பூதம்/தங்கேஸ்

எப்படியாவது வயசுக்காலங்களில்
நம்மை ஒரு பூதம்
பிடித்துக்கொள்கிறது

பிறகு வாழ்க்கை முழுவதும்
அதை தோளில் ஏற்றிக்கொண்டு
சுற்றித் திரிவதே
நமது பிழைப்பாக இருக்கிறது

எனக்கு நேசிக்கத் தெரியாது
விட்டு விடு என்றால்
கெக்கலிட்டு சிரித்தபடி
நேசத்தை விட பெரிது உலகத்தில்

பிறிதொன்றில்லை என்கிறது

கருணையைப் பற்றி சொன்னால்
நீ வேறு கிரகத்தில் இருக்க வேண்டிய
ஆள்தான் என்று கிண்டல்

நான் ஒரு முறை அதை
தழுவிக் கொள்ள முடியாது என்று
சொன்ன போது
என் நிழலை திருடிக் கொண்டு சென்றுவிட்டது

நான் பட்டுப்பூச்சியைப் போல
எடையற்றவனாகி
துயருற்றேன்
கடவுள் என் கனவில் வந்து
உலக உருண்டையை
பரிசளித்தார்

அதுவோ வெறிகொண்ட மிருகம் போல
என் கரங்களில் சுழன்றாடியது
என்னை மன்னிக்க வேண்டி
மனதார வேண்டினேன்
அது என் மனதின் நல்ல பதிவை மட்டும்
கொஞ்சம் கிள்ளி எடுத்துக்கொண்டு
சென்றது

இப்போது வள்ளலார் ஞாபகத்திற்கு
வருவதேயில்லை
பிறகு எப்படி வாடிய பயிர் வரும்?

பிறகு எல்லோரையும் போலவே
என் தோளிலும் அந்த குரங்கு குட்டி
தொற்றிக்கொண்டேயிருக்கிறது

புத்தர் என்றால் காளானும்
கர்த்தர் என்றால் சிலுவையும் தான்
ஞாபகத்திற்கு வருகின்றன

இப்போதெல்லாம்
வானில் பறக்கும் சிறு பறவையை பார்த்தாலும்
அவ்வளவு பொறாமையாய் இருக்கிறது