
17/02/23 அன்று விருட்சம் கவியரங்கில் நான் வாசித்த கவிதை.
யாரும் பார்க்கவில்லை;
எதிர்பார்க்கவில்லை
நிலமெனும் நல்லாள் நீள் மூச்செறிந்தாள்
வான் தொட்ட வசிப்பிடங்கள்
மண்தொட்டுப் பார்த்தன
அவலங்கள் அவளால் நிகழவில்லை ஆன்றோரே!
மீறல்கள், விதி மீறல்கள் கொடுத்த
அன்புப் பரிசுகள் அவை
காவு கொண்டது உயிர்களை மட்டுமா?
இணைந்திருந்த கனவுக்
கலைகளையும் அல்லவா?
இப்படி நிகழ்ந்தது,
இப்படி நிகழ்ந்தது என்று
தத்துவம் சொன்ன தயீப் முன்னின்று
நிகழ்த்திய மீறல்கள்
காலனெனும் தயாளனுக்கு
அவர் அளித்த விருந்துகள்
ஓலமிட்டு ஓலமிட்டு
உலகம் ஓய்ந்து போனது
ஞாலம் முழுதும் ஓடி வந்தும்
சில உயிர்கள் தான் மீந்தது
யாரைப் பறிகொடுத்தாரோ,
யாருடன் இனி வாழ்வாரோ
யாமத்தில் துயில் கொள்ள
அவர் நெஞ்சு பதைத்திடுமோ?
பூகோள யாத்திரையில்
இடிபாடுகளின் இடர் நடுவே
பெருமூச்சு நெடுமூச்சினின்றும் மீண்டு,
வாழட்டும் உயிர்கள்
மீண்டும் வாழட்டும் உயிர்கள்.
