கணநேர வித்தியாசம்/லக்ஷ்மி மணிவண்ணன்

1

சிலையாக இருந்தால்
கற்பனை செய்யமுடியும்
நீயோ சிலையிலிருந்து வெளிவந்து
ஆளாக நிற்கிறாய்
கற்பனைகளை முழுவதுமாக இழந்து இழந்து
முற்றிலும் கைவிடச் சொல்லிய இடத்தில்
நீயாக இருக்கிறாய்
இதற்கு
சிலையாகவே இருந்திருக்கலாம்
இந்த கற்சிலை

2

நானும் சிலையாக இருந்தேன் கற்சிலையாக
கற்சிலையிலிருந்து மற்றொரு
கற்சிலையாகும் தூரம்
இந்த வாழ்க்கையாகிறது

3

முதலில் நீயும் கற்சிலையாகவே இருக்கிறாய் முழுமையாக
முடிவில் மீண்டும் கற்சிலையாவாய் முழுமையாக

4

நானொரு சிந்தனையிலிருந்து வெளிவந்தேன்
நானொரு எண்ணத்திலிருந்து வெளிவந்தேன்
அவையெல்லாம் அதற்கு முன்னர் கற்சிலையாக இருந்தன

5

நானிருந்த கற்சிலைக்குப் பக்கத்தில்தான் நீயிருந்தாய்
மற்றொரு கற்சிலையாக
உன்னைக் கண்டுகொண்டதும் நான் ஆளானேன்
அதனைக் கண்டதும் நீ ஆளானாய்
சற்றைக்கு முன்னே நான்
சற்றைக்கு பின்னே நீ
கணநேர வித்தியாசம்

பிறந்ததோ ஒருமித்த
இரண்டு
வேறு வேறு
மிருகங்கள்