
நேற்று காலை துஞ்சன் இலக்கிய விழாவில் பேசிவிட்டு, மதியத்துக்கு மேல், குருவாயூர் கிளம்பினேன். திரூரில் இருந்து 49 கி.மீ. ஒன்றே கால் மணி நேரத்தில் குருவாயூர் போய்ச் சேர்ந்தேன்.
சின்ன வயதில் இருந்து எங்கள் வீட்டில் குருவாயூர் பற்றிய பேச்சு உண்டு. துலாபாரம் கொடுப்பதாக வேண்டிக்கொண்டதாக என் அம்மா மிகச் சின்ன வயதில் சொன்னது லேசாக ஞாபகம் உண்டு.
மாலை 4:15க்குப் போய்ச் சேர்ந்தேன். திருப்பதி மாதிரி இங்கே பல்வேறு வரிசைகளில் பக்தர்கள் அமர வைக்கப்பட்டு இருந்தனர். நான் வரிசையில் அமர்ந்தபோது 4:30. அதேநேரம் நடை திறக்கப்படும், பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று படித்திருந்தேன். ஆனால், திறக்கவில்லை. மாலை ஐந்து மணி வாக்கில் தான் முதல் இரண்டு வரிசைகளைத் திறந்துவிட்டனர்.
என் முறை வரும்போது, மாலை 5:50.
கோயிலின் வாயில் தாண்டி, உள்ளே நுழைய, சின்னதாக படி மாதிரி ஏறி இறங்கும்படி ஓர் அமைப்பு. துளித்துளியாக நகர்ந்து நகர்ந்து முன்னே போக, எல்லோர் வாயிலும் ஏதோ ஒரு மந்திரம் ஒலித்துக்கொண்டு இருந்தது.
அடுத்த வாயிலை நெருங்க, மூன்று பேர் கொண்ட வரிசை, இருவர் நகரும் வரிசையாக மாறியது. அந்தப் படியைத் தாண்டியதும் தூரத்தில், குட்டி கிருஷ்ணர் தெரிந்தார். சின்ன வளைவு வளைந்து, சன்னிதியின் அருகே போக இரண்டு, மூன்று நிமிடங்கள்.
ஒருசில நொடிகள்…அதிகம் போனால், 15, 20 நொடிகள். அபூர்வம். என் அம்மாவோடு வந்து பார்த்திருக்க வேண்டிய கிருஷ்ணர், என் குடும்பத்தினரோடு வந்து பார்த்திருக்க வேண்டிய கிருஷ்ணர், அங்கே நின்றிருந்தார். சந்தக் காப்பு. உள்ளே தீபங்களின் ஒளியில் சற்றே குழந்தைத் தனத்துடன், கம்பீரத்துடன், எழிலுடன் நின்றிருந்தார்.
மனம் அபாரமான பரவசத்துக்குப் போனது. என் கண்கள் அந்த அபூர்வ காட்சியைச் சிந்தையில் சேகரித்துக்கொண்டது. தேக்கிக்கொண்டது. தீட்டிக்கொண்டது.
அந்த இடமே வேறு மாதிரி இருந்தது. ‘தெய்வ சாந்நித்தியம்’ என்ற சொற்றொடருக்கான பொருளை அங்கே உணர்ந்துகொண்டேன். பல ஆயிரம் ஆண்டுகளாக, மந்திரங்களால் ஜெபிக்கப்பட்டு, எளியவர்களின் பக்தியால் ஆராதிக்கப்பட்டு, ஒருவித வாசனை அங்கே நிறைந்திருந்தது.
ஒருசில நொடிகள் தான். நகரச் சொன்னவுடன், நகர்ந்தேன். கண்ணுக்குள்ளும் சிந்தைக்குள்ளும் குருவாயூரப்பன் குடிகொண்டார்.
ஏதோ ஓர் இலக்கியக் கூட்டத்துக்குப் போகிறோம் என்று கிளம்பி வந்தவனுக்கு, இப்படிப்பட்ட ஓர் காட்சி காத்திருப்பது தெரியாமல் போய்விட்டது.
நானாக, குருவாயூர் வரவில்லை. குருவாயூரப்பன் என்னை தன்னிடம் அழைத்தான். தன் எழிலை அனுபவிக்க, என்னை அவன் தூண்டினான்.
என்னே அவன் மகிமை!
