது தவறி விழுந்து இறந்துப்போகிறான். ஃபெர்மினோ துக்கம் அனுஷ்டிக்கும் நாட்களில் ஃப்ளொரெண்டினோ டாசா அவளை அணுகி தன்னை மணமுடிக்கக் கோருகிறான்.
மார்கவெஸின் நாவல், ‘காலரா கால காதல்’ முப்பத்தாறு வருடங்கள், எத்தனையோ நாட்கள் எத்தனையோ மணி நேரங்கள், எத்தனையோ நிமிடங்கள் காத்திருத்தலுக்குப் பிறகு ஃப்ளொரெண்டினோ அரிசா ஃபெர்மினோ டாசாவுக்கு தன் காதலை மீண்டும் சொன்னான் என்ற வரியோடு ஆரம்பிக்கிறது. பல தயக்கங்களுக்குப் பிறகு மூதாட்டி ஃபெர்மினா கிழவர் ஃப்ளொரெண்டினோ அரிசாவின் காதலை ஏற்று அவனை மணமுடித்துக்கொள்கிறாள். இரு முதியவர்கள் தங்கள் சுருங்கிய தோல்களோடு வற்றிய எலும்புகள் உரச, ஒரு கப்பலொன்றில் உறவு கொள்வதோடு நாவல் முடிகிறது.
காஃப்கா எழுதியிருந்தால் முடிவு வேறுபடியாக இருந்திருக்கும் என்பதைத் தவிர மார்க்வெஸின் சம்பவங்களில் பெரிய வித்தியாசமில்லை.
மார்க்வெஸின் நாவல்கள் தமிழுக்கு அறிமுகமாகி முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டபின்பு இப்போது பின்னோக்கிப் பார்க்கும் நான் காப்ஃகாவின் செல்வாக்கு மார்க்வெஸின் மேல் இருந்தது நமக்கு அறிமுக நிலையிலேயே தெரிய வந்திருந்திருந்தால் தமிழிலக்கியத்தின் போக்கு வேறு திசையில் சென்றிருக்குமோ என வியக்கிறேன்.