அன்னையைப் போல்.! /ஆர்க்கே!

அன்னையே அறிவாள்
என்னை, தன்னை
தன்னுள் என்னை.

உறங்கி விழிக்காமல்
ஒருசேரப் போய்ச்சேர்ந்த
அன்றைய
அந்த நீளத்துயில்
எப்போதும் என்
மீளாத்துயர்.

இருவிரல்களால்
கன்னம் பிடித்து
தலைவாரிய தருணம்
அப்போது
சற்றே அசைந்ததற்கு
வலிக்காமல்
குட்டு வைத்த
அந்த வலக்கை.

பசிக்குது தட்டுப்போடேன்
என்றபோது
நீயாடா கேக்கற!
இருடா இருடா என
வாணலியில் தாளிதத்தை
பரபரப்பாய் வறுத்த நொடி

என் வாழ்க்கை விட்டு
பறந்து போய்
பல வருடம் ஆனபின்பும்
என் நிம்மதியுறக்கமாய்
நீ கவித்துவைத்த புடவையின்
கதகதப்பு.

சில உறவுகளைக் குறிப்பிட்டு
அவர்கள் காலம்வரை
நீ தான் அவர்களின் காவலன்
எனக் கரம்பிடித்து
கேட்ட வாக்கு.

நீ சிரி . கோபம் கொள்.
தேவைப்படின் பொய்யே சொல்.

ஆனால்
என் ராமு என்றால்
ஒரு நாளும் நீ அழக்கூடாது
என்பாய்.
நீ இறந்த ஒருநாள் வரை
அதைக் காத்தேன்–
மறுநாள் மதியம்வரை
சிதையில் உன் மேனியில்
நெருப்பிடுகையில் கதறினேன்.

அந்தக் கண்ணீரின் ஈரமும்
தொடர்ச்சியும்
இப்போதும் வரளவில்லை
என்னை வாழவைக்கிற
ஒற்றைத் தெய்வமே!
ஏழேழு பிறவிக்கும்
என்னையுன் கருவறைக்குள்
வாழ விடு!