விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 9வது கூட்டம் /அழகியசிங்கர்

சிறப்பாக நடந்தது. 14ஆம்தேதி சனிக்கிழமை கூட்டம் நடந்தது. முன்னதாகவே பாரதிமணி பேசுவதற்கு வந்துவிட்டார். ஒரு கூட்டம் என்பது இப்படித்தான் நடக்க வேண்டும் என்று எப்போதும் தோன்றும். பேசுபவருக்கும் கேட்பவருக்கும் எந்த வித்தியாசமும் இருக்கக் கூடாது. இக் கூட்டத்தை ஆரம்பத்திலிருந்து ஒரு கலந்துரையாடல் மாதிரி நடத்தலாம் என்று பாரதிமணி குறிப்பிட்டார். அப்படித்தான் இக் கூட்டம் நடந்தது. பார்வதிபுரம் என்ற கிராமத்திலிருந்து எப்படி தில்லி வரைச்சென்றார் என்பதை சுவாரசியமான தகவல்களுடன் பேசினார். பேசும்போது அவர் என்ன என்ன பேசிக்கொண்டே போகிறார் என்பது மறந்து அவர் பேச்சு திசை மாறிப் போயிற்று.

தில்லியில் வெங்கட்சாமிநாதனுடன் பாரதிமணியை ஒரு முறை சந்திததிருக்கிறேன் என்று ஞாபகத்தில் இருக்கிறது. அவ்வளவு அனுபவங்களை கட்டுரைகளாக எழுதி இருக்கிறார். அவற்றை பல நாவல்களாக எழுதி இருக்கலாம். அல்லது சிறுகதைகளாக எழுதி இருக்கலாம்.

அதிகமாக சினிமாப் படங்களில் நடித்திருந்தாலும், தன்னை நாடக நடிகர் என்று சொல்வதில்தான் பெருமைப் படுகிறார். சினிமாவில் தலையை மட்டும் காட்டியிருக்கிறேன் என்கிறார்.

தன்னை எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதை அவர் விரும்பவில்லை. புள்ளிகள், கோடுகள், கோலங்கள் என்ற அவருடைய கட்டுரைத் தொகுதியைப் படித்தால, அவ்வளவு பிரமாதமா பல விஷயங்களை யாராலும் எழுதியிருக்க முடியாது என்றே தோன்றுகிறது.அந்தக் கட்டுரைத் தொகுதியைப் படிக்கும்போது அதில் பாமரத்தனம் இருபபதாக எனக்குத் தோன்றவிலலை.

நாங்கள் நடத்திய கூட்டத்தில் இது வித்தியாசமான கூட்டம்தான். இதில் சந்தேகம் இல்லை.