
முன்னாள் காதலியை கடைவீதியில் சந்தித்தேன்
பேரனோடு வந்திருந்தாள்.
பார்த்தமாத்திரத்தில் உள்ளே பொங்கி வழிய…
வாலிபம் ஒன்றும் ஊஞ்சலாடவில்லை.
ஆரம்பவிசாரிப்புக்குப்பிறகு…அவரவருக்கு உண்டான
நோய்கள்…சாப்பிடும் மாத்திரைகளை பரிமாறிக்கொண்டோம்.
சில மருத்துவர்களை பரிந்துரைப்பது இருவருக்கும் நடந்தது.
இந்த உரையாடல்கள் சிறு துளிகூட அவளுடன் வந்த சிறுவனுக்கு…
ரசிப்பதற்கானது இல்லை.
அவன் அருகிலுள்ள கடைப் பொம்மைகளைநோட்டம்
விட்டுக்கொண்டிருந்ததான்.
எங்கள் மலரும் நினைவுகளைவிட மருத்துவக்குறிப்புக்களே
அதிகம் பரிமாறப்பட்டன.
இருவரும் விடைபெற்றுக்கொண்டபின்..அவளுக்கான நோய்ப்பட்டியலை உள்வாங்கும்போது அப்பாடா…தப்பித்தோம்…
என்ற ஆசுவாசமே மனதில்
ஓடியது.
அவளுக்கும் அப்படித்தான்
இருந்திருக்கும்.
